தொடரும் தோழர்கள்

கனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 16, 2015

ராசாவும் கனியும்!



இது ஓர் அரசனும் கனியும் பற்றிய கதை

நீங்கள் அறியாத கதையல்ல.

இது நீங்கள் அறிந்த கதைதான்.

கனி அரசனை விட்டு நீங்கிய கதை.

புதன், அக்டோபர் 12, 2011

கனி பற்றிப் புதிய தகவல்!

இன்று காலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்த இந்தச் செய்தியை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த அவசரப் பதிவு.

நாம் தினம்,தினம் பல கனிகளைச் சாப்பிடுகிறோம்.ஆப்பிள் ,வாழை,சாத்துக்குடி, ஆரஞ்சு இவைதாம் நம் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.ஆனால் நம் நம்பிக்கைகளைத் தகர்த்துத் தவிடு பொடியாக்கி விட்டது ஒரு ஆராய்ச்சி!

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிலையம் நடத்திய ஒரு ஆராய்ச்சியின் முடிவுகள் வெளி வந்துள்ளன.இந்தியாவில் பொதுவாக உண்ணப்படும் 14 கனி வகைகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார்கள்.இந்தக் கனிகளில் இயற்கையில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் அளவுகளை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தார்கள். உடலில் உள்ள செல்களின் சிதைவைக் கட்டுப் படுத்தக்கூடியவை ஆண்டிஆக்சிடண்ட்கள்.ஆராய்ச்சி முடிவின் படி நமக்கு மிகவும் பயனளிக்ககூடிய கனி--கொய்யாக்கனி என்பது கண்டறியப்பட்டது.100 கிராம் கொய்யாவில்,496 மில்லி கிராம் ஆண்டிஆக்சிடண்ட் இருப்பதாக அறிந்தார்கள்.மற்ற முக்கியக் கனிகளில் அந்த அளவு---

மாம்பழம்-170
ஆப்பிள்--123
பப்பாளி-- 50
வாழை--- 50
சாத்துக்குடி 26

மலிவான கொய்யாவே அதிக அளவு பயன் தருகிறது!

இனி எல்லோரும் கொய்யாக்கனியை அதிகம் உண்ணுங்கள்!

அதுவும் விலை ஏறட்டும்!!



புதன், ஜூன் 01, 2011

கனி பற்றிச் சில செய்திகள்!

இப்போது கனி பற்றிய பேச்சாகவே இருக்கிறது எங்கும்.
ஊடகங்கள் எல்லாம் கனி பற்றியே எழுதியும் ,பேசியும் வருகின்றன.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா?
நானும் என் பங்குக்குக் கனி பற்றி எழுதிவிடுகிறேன்.

முக்கனிகள் என்று அழைக்கப் படுபவை—மா,பலா,வாழை என்பவை.
இப்போது மாங்கனி சீசன்.இந்த சீசனில் சாப்பிடவில்லையெனில் மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.
ஆனால் மாங்கனி பற்றி வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன.
“தானாகக் கனியாத பழத்தைத் தடியால் அடித்துக் கனிய வை”என்று சொல் வழக்கு உண்டு.
ஆனால் இப்போது மாங்கனியைக் கல்லால் அடித்துப் பழுக்க வைக்கிறார்களாம்.
கால்சியம் கார்பைடு கல்லை வைத்துச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கனிகள்,அநேக உடல் உபாதைகளை எற்படுத்துகின்றனவாம்.
இது பற்றி நமது சங்கரலிங்கம் அவர்கள் ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்கள்.

டன் கணக்கில் அத்தகைய கனிகள் பிடிபட்டாலும்,தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
ஆனால் அதற்காகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா?

இந்த மாங்கனி ஒரு குடும்பத்திலேயே பிளவை ஏற்படுத்தியதாம்.ஆனால் அது ஒரு ஞானக்கனி!அது கிடைக்காத முருகன் கோபத்துடன் மலைஏறியதால் நமக்குப் பழனி கிடைத்தது! கனிகளால் செய்யப் படும் பஞ்சாமிர்தமும் கிடைத்தது!

முக்கனிகளில் வாழை, மா இரண்டும் எளிதாக வாங்கிச் சாப்பிட முடிகிறது. ஆனால் பலா!நாம் வாங்கி அதைப் பிளந்து சுளையை எடுத்து, சாப்பிட்டு முழுக் கனியையும் காலி செய்வது என்பதெல்லாம் முடியாத செயல்.சாலயில் வாங்கும் பலாச் சுளைகளோ ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். எனவே பலா ஒரு எட்டாக்கனி-மரத்தில் எட்டும் உயரத்தில் இருப்பினும்!


பெண்கள் மொழி இனிமை என்பதை கருத்தில் கொண்டுதான் பெண்களுக்குக் கனிமொழி,தேன்மொழி என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள்.

குரல் மட்டும் இனிமையாக இருந்தால் போதுமா?சொல்லும் சொற்களும் இனிமையானவையாக இருக்க வேண்டும்.

வள்ளுவர் சொல்கிறார்-
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”

இனிய சொற்கள் இருக்கும்போதுஅவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

எல்லாக் காய்களுமே கனியாகுமா?

கிளி இலவங்காயைப் பார்த்துக் கனியானவுடன் சாப்பிடலாம் எனக் காத்திருக்குமாம்.ஆனால் அது கனியாகாமல் காய்ந்து வெடித்துச் சிதறி விடும்.அதைப் பார்த்துக் கிளி ஏமாந்து போகுமாம்.ஏதாவது ஒரு விளைவுக்காகக் காத்திருந்து அது நடக்காமல் போய் ஏமாற்றமடைவதை “இலவு காத்த கிளி போல்” என்று சொல்வார்கள்.இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது.

பெண்களின் பெயரில் கனி இருப்பது போல், ஆண்களின் பெயர்களிலும் உண்டு—சமுத்திரக்கனி,சண்முகக்கனி,அண்ணாமலைக்கனி என்றெல்லாம்.
நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது எனது வகுப்பு ஆசிரியர் அண்ணாமலைக்கனி என்பவர்.மாணவர்களுக்கு அவரைப் பார்த்தாலே நடுக்கம்.அவ்வளவு கண்டிப்பு.ஒருநாள் நான் ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லவில்லை.அவர் என்னை வீட்டுக்கு அனுப்பிப் புத்தகத்தோடு வரச்சொல்லி விட்டார்.நான் வீட்டை அடைந்தபோது ஒரு உறவினர் வெளியூரிலிருந்து வந்திருக்கவே,நான் திரும்பிப் பள்ளி செல்லவில்லை.
மறுநாள் பள்ளி சென்றதும் நண்பர்கள் என் ’பைக்கட்டு’ தலைமை ஆசிரியர் அறையில் இருப்பதாகச் சொல்ல நான் போய் எடுத்துக்கொண்டேன்.

நடந்தது இதுதான்----

நான் திரும்பி வராததால்,ஆசிரியர் பையை எச்.எம்.அறைக்குக் கொண்டு சென்று விஷயத்தைச் சொல்லவும், அவர் “நீ ஏன் அவனை வீட்டுக்கு அனுப்பினாய்” என்று கேட்க அவர் வாயடைத்துப் போய்த் திரும்பி விட்டார். பின் அது பற்றி என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை!

தலைமை ஆசிரியர்------என் தாத்தா !

’கனி’வோடு படித்தமைக்கு மனம் ’கனி’ந்த நன்றி!