தொடரும் தோழர்கள்

புதன், பிப்ரவரி 15, 2012

ஒரு வங்கிக் காசாளரும்,வாடிக்கையாளரும்!

(நேற்றைய பதிவின் நீட்சி)

ஒரு வங்கியின் கிளை.

உணவு இடைவேளைக்கு இன்னும் ஐந்து மணித்துளிகளே பாக்கி உள்ளன.

தனது கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் காசாளர்,தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார், சாப்பிடப்போவதற்காக.

அன்று காலை அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை.ஒரு சின்ன விஷயத்தில் தொடங்கி வெடித்து விட்டது.

மனைவியிடம் கோபித்துக்கொண்டு,”உன் சோத்தை நீயே கொட்டிக்கோ” என்று இரைந்து விட்டு,அலுவலகம்  வந்து விட்டார்.

நேரமாகி விட்ட படியால் எங்கும் சாப்பிடவுமில்லை.

காலையிலிருந்து மூன்று குழம்பி குடித்து வயிறே குழம்பிப் போயிருந்தது.

இப்போது உணவகம் சென்று ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

இடைவேளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

(இங்கு ஷாட்டைக் கட் செய்கிறோம்----அடுத்த ஷாட்--)

அந்தக் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர்.அன்றாட உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மொத்தக் கொள்முதலாளர்.

ஒரு தவணை உண்டியலுக்குப்( usance bill) பணம் கட்ட இன்று கடைசி நாள்.

இன்று கட்டவில்லை என்றால் அவரது முகவாண்மை ரத்தாகி விடும்.
பெரிய இழப்பாகி விடும்.

காலை முதல் அலைந்து திரிந்து தேவையான பணத்தைச் சேர்த்து விட்டார்.
இப்போது வங்கியில் பணம் செலுத்த வேண்டும்.

(ஷாட் கட்-அடுத்த ஷாட்!)

அவர் வங்கியில் நுழையும்போது உணவு இடை வேளைக்கு 5 மணித் துளிகளே பாக்கி!

காசாளரின் கூண்டை அடைந்து பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.10,20 50 100 என எல்லா விதமான நோட்டுக்களும் இருக்கின்றன.

காசாளர் கோபமாகச் சொல்கிறார்”.மூடும் நேரம்.பில்லுக்கெல்லாம் சின்ன நோட்டெல்லாம் வாங்க முடியாது.500,1000 இருந்தால் கொடுங்கள்.வாங்கிக் கொள்கிறேன்.”அவருக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது.

வாடிக்கையாளர் காலை முதல் மிகச் சிரமப்பட்டுப் பணத்தைச் சேர்த்திருக்கிறார் .இன்று கட்டா விட்டால் வியாபாரமே போய்விடும் எனும் நிலை.

“அதெப்படி  சின்ன நோட்டு வாங்க மாட்டேன்னு நீங்க சொல்ல முடியும்.நான் நேரம் முடியுமுன் வந்து விட்டேன்.நீங்க வாங்கித்தான் ஆகணும்” எனச் சொல்கிறார்.

காசாளர்  சொல்கிறார்” நான் சொன்னாச் சொன்னதுதான்.வாங்க முடியாது”
வார்த்தை தடிக்கிறது.

காசாளர்  முகப்பை மூடிவிட்டு உணவுக்குப் புறப்படுகிறார்.

வாடிக்கையாளர் மேலாளரைப் பார்த்துப் புகார் செய்யப் போகிறார்.

முடிவு எப்படியிருக்கும்?

இதைத் தவிர்த்திருக்க முடியாதா?

முடியும். எப்படி?

காசாளர்;”சார்.சாப்பிடும் நேரம் வந்து விட்டது.இதை வாங்கினால் எண்ணி முடிக்க நேரமாகும்.கொஞ்சம் காத்திருங்கள்.நான் சாப்பிட்டு விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்.  நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையென்றால் வாருங்களேன் இருவரும் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.”
(அல்லது)

வாடிக்கையாளர்: காசாளரை நெருங்கியதும்”சாரி,சார் பணம் சேகரிக்க நேரமாகி விட்டது.கடைசி நாள்.நீங்கள் சோர்ந்திருக்கிறீர்கள் .நீங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். இல்லையெனில் இருவரும் சேர்ந்து வெளியில் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்”

முடியாதா?

முடியும்.

நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்!


செவ்வாய், பிப்ரவரி 14, 2012

தனி மனித உறவுகள்!

இந்தப் பதிவை நேற்றைய பதிவின் நீட்சி எனக் கொள்ளலாம்.
நேற்று,தன் பிரச்சினையே பெரிது என நினைக்கும் மனித மனம் பற்றிச் சொல்லியிருந்தேன்.

இது தொடர்பான ஆண்டன் செகாவின் குட்டிக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

குளிர் நடுக்கும் ஒரு கனமான இரவு..

ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.

கட்டிலின் மேல் ஒரு சிறுவன் துவண்டு படுத்திருக்கிறான்.

அருகில் அமர்ந்து அவனைக் கவனித்துக் கொண்டு,அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டும் இருக்கும் ஒரு மனிதர்.அவன் தந்தை.அவர் ஒரு மருத்துவரும் கூட.

அப்போது கதவு தட்டும் ஓசை.

திறந்து பார்த்தால் ஒரு இளைஞன் பதற்றத்துடன் நிற்கிறான்.

“ஐயா!என் மனைவி தாங்கமுடியாத தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். மாத்திரைகள்கொடுத்தும் பயனில்லை.தயவு செய்து உடனே வாருங்கள்”

மருத்துவர் சொல்கிறார் “என் மகன் மிக உடல் நலமின்றி இருக்கிறான்.அவனை விட்டு விட்டு என்னால் வர இயலாது.”

இளைஞன் அவர் காலில் விழுகிறான்.”நீங்கள் எனக்குக் கடவுள் மாதிரி.நானே திரும்பக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்”

தயக்கத்துடன் புறப்படுகிறார்.

அவன் வீட்டை அடைந்ததும்,அவரை வரவேற்பரையில் அமரச் செய்து விட்டு மேலே செல்கிறான்.நீண்ட நேரம் கழித்தும் அவன் திரும்ப வரவில்லை.

மருத்துவர் மேலே சென்று பார்க்கிறார்.

அவன் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்.அவன அருகில் ஒரு காகிதம் கிடக்கிறது.

அதை எடுத்துப் பார்க்கிறார்.

”நான் என் காதலனுடன் போகிறேன்—கவிதா”என்ற ஒரே வரி.

இளைஞனின்  அழுகை அதிகமாகிறது”என் மனைவி,என் மனைவி”

மருத்துவருக்குக் கோபம் வருகிறது.

இதற்காகவா என் பையனைக் கவனிக்காமல் இவனுடன் வரச்செய்தான்.இவன் இருப்பதைப் பார்த்தால் என்னைத் திரும்பக் கொண்டு போய் விடமாட்டான் எனத் தோன்றுகிறதே .என்ன செய்வேன்.என் மகனுக்கு என்ன ஆச்சோ.’என் மகன்,என் மகன்”எனப் புலம்புகிறார்.

இளைஞன்”என் மனைவி,என் மனைவி”

மருத்துவர்”என் மகன்,என் மகன்’
 ..............    ................
...............   ..................

கதை இங்கு முடிகிறது.

தனி மனித உறவுகளில்  பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.


சேவை நிறுவனங்களில் ஊழியர்-வாடிக்கையாளர் உரசல் என்பது சகஜம்

உதாரணத்துக்கு ஒரு வங்கியை எடுத்துகொள்வோம்.

ஒரு ஊழியருக்கும்  வாடிக்கையாளருக்கும் எவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது?

நாளை பார்க்கலாம். 

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே க்ளிக் செய்யவும்

காதல் வாழ்க!

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்.

இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சியன்றோ

நாடகத்திற் காவியத்திற் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றா மென்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க               (பாரதி)

ஆம் பாரதி.கொல்பர்களுக்குப் புரிவதில்லை அப் பிரிவின் வலி

ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாத
அந்த ரணத்தின் வேதனை.

காதலில் தோற்ற நெஞ்சங்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் தோல்வி என்று நான் சொல்ல மாட்டேன்.

அவர்கள் இணையாதிருக்கலாம்.

ஆனால்   உண்மைக் காதல் சாவதில்லை.

ரணமாய்,வலியாய்,வேதனையாய்,நினைவுகளாய்
வாழ்கிறது.

வாழும், காலம் கடந்தும்

காதல் வாழ்க!

காதலர் தின வாழ்த்துகள்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே க்ளிக்கவும்

திங்கள், பிப்ரவரி 13, 2012

பிரச்சினை யாருக்கு இல்லை?

மருத்துவர் ராமன் வேகமாக மருத்துவ மனைக்குள் நுழைந்தார். ஒரு அவசர அறுவை சிகிச்சைக்காகத் தொலைபேசி அழைப்பு வந்தவுடன் அவர் விரைந்து மருத்துவ மனை வந்திருந்தார்.அறுவைச்  கிகிச்சைக்கான உடை அணிந்து,அந்த அறையை நோக்கிப் போனார். 

அறையின் வெளியே சிகிச்சைக்குக் காத்திருக்கும் சிறுவனின் தந்தை கவலையுடன் மருத்துவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். மருத்தவரைக் கண்டதும் அவர் இரைந்தார்”ஏன் இவ்வளவு தாமதம்?என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.உங்களுக்கெல்லாம் பொறுப்புணர்ச்சியே கிடையாதா?”

ராமன் சொன்னார். “நான் வெளியில் இருந்தேன்.எனக்கு அழைப்பு வந்தவுடன் வந்து விட்டேன்.இப்போது கொஞ்சம் அமைதியடையுங்கள்.நான் என் வேலையைச் செய்யப் போகிறேன்”

”அமைதி?.உள்ளே இருப்பது உங்கள் பையனாயிருந்தால் நீங்கள் அமைதியா யிருப்பீர்களா?உங்கள் பையன் இறந்தால் என்ன செய்வீர்கள்” அத் தந்தை கோபமாகக் கேட்டார்.

”புனரபி ஜனனம்,புனரபி மரணம்”பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவன.அதில் நாம் செய்ய எதுவுமில்லை.நான் என் கடமையைச்  செய்கிறேன்.நீங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்” மருத்துவர் சொன்னார்

பெரியவர் முணுமுணுத்தார்”தனக்குச் சம்பந்தமில்லாதபோது அறிவுரை கூறுவது மிக எளிது. ”

மூன்று மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார்.”கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.உங்கள் பையன் பிழைத்து விட்டான்.ஏதாவது கேட்க வேண்டு மெனில் செவிலியைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திருக்காமல் வேகமாகச் சென்று விட்டார்.

தொடர்ந்து வந்த செவிலியைப் பார்த்து அத்தந்தை கேட்டார்.”என்ன இவர் இவ்வளவு திமிர் பிடித்தவராக இருக்கிறார்?என் பையனைப் பற்றி ஏதாவது கேட்க எண்ணினால் ஒரு மணித்துளி கூட நிற்காமல் ஓடிவிட்டாரே?”

அந்தச் செவிலி கண்களில் நீர் வழியச் சொன்னாள்”நேற்று ஒரு விபத்தில் அவர் மகன் இறந்து விட்டான்.இறுதிச் சடங்குகள் இன்று செய்து கொண்டிருந்த போது இங்கிருந்து உங்கள் பையனின் அறுவை சிகிச்சை பற்றிச் சொல்லவும் உடனே வந்து விட்டார்.இப்போது போய்த்தான் அவர் சடங்குகளை முடிக்க வேண்டும்”

வாழ்க்கையில் நாம் இப்படித்தான் நமக்குமே மட்டுமே பிரச்சினைகள் இருப்பது போல் நினைத்து மற்றவர்களின் பிரச்சினைகளை உணராமல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

விருதும் நானும்!

எதுவுமே பகிர்ந்துகொண்டால் குறையும்.துயருமும் அது போல்தான்.என் துயரத்தை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்டதாலும், உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தை களாலும்,இப்போது மனம் பெருமளவு லேசாகியிருக்கிறது.நன்றி.

இப்போது கடமை அழைக்கிறது..

நண்பர் “மின்னல் வரிகள்” கணேஷ் அவர்கள் எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை கௌரவப்படுத்தியிருக்கிறார்,அதுவும் உண்மையிலேயெ பல்துறைப்புலமை மிக்க நால்வர் குழாத்துடன் என்னையும் இணைத்து!


நன்றி கணேஷ்.எனக்கு புதிய கவலையைத் தந்து விட்டீர்கள்.இந்த விருதுக்குத் தகுதியானவனாக எப்படித்தொடர்ந்து இயங்கப்போகிறோம் என்ற கவலை! 


இந்த விருதைப்பெற்ற நான் சில உடனடிக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும் .

எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

மற்றும் இந்த விருதை ஐந்து பேருக்கு வழங்க வேண்டும். 


முதலில் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்


         நல்ல கர்நாடக இசை,புத்தகங்கள்,அமைதியான தனிமை, நண்பர்கள் சந்திப்பு,டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்,அசோகாஹல்வா(திருவையாறு),நல்ல நகைச்சுவை.
 


அடுத்து நான் விருது வழங்கி,அதன் மூலம் என்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் பதிவுலக நண்பர்கள்.
             1.வே.நடனசபாபதி 
             2.ரஹீம் கஸாலி
             3.முனைவர் இரா.குணசீலன்  
             4.சண்முகவேல்
             5.சங்கரலிங்கம்(உணவு உலகம்) 


விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்துமாறு ஐவரையும் கேட்டுக் கொள்வதுடன்,இந்த விருதை அவர்களைக் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்து நண்பர் வே.நடனசபாபதி அளித்த விருது மீண்டும் ஒரு அங்கீகாரம்,அதனால் எழும் மகிழ்ச்சி,தொடரும் பொறுப்பும் ,கவலையும்..........




 விருது வழங்கி என்னைக் கௌரவித்தமைக்கு நன்றி நடனசபாபதி அவர்களே.


இப்போது இந்த விருதின் விதிமுறைகளின் படி நான் ஐந்து பதிவர்களுக்கு இவ்விருதை வழங்க வேண்டும்.அவர்கள்.....
        1.சிராஜ்
        2.கே.ஆர்.விஜயன்
        3.சிவகுமார்
        4.A.R.ராஜகோபாலன்
        5.ரியாஸ் அஹமது.
              
விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தி,இந்த விருது வழங்கலை,விதிமுறைகளின்படித் தொடர வேண்டுகிறேன்.
நன்றி. 

தமிழ்மணத்தில் வாக்களிக்க--http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1140356

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

நிலை கொள்ள மறுக்கும் மனம்!

ஒரு வாரமாக மனம் எதிலும் நிலைக்க மறுக்கிறது.
கணினி முன் அமர்ந்தால் அதிகபட்சம் 15 மணித்துளிகளுக்கு மேல் எதையும் பார்க்கவோ, படிக்கவோ முடியாமல் மனம் அலை பாய்கிறது.
வலைப்பூவில் ஏதாவது எழுதுவதென்பது இயலாத செயலாக இருக்கிறது.
தியானத்தில் அமர்ந்தால் மனம் ஒன்ற மறுக்கிறது.
சரி,படிக்கலாம் எனப் புத்தகம் ஏதாவது கையிலெடுத்தால்,விழி பார்ப்பதை,மனம் வாங்கிக் கொள்ள மறுக்கிறது.
எதிலுமே லயிக்காத ஒரு நிலை.ஏன் என்றே தெரியவில்லை; புரியவில்லை.
ஒரு வேளை என் நன்பனின் இழப்பினால் ஏற்பட்ட தாக்கமோ?

என்னுடன் 1964-66 இல் பட்ட மேற்படிப்பு படித்தவன்.அதற்கு முன் ,வெளி ஊர்க் கல்லூரியில் பட்டப்படிப்பில் எனக்கு  ஒரு ஆண்டு,முந்தியவர்.

விடுதி வாசத்தில் இருக்கும்போது எனக்கு எளிய உடற் பயிற்சியெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்.
அப்போதே அவருக்கு இரவு நேரத்தில் இருட்டில் பார்வை சரியாகத்தெரியாது.
பணி ஓய்வுக்குப்பின் பார்வை முழுவதும் போய் விட்டது.
சென்னையிலேயே  இருந்தாலும் அடிக்கடி சந்திக்க முடிந்ததில்லை. தொலைபேசியில் உரையாடுவதோடு சரி.
அவரும் அவர் மனைவியும் மட்டுமே சென்னையில் வசித்து வந்தனர்.
மூன்று பிள்ளைகள்-ஒரு மகன்,இரண்டு மகள்கள்,அனைவரும் அமெரிக்காவில்.
உயிர் பிரியும் நேரத்தில் அவர்கள் யாரும் அருகில் இல்லை.
பெட்டிக்குள் அவர் உடலைப் பார்த்ததும் நான் உடைந்து போனேன்.பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன? கடைசி நேரத்தில் பிள்ளைகள் ஒருவர் கூட அருகே இல்லாத, உடனே வந்து சேரக்கூட முடியாத எங்கோ ஒரு இடத்தில்.
அவர் மனைவிக்கு ஆறுதல் கூறினேன்.
என்ன வாழ்க்கை இது?

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139969

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012