தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 09, 2016

இப்படியும் நடக்குமா?!



அந்தப் பாம்பு இரைதேடி அலைந்து களைத்துப்போயிருந்தது.

ஊர்ந்து ஊர்ந்து உடலெல்லாம் வலியெடுத்திருந்தது.

இப்போது அதற்கு மறைவாகப் படுக்க ஓர் இடம் தேவை   
  .
எதிரிகள் கண்ணில் படாத ஒரு மறைவிடம்.

குறிப்பாக இந்த மனிதர்கள் கண்ணில் பட்டு விடக்கூடாது.

இந்தப்பாம்பு தீமை செய்யுமா என்று கூட யோசிக்காமல் அடித்து நார் நாராக உரித்து விடுவர்.

தேடி அலைந்தது.

கூரை மேலிருந்து கிழே பார்த்தது.

ஒரு துளை தென்பட்டது.

அதோ ஒரு துவாரம்.அப்பா!அதனுள் சென்று ஓய்ந்து படுத்து விடலாம்.

உடலை வளைத்துச் சுருக்கிக் கீழே பாய்ந்தது,நேராக அந்த ஓட்டைக்குள்!

உள்ளே நுழைந்த மறுகணம்  துளை மூடியது.மேலும் கீழுமாகக்கூர்மையான ஆயுதம் வந்து அதை நறுக்கியது

பாம்பு தலை வெட்டுண்டு இறந்தது.

எமன் வாயில் விழுவதென்பது இதுதானோ?!

செய்தி: இந்தூர் அருகே ஓர் ஊரில் வாயைத்திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்த ஒரு வாலிபரின் வாயில் கூரையிலிருந்து பாம்பு விழுந்தது.தூக்கத்திலேயே வாலிபர் அதைக் கடித்துத்தலையைத் துண்டித்து விட்டார்.சிறிது நேரம் சென்று அறைக்குள் வந்த அவர் அம்மா அவர் வாயில் ரத்தத்தையும்,கீழே கிடக்கும் பாம்பின் துடிக்கும் உடலையும் பார்த்துக் கத்திய பின்பே விழித்துக் கொண்டார்!பின்னர் மருத்துவ உதவி இத்யாதி,இத்யாதி.......

பாம்புக்கு நேரம் சரியில்லை!

உண்மை சில நேரங்களில் புனைவை விட விசித்திரமானது!

புதன், ஆகஸ்ட் 24, 2016

திக்குத் தெரியாத காட்டில்



இரயில் நிலையம்.

வழக்கமான பரபரப்பு

இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகும் இரயிலுக்காகக் காத்திருக்கும் கூட்டம்

சிலர் கையில் மினரல் தண்ணீர் பாட்டில்;சிலர் பிளாட்பாரக் குழாயில் தண்ணீர் பிடித்தபடி..

சிலர் கையில் உள்ள பொட்டலத்தில் இருந்து எதையோ கொறித்தபடி.,சிலர் கப்பில் உள்ள காபி/டீயை உறிஞ்சியபடி.,சிலர் மற்றவர்களைப் பார்த்தபடி. ..

என்ன செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான் அந்தச் சிறுவன்.

மூன்று வயதே இருக்கும் அவனைச் சிறுவன் என்பதா,குழந்தை என்பதா?

பிளாட்பாரத்தில் இங்கும் இங்கும் ஓடுகிறான்.ஒரு ஓரத்தில் படுத்திருக்கும் அந்த ஆண்,பெண் அருகே வந்து அமர்ந்து கொள்கிறான்.

ஒரு கிழிந்த பொம்மையுடன் விளையாடுகிறான்.

அந்தப் பெண்ணின் அருகில் படுக்கிறான்.

எழுகிறான்

மீண்டும் ஓடுகிறான்.

ஓரிருவர் அவனை நிறுத்தி விசாரிக்க, படுத்திருப்பவர்கள் அவன் பெற்றோர் எனவும் அவர்கள் அருகில் உள்ள ஓர் ஊர்க்கோவிலுக்குப் போவதாகவும், அவர்கள் தூங்கி எழுந்தவுடன் போகப்போவதாகவும் மழலையில் சொல்கிறான்.

சிலர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

படுத்திருக்கும் தம்பதியிடம் எந்த அசைவும் இருப்பதாகத் தெரியவில்லை

அருகில் சென்று பார்க்கையில் தெரிய வருகிறது –அவர்கள் உயிருடன் இல்லை என்பது.

சிறுவன்/குழந்தை ஏதும் அறியாமல் அம்மாவின் புடவைத்தலைப்பைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான்.............

நில்லுங்கள்.

என்னால் மேலே எழுத முடியவில்லை.எழுதியதைப் படிக்க முடியவில்லை

கண்களிலிருந்து கண்ணீர் தாரையாக வழிந்து ஓடுகிறது.

ஏதோ ஒரு ஊரில் ஒரு இரயில் நிலையத்தில் மூன்று வயது குழந்தை, நிர்க் கதியாக, அனாதையாக............

இறைவா!இது என்ன நீதி? அக்குழந்தை என்ன பாவம் செய்தது?

ஏன் இப்படிச் செய்தாய்?

இருவரும் சேர்ந்தே இறந்திருக்கிறார்கள் என்றால்,அது தற்கொலையா?காரணம் என்ன?

காரணம் எதுவாக இருந்தாலும் அந்தக் குழந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா அவர்கள்?

இனி அக்குழந்தையின் நிலை என்ன?

கேள்விகள் ,கேள்விகள்,கேள்விகள்......விடை தெரியாத......

(டைம்ஸ் இந்தியா,சென்னை,23-08-2016,செய்தியின் அடிப்படையில்)



ரு

சனி, ஆகஸ்ட் 13, 2016

மரண அழைப்பு!



அன்பு நண்பரே/நண்பியே,

என் மிக நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நீங்கள் என்பதால் இந்த அழைப்பு உங்களுக்கு அனுப்பப் படுகிறது.

இந்த வார இறுதியை நான் உங்களுடன் கழிக்க விரும்புகிறேன்.எனது பண்ணை வீட்டில் வரும் சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்,.முப்பது நண்பர்களை அழைத்திருக்கிறேன் .இரண்டு நாட்களும் உல்லாசமாகக் கழிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வார இறுதி விழாவுக்கு எந்த உடைக்கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான,வசதியான எந்த உடையும் அணியலாம்.பாட விரும்புபவர்கள் பாடலாம்.ஆட்டத்தில் நாட்டம் உள்ளவர்கள் ஆடலாம்.. நடிக்கத்தெரிந்தவர்கள்நடிக்கலாம்..ஆம்,ஒரே நோக்கம், கவலைகள் மறந்து அனைவரும்,நானும்தான், மகிழ்ச்சியாக இவ்விரு நாட்களைக் கழிக்க வேண்டும் என்பதுதான். .சுதந்திரமான சந்திப்பு.எந்த விதமான கட்டுப் பாடுகளும்,விதிகளும் இல்லை.ஓ,மறந்து விட்டேன்.மிக முக்கியமான விதி ஒன்று உண்டு.,யாரும் கண்ணீர் சிந்தக்கூடாது,எந்த சமயத்திலும்.

வாருங்கள்.ஒரு மகிழ்வான வார இறுதியைக் கழிக்க உதவுங்கள்

அன்புடன்
பெட்ஸி.

................................................................................
அழைப்புக் கிடைத்த அனைவரும் வார இறுதியில் குழுமினர்.சிலர் வயலின்,சிலர் கிடார்,என வாத்தியங்கள்.ஒரு வெண்ட்ரிலாக்கிஸ்ட் அவரது பொம்மையுடன். .அனைவரையும் ராதா வரவேற்றாள்.கைகுலுக்கினர்,கட்டித் தழுவினர்,கையில், கன்னத்தில் முத்தமிட்டனர்.

மகிழ்ச்சியான வார இறுதி தொடங்கிற்று.,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம். ராதாவுக்கு மிகவும் பிடித்த உணவு சிலர் கொண்டு வந்திருந்தனர்.அவளுக்குப் பிடித்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மது வகைகள்,வித விதமான உணவு எல்லாம் பரிமாறப்பட்டன.

இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்தன.குறிப்பிட்ட நேரம் வந்தது.ஆம் நேரமும் முன் கூட்டியே அவளால் திட்டமிடப்பட்டு விட்டது.

“நண்பர்களே!என் அழைப்பை ஏற்று என்னை வழியனுப்ப வந்த நீங்கள் 
 அனைவரும்  மிகவும்தைரியசாலிகள்.என் மகிழ்ச்சியே முக்கியம் என நினைப் பவர்கள்.உங்களுக்கு என் நன்றி.இப்போதுவிடை பெறும் நேரம் வந்து விட்டது ”  என்றாள் ராதா.

ஒவ்வொருவராக வந்து அவளிடம் விடை பெற்றுச் சென்றனர்.
 


அறையில் ராதாவும்,அவளது செவிலியும் மட்டும்.

செவிலி  சக்கர நாற்காலியை அந்த அறைக்கு தள்ளிச் சென்றாள்.

சட்ட பூர்வமான அனுமதியுடன்,மருத்துவர் கொடுத்த மருந்துகளை, ராதாவுக்குக் கொடுத்தாள்.அவற்றை மலர்ந்த முகத்துடன் சாப்பிட்ட ராதா செவிலியின் கையைக் குலுக்கினாள்.செவிலி பொங்கி வந்த கண்னீரை அடக்கிக்கொண்டாள், பெரும் முயற்சியுடன்.

ராதா துயிலில் ஆழ்ந்தாள்.

குணமாக்க முடியாத நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு இனித் துன்பம் இல்லை.

ஆம்!மீளாத்துயில்

(கதையல்ல நிஜம்.டைம்ஸ் ஆஃப் இந்தியா 13-08-2016)

திங்கள், ஆகஸ்ட் 08, 2016

குடைக்குள் மழை





குடைக்குள் மழையென்றால்,குடையினால் என்ன பயன்?
மடைக்குள் விரிசலென்றால்,மடையிருந்து என் செய்ய
வடைக்குள் நூலென்றால் நெடுநாள் வடையதாகும்
உடைக்குள் அரிப்பென்றால் எறும்பு கடிப்பதாகும்.

இவ்வளவுதாங்க கவுஜ!எதுகை வந்தாச்சு இல்ல .பொருளைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.’ஆழ்ந்து படித்தால் ஆயிரம் பொருள் தெரியும்’னு சொல்லிடலாம்.

முதல் வரி மனதில் எழக்காரணம்,சில நாட்களுக்கு முன் குடையைப் பிடிச்சிட்டு மழையிலே போயும் நனைந்து கொண்டே திரும்பி யதுதான்.இப்பல்லாம் மூணா,நாலா மடிக்கிற குடையெல்லாம் வந்தாச்சு.



அதுல ஒரே சவுகரியம்,மடிச்சு பைக்குள்ளே வச்சுக்கலாம் அப்படீங்கறதுதான். மத்தபடிப் பெரிய மழை னா,பாதி நனைய வேண்டியதுதான்!அதான் அந்தக்காலத்து சினிமாப் பாட்டில பாடினாங்க”சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்,சின்னக்குடை தாங்காது”ன்னு.கேட்டிருக்கீங்களா,அருமையன பாட்டு.
   
பெரிய குடை வசதி மட்டுமல்ல.ஒரு கம்பீரமும் கூட. ஆண்டவன் கட்டளை படத்தில் நடிகர் திலகம் அப்படி ஒரு குடையைப் பிடிச்சிக்கிட்டு ஒரு நடை நடப்பார் பாருங்க!அது ஸ்டைலு! படம் வந்ததுக்கப்புறம், அதே மாதிரிக் குடையைப் பிடிச்சிக்கிட்டு நான் நடந்த நாட்களும் உண்டு.சின்னக் குடையெல்லாம் வெறுத்துப்போய்,ரொம்பநாள் கழிச்சு ஒரு நண்பர்கிட்ட சொல்லி ஒரு மான் மார்க் குடை வாங்கிட்டு வரச் சொன்னேன்.விலை ரூ.300இன்னும் அதைப் பிடிச்சிட்டு வெளில போகல.

மன்னர்களுக்கெல்லாம் குடை பிடிப்பார்களாம்.அது வெண்மை நிறத்தது போலும்;எனவே வெண் கொற்றக் குடை என்றழைக்கப்பட்டது. கம்பராமாயணத்தில் ஒரு பாடல்.இராமன்,முடி தரிக்காமல்,தனியனாக வருகிறான் கோசலையைப் பார்க்க...
.
“குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி
 இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின்னிரங்கியேக
 மழைக்குன்றமனையான் மௌலி கவித்தனன் வருமென்றென்று
தழைக்கின்ற உள்ளத்தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்.

முன்னிருந்து கவரி வீசுவார்கள் பின்னிருந்து குடை பிடிப்பார்கள் எனத் தெரிகிறது.

கருப்புக்குடையின் மீது சிலர் வெள்ளைத் துணியை வைத்துத் தைத்திருப்பார்கள்.அது வெயிலுக்கான குடை.

1937 இலிருந்து 1940 வரை இங்கிலாந்து பிரதமராக இருந்த நெவில் சேம்பர்லின் குடை மனிதர் என்றழைக்கப்பட்டார். ஏனெனில் எப்போதும்கையில்  குடையுடன்தான்  இருப்பாராம்.

குடை தேவையானபோதுதான் பிடிக்க வேண்டும்.இல்லையெனில் இப்படித்தான் சொல்வார்கள்.

“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்”