தொடரும் தோழர்கள்

புதன், பிப்ரவரி 18, 2015

இதுதான் வாழ்க்கை!



ஆயிற்று.

இன்று 13 ஆம் நாள்,சுபஸ்வீகரணக் காரியங்கள் முடிந்து விட்டன.

நம்புவது இன்னும் கூடக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

4ஆம்தேதியன்று கூட என்னுடன் பேசியவர் 7ஆம் தேதி பிடி சாம்பலாகிக் கடலில் கரைக்கப்பட்டு விட, இன்றைய சடங்குகள் முடிவில் ஆன்மா எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விட்டது.

அழுகைகள் குறைந்து விட்டன.

பேச்சுக்களில் சகஜ நிலை திரும்பி விட்டது.

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தானே ஆக வேண்டும்?!

இதுதான் வாழ்க்கை!

எந்தத் துயரத்திலும்,நடுவில் ஒரு மெல்லிய நகைச்சுவை தலைகாட்டத் தவறுவதில்லை.

என் அண்ணா இறந்த மறுநாள் ,அவர்கள் குடியிருப்பில் இருந்த ஒரு  வீட்டுவேலை செய்யும் பெண் ,என் அண்ணியிடம் வந்து”தை வெள்ளியன்னிக்கு,சுமங்கலியாப் போயிட்டாரு” என்றாளாம்.அதைக் கேட்ட என் அண்ணா பெண்ணுக்கு துக்கத்தையும் மீறிச்  சிரிப்பு வந்து விட்டதாம்!
அதை அன்று இரவு அவள் விவரிக்க எல்லோருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது.

இதுதான் வாழ்க்கை!

என் அண்ணா மருத்துவமனையில் இருக்கிறார் என அறிந்தவுடன் யு எஸ்ஸிலிருந்து புறப்பட்ட மற்றொரு மகளுக்கு நடு வழியில் வாட்ஸப் மூலம் செய்தி தெரிய வந்து அவள் உடைந்து அழ,உடன் இருந்தவர்கள்,ஓர் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுதல் சொன்னார்களாம்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன்,அவளுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவன்,அவளுடன் பேசிப் பேசி அவள் துயரைக் குறைக்க முயன்றானாம்.

அவனிடம் பேசும்போது அவளுக்குத் தெரிய வந்தது அக்குடும்பம் அந்த இளைஞனின் திருமணத் துக்காக  இந்தியா செல்கிறார்கள் என்று!

இதுதான் வாழ்க்கை!

இறுதியாக ......

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே”--(திருமந்திரம்)

இதுதான் வாழ்க்கை!

14 கருத்துகள்:

  1. என்ன தான் ஆறுதல் சொன்னாலும்...

    ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நடந்ததை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு வாருங்கள் ஐயா. எல்லோரும் ஓர்நாள் இறைவனிடம் போய் ஆகவேண்டும்.
    எனது மனைவி இறந்தபோது எனக்கு மனைவி தரப்பில் கொடுத்த வேதனைகள் இருக்கிறதே... அது மனைவியின் பிரிவை விட கொடுமையானது அவைகளையே நான் கடந்து வந்து விட்டேன் எனது குழந்தைகளுக்காக...
    தங்களது குடும்பத்தாருக்கு இறைவன் மன பலத்தை தருவானாக....

    பதிலளிநீக்கு
  3. அண்ணாரின் ஆன்மா சாந்தியடைக.

    பதிலளிநீக்கு
  4. செத்துக் கொண்டிருப்பதை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நம்மை நாமே ஏமாற்றுகிறோம்.
    உற்றார் மறைவு மிக வேதனை தருவது, ஆனாலும் இது தான் வாழ்க்கை, மனதை ஆற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. “வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
    ஜனனம் என்பது வரவாகும் - அதில்
    மரணம் என்பது செலவாகும்”

    என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளை நினைவு கூர்ந்து சமாதானம் அடையுங்கள். காலம் இந்த இழப்பிற்கு மருந்திடும். தங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஒப்பாரிகளுக்கே ஒரு அர்த்தம் உண்டு.. மனம் அழக் கூட முடியாமல் இறுகி இருப்பவர்களை உடைந்து அழவைக்க உதவும் என்பார்கள். அதுபோல இது போன்ற சிறு சம்பவங்கள் துக்கத்தை லேசாக்க உதவும்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா.

    இழ்ந்த இரங்கல்கள் ஐயா அவரின் ஆத்மா சாத்தியடை இறைவனை வணங்குவோம்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா.

    வாழ்க்கை சில நேரங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கும் அதே சமயத்தில் அழுகவும் வைக்கும்....அதனால் அழுகும் நேரத்த்தில் அழுது சிரிக்கும் நேரத்தில் சிரித்துவிட வேண்டும்

    பதிலளிநீக்கு
  9. Shocked to hear the sad news. I came to know of this only today from Mr.Nadanasabapathy on my return from Bangalore. It is commendable that within a short time you could overcome the grief. While such losses are irreparable, one should not allow oneself to be consumed by grief. Let the departed soul RIP

    பதிலளிநீக்கு
  10. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  11. ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா ஆறுதல் பெறுக!

    பதிலளிநீக்கு
  12. வாழ்க்கை நிலையற்றது! இதை என் அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன்! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு