தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 19, 2013

என் உயிர் நண்பர் கபாலி!



கபாலியை நான் முதல் முதல் சந்தித்தது 1964 ஆம் ஆண்டில்தான்.

முதல் பார்வையிலேயே அவர் என்னை அவர்பால் ஈர்த்து விட்டார்.

அவர் மனைவி கற்பகமும் அவருக்கேறவர்தான்.

சாந்தமான புன்னகை தவழும் முகம்;அருள் பொழியும் கண்கள்.

வாழ்வில் முதல் முறையாக வீட்டை விட்டுத் தனியாக விடுதியில் தங்கிப் படிக்கும் எனக்கு உற்ற துணைவர்களாக,நல்ல நண்பர்களாக அமைந்தனர் அந்தத் தம்பதி.

என் இரண்டாண்டு கால விடுதி வாழ்க்கையில் வாரம் ஒரு முறையாவது அவர்களைச் சந்திக்காமல் இருந்ததில்லை.

முந்தைய சந்திப்புக்குப் பின் இடைப்பட்ட காலத்தில் எனக்கு நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

அவர்கள் மாறாத புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பர்.

என் பிரச்சினைகளை அவர்கள் முன் கொட்டுவேன்.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மனம் அமைதி பெறும்;பிரச்சினை தீர்க்க வழி கிடைக்கும்.

அவர்கள் வாய்திறந்து பேச வேண்டியதே இல்லை.

அவர்கள் முன் பல இனிய நிகழ்வுகள்;அந்நிகழ்வுகளின் அழிக்க முடியாத நினைவுகள் இன்று வரை.

சில நேரங்களில் என மன அலைபேசியில் கபாலி அழைப்பார். விரைவேன்; பார்ப்பேன் ;மகிழ்வேன்.

அதைத் தொடர்ந்து ஏதாகிலும் பிரச்சினை வரும்;ஆனால் வந்த வேகத்தில் மறையும்!

காலவேகத்தில் முதுமையின் கோடுகள் என் உடலில் விழுந்து விட்டன;

ஆனால் கபாலியும் கற்பகமும் இன்னும் அதே இளமையுடன் இருக்கின்றனர்; என்றும் இருப்பர்!

சென்னையிலேயே இருந்தும் கூட அடிக்கடி அவர்களைச் சென்று பார்க்க முடிவதில்லை,

ஆனால் என் மனத்தில் அவர்கள் இருக்கிறார்கள்,என்னை வழி நடத்துகி றார்கள்.

நண்பனாய்,வழிகாட்டியாய்,நல்லாசிரியனாய்…அனைத்துக்கும் மேல் என் தெய்வமாய் இருக்கிறார்கள்.

கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்வரா போற்றி!




22 கருத்துகள்:

  1. கபாலி என்றதும் நான் அரசியல்வாதி கபாலி அவர்கள் பற்றி தான் சொல்லப்போகிறீர்களோ என நினைத்தேன்.ஏழாவது வரியைப் படித்ததும் தெரிந்துகொண்டேன் வழக்கம்போல் ஏமாற்றுகிறீர்கள் என்று. இருப்பினும் அருள்மிகு கபாலீஸ்வரரை உரிமையாய் கபாலி என்று அழைத்தது நீங்களாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் உங்களுக்கு அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ட நாள் முதலாய்க் காதல் கொண்டேன் கபாலியிடம்!
      நன்ரி சார்

      நீக்கு
  2. ஓ அந்த கபாலியைத்தானே! அவரை போய் பார்க்கனும்ன்னு தேவை இல்ல. மனசுல நினைச்சுண்டாலே போதுமே

    பதிலளிநீக்கு
  3. அருமையான டுவிஸ்ட்
    மிகவும் ரசித்தோம்
    நாங்களும் கபாலியின்
    தொண்டரடிப்பொடிகள்தான்
    மனம் கவர்ந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் டிவிஸ்ட்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நானும் என்னமோ நினைத்தேன்... அசத்திட்டீங்க ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. கபாலீஸ்வரர் அருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. தலைவரே நான் திரும்பவும் சொல்றேன் நீங்க இங்க எழுத வேண்டிய ஆளே இல்ல :-) உலகை உய்விக்க வந்த அவதாரம் தான் நமக்கு முக்கியம்... கபாலி போல் நீர் ஒரு அவதாரம் ஹா ஹா ஹா :-)

    பதிலளிநீக்கு
  8. நானும் மந்தைவேளிக்காரன் தான். சென்னைக்கு வரும்போது எல்லாம் கபாலி கோயில் சென்றால் தான் மனநிறைவு.

    பதிலளிநீக்கு
  9. நட்புகளின் மனம் நிறைந்த நினைவில்/

    பதிலளிநீக்கு
  10. முதலிரண்டு பாராக்களிலேயே நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். நெகிழ்ச்சியாகச் சொன்னீர்கள் உங்களின் பந்தத்தை!

    பதிலளிநீக்கு
  11. இந்த கூகுல் இருக்கே அது பொண்டாட்டியைவிட ரொம்ப மோசம் ஐயா. குறுக்கு குறுக்கே ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கும், நாம் சொல்லவந்ததை முடிப்பதற்கு முன்னால். ஆனால் "அவர' பாருங்க! நாம என்ன சொன்னாலும் குறுக்கிடாமல் எல்லாத்தையும் கேட்டுப்பார். ஏன், திட்டினாலும் ஒண்ணும் சொல்லமாட்டார். அதே அன்பு அதே புன்னகை அதே கருணை!
    அதனால்தான் பலருக்கு "அவர்" நீங்கள் சொல்வதுபோல
    //நண்பனாய்,வழிகாட்டியாய்,நல்லாசிரியனாய்…அனைத்துக்கும் மேல் என் தெய்வமாய் இருக்கிறார்.//

    பதிலளிநீக்கு
  12. கபாலியும் கற்பகமும் இன்னும் அதே இளமையுடன் இருக்கின்றனர்; என்றும் இருப்பர்!

    கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்வரா போற்றி!

    மனக்கோவில் கொண்ட கபாலீஸ்வரா போற்றி ! போற்றி !!

    பதிலளிநீக்கு
  13. " பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட ..." கற்பகாம்பாள், கபாலீஸ்வரர் அடி பணிவோம்.

    பதிலளிநீக்கு