தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 08, 2016

குடைக்குள் மழை

குடைக்குள் மழையென்றால்,குடையினால் என்ன பயன்?
மடைக்குள் விரிசலென்றால்,மடையிருந்து என் செய்ய
வடைக்குள் நூலென்றால் நெடுநாள் வடையதாகும்
உடைக்குள் அரிப்பென்றால் எறும்பு கடிப்பதாகும்.

இவ்வளவுதாங்க கவுஜ!எதுகை வந்தாச்சு இல்ல .பொருளைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.’ஆழ்ந்து படித்தால் ஆயிரம் பொருள் தெரியும்’னு சொல்லிடலாம்.

முதல் வரி மனதில் எழக்காரணம்,சில நாட்களுக்கு முன் குடையைப் பிடிச்சிட்டு மழையிலே போயும் நனைந்து கொண்டே திரும்பி யதுதான்.இப்பல்லாம் மூணா,நாலா மடிக்கிற குடையெல்லாம் வந்தாச்சு.அதுல ஒரே சவுகரியம்,மடிச்சு பைக்குள்ளே வச்சுக்கலாம் அப்படீங்கறதுதான். மத்தபடிப் பெரிய மழை னா,பாதி நனைய வேண்டியதுதான்!அதான் அந்தக்காலத்து சினிமாப் பாட்டில பாடினாங்க”சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்,சின்னக்குடை தாங்காது”ன்னு.கேட்டிருக்கீங்களா,அருமையன பாட்டு.
   
பெரிய குடை வசதி மட்டுமல்ல.ஒரு கம்பீரமும் கூட. ஆண்டவன் கட்டளை படத்தில் நடிகர் திலகம் அப்படி ஒரு குடையைப் பிடிச்சிக்கிட்டு ஒரு நடை நடப்பார் பாருங்க!அது ஸ்டைலு! படம் வந்ததுக்கப்புறம், அதே மாதிரிக் குடையைப் பிடிச்சிக்கிட்டு நான் நடந்த நாட்களும் உண்டு.சின்னக் குடையெல்லாம் வெறுத்துப்போய்,ரொம்பநாள் கழிச்சு ஒரு நண்பர்கிட்ட சொல்லி ஒரு மான் மார்க் குடை வாங்கிட்டு வரச் சொன்னேன்.விலை ரூ.300இன்னும் அதைப் பிடிச்சிட்டு வெளில போகல.

மன்னர்களுக்கெல்லாம் குடை பிடிப்பார்களாம்.அது வெண்மை நிறத்தது போலும்;எனவே வெண் கொற்றக் குடை என்றழைக்கப்பட்டது. கம்பராமாயணத்தில் ஒரு பாடல்.இராமன்,முடி தரிக்காமல்,தனியனாக வருகிறான் கோசலையைப் பார்க்க...
.
“குழைக்கின்ற கவரியின்றிக் கொற்ற வெண் குடையுமின்றி
 இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின்னிரங்கியேக
 மழைக்குன்றமனையான் மௌலி கவித்தனன் வருமென்றென்று
தழைக்கின்ற உள்ளத்தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்.

முன்னிருந்து கவரி வீசுவார்கள் பின்னிருந்து குடை பிடிப்பார்கள் எனத் தெரிகிறது.

கருப்புக்குடையின் மீது சிலர் வெள்ளைத் துணியை வைத்துத் தைத்திருப்பார்கள்.அது வெயிலுக்கான குடை.

1937 இலிருந்து 1940 வரை இங்கிலாந்து பிரதமராக இருந்த நெவில் சேம்பர்லின் குடை மனிதர் என்றழைக்கப்பட்டார். ஏனெனில் எப்போதும்கையில்  குடையுடன்தான்  இருப்பாராம்.

குடை தேவையானபோதுதான் பிடிக்க வேண்டும்.இல்லையெனில் இப்படித்தான் சொல்வார்கள்.

“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்”


5 கருத்துகள்:

 1. குடை தேவையானது போதுதான் பிடிக்க வேண்டும்...//

  கேரளத்து மக்கள் பெரும்பாலும் பையில் குடையுடன் தான் வெளியில் இறங்குவார்கள்.

  ஏழையின் குடை

  விண்ணில் மட்டும்தான்
  நட்சத்திரங்களா
  என் குடையிலும்தான்
  நட்சத்திர பங்களா!

  பதிலளிநீக்கு
 2. குடை விவரங்கள் ஜோர். இன்னொரு வெண்குடை உண்டே... ஃபோட்டோகிராபர்கள் திருமணங்களில் ஃபோட்டோ எடுக்கும்போது கேமிராவுக்கு மேலே வைப்பது!

  பதிலளிநீக்கு
 3. கீதா ரெங்கன்.. நிறம் மாறாத பூக்கள் படத்தில் சுதாகர் சொல்வதாக ஒரு கவிதை வசனம் வரும் (அவர் தனது டைரியில் எழுதி இருந்ததை , ராதிகா படிப்பது போல காட்சி!)

  "நாட்சத்திரங்கள்
  வானில் மட்டுமல்ல,
  என் பனியனிலும் உண்டு"

  :))

  பதிலளிநீக்கு
 4. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான்....
  நாம தேவைப்படும் போது குடை பிடிப்போம்...

  பதிலளிநீக்கு