திருச்சி கடைத்தெருவில் அப்போது அம்பி ஐயர் ஓட்டல் என்று ஒன்று இருந்தது. மாலை நேரத்தில் தினமும் ஸ்பெசல் ஆக ஒரு இனிப்பு ஒரு காரம் செய்வார்கள்.காத்திருந்து வாங்கிச் சாப்பிடுவர் பலர்.நானும் கீரன் அவர்களும் அங்கு ரெகுலர்.சுடச் சுட அல்வா/கேசரி/ஜாங்கிரி என்று இனிப்பும், போண்டா/பஜ்ஜி/வடை( மனோ எங்கே போயிட்டீங்க!) என்று கார வகைகளும் மேலும் மேலும் சாப்பிடத்தூண்டும்.சொந்தக்காரர் அதை ஒரு வெறும் தொழிலாக நடத்தவில்லை.ஒரு வித ஈடுபாட்டுடன் நடத்தி வந்தார்.அவருக்கு அப்படி ஒரு ஓட்டல் நடத்த அவசியமே இல்லை.ஏனென்றால் அவரது மகன் திரு.வேதநாராயணன்தான் அப்போது தஞ்சை மாவட்டக் கலெக்டர்!
மாயவரம்/ RTC லாட்ஜ்களில் சாப்பிடாத இரவுகளில்,இரவு உணவு கொஞ்சம் வித்தியாசமாக அமையும்.கடைத்தெருவில் ஒரு கடிகாரக் கடை இருந்தது.அந்தக் கடை மாலை மூடிய பின்,அந்தக்கடை வாசலில் வேறு ஒரு கடை திறக்கப்படும். ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு அய்யங்கார் புளியோதரை,சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,தயிர்சாதம் என்று எல்லாவற்றையும் ஒரு ஜட்கா வண்டியில் வைத்துக் கொண்டு வந்து அங்கு கடை போட்டு விடுவார்.நான்,வைத்தியநாதன் , கீரன் மூவரும் பல நாட்கள் அந்த சாலை ஓரக் கடையில் ருசித்துச் சாப்பிட்டிருக்கிறோம்! அந்த மாதிரிச் சுவையான புளியோதரை இன்று வரை நான் சாப்பிடவில்லை!
பெண்களை விட ஆண்கள்தான் உணவுப் பிரியர்களாக இருக்கிறார்கள்.நல்ல சுவையான உணவை ரசிக்கிறார்கள்.எனவேதான் சொன்னார்களோ—
The way to a man’s heart is through his stomach(ஒரு ஆணின் இதயத்துக்கு நுழை வாயில் அவன் வயிறே!) என்று.
ஒரு லிமரிக்குடன் முடித்தால்தான் எனக்குத் திருப்தி!.நையாண்டிக் கவி,சிந்து கவி என்று என்ன பெயர் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.ரோஜாவை,வேறு பெயரில் அழைத்தால் மணம் குறைந்து விடுமா என்ன!( இப்படியும் சொல்லலாமே-சாக்கடையை ரோஜா என அழைத்தால் துர்நாற்றம் போய்விடுமா?!)
”சாப்பாட்டுப் பிரியன் சின்ன மணி
நாக்கில் வந்ததொரு நாள் சனி
சொன்னான் ரசத்தில் இல்லை உப்பு
வாங்கினான் கன்னத்தில் அப்பு!
இப்பவெல்லாம் மணி கப்புச் சிப்பு!”