தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 27, 2015

பரமஹம்ஸ நித்யானந்தாவுடன் ஒரு சந்திப்பு!



அந்தக் கட்டுரையைப் படித்து முடித்துக் குமுதத்தைக் கீழே வைத்தேன்.

நல்ல கருத்தைப் படித்த மன நிறைவு.

இது இரண்டாவது வாரம்.

இரண்டு வாரமும் சொல்லப்பட்ட கருத்தும்,சொல்லிய விதமும் என்னைக் கவர்ந்தன.

ஒரு புதிய காற்று வந்து என் மனக்கதவைத் திறந்தது போல் உணர்ந்தேன்..

இத்தொடரின் படைப்பாளியான சாமியாரைப் பற்றி அறிய ஆவல் பிறந்தது.

குமுதம் பத்திரிகைக்குத் தொலைபேசினேன்.

அக்கட்டுரை என்னைக் கவர்ந்ததைப் பற்றிச் சொல்லி அந்த சாமியாரைப் பற்றிய தகவல் கேட்டேன்.

சம்பந்தப்பட்ட நிருபருக்கு இணைப்புக் கொடுத்தார்கள்.

அவர்கேட்டார்”அவரைச் சந்திக்க விருப்பமா?”

ஆம் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?

”அடுத்த ஞாயிறன்று அடையாறு சாஸ்திரி நகரில் ஒரு வீட்டிற்கு அவர் வரும்போது சந்திக்கலாம்.காலை 7 மணிக்கு வந்து விடுங்கள்.நானும் அங்கு இருப்பேன்” அவர் சொன்னார்.

காத்திருந்தேன் ஞாயிற்றுக் கிழமைக்காக.

அன்று காலை 6.45க்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு 7மணி அளவில் அந்த விலாசத்தை அடைந்தேன்

பெரிய பங்களா

உயர்ந்த சுற்றுப்புறச் சுவரும் இரும்புக்கதவும்.

கதவு லேசாகத் திறந்தே இருந்தது.

நாய்கள் ஜாக்கிரதை எச்சரிக்கைப் பலகை எதுவும் இல்லாததால் தைரியமாக நுழைந்தேன்.

தோட்டக்காரன் ஒருவன் இருந்தான்

“சாமியைப் பாக்க வந்தீங்களா.உக்காருங்க” என்றான்

வீட்டுக் கதவு மூடியிருந்தது.

திண்ணையில் அமர்ந்தேன்.

சொந்தக்காரர் செட்டிநாட்டவர் என்று தெரிந்தது.

அரை மணிநேரக் காத்திருப்புக்குப் பின் மணிக்கதவம் தாள் திறந்தது!

”உள்ளே வாருங்கள்,”

உள்ளே சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.

இன்னும் ஒருவரும் வெளியிலிருந்து வந்து சேர்ந்தார்

சிறிது நேரத்துக்குப் பின் கழுத்தில் காமிரா மாலையுடன் ஒருவர் உள்ளே வந்தார்.

என்னைப் பார்த்து”சந்திரசேகரன்?”என்று வினவினார்.

அவர்தான் குமுதம் நிருபர்

அறிமுகம் முடிந்தது.

“சாமி மாடியிலிருக்கிறார்.நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்று சொல்லிச் சென்றார்.

ஒரு நாகரிக இளம்பெண் உள்ளே வந்தார் .நேராக மாடிக்குச் சென்று விட்டார்.

ஒரு மனிதர் வந்து சொன்னர்”நான் சாமியின் செயலர்.சாமி இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்”

ஓர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்.சாமி பற்றி சொல்லி விட்டு”27 ஆம்தேதி முதல் மூன்று நாட்கள் சாமியின் பயிற்சி முகாம் இருக்கிறது....ஓட்டலில்.ரூபாய் 3000 தான் கட்டணம்.பெயரைப் பதிவு செய்து கொள்கிறீர்களா?” என கேட்டார்.

“என்னிடம் இப்போது பணம் இல்லை.பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்.வீட்டுக்குப் போய்க் காசோலை அனுப்பி வைக்கிறேன்”  என்று நழுவினேன்.

சாமி வருவது தெரிந்து கூடத்துக்கு வந்தோம்

மொத்தம் பத்துப் பேர்தான் இருப்போம்.வந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்தேன்.

எழுத்து ஈர்த்த அளவுக்கு அவர் ஈர்க்கவில்லை.

மகான்களைப் பார்த்தால் உடலில் ஒரு பரவசம் ஏற்படும்.

அது இல்லை

ஒரு வேளை அவர் அலை வரிசையில் என் மனஅலைவரிசை இணையவில்லையோ?

செயலர் என்னை அறிமுகம் செய்தார்”நம்ம முகாமுக்குப் பேர் கொடுத்திருக்கிறார்”

வணங்கினேன்.

ஆசீர்வாதம் செய்தார்

ஒரு ஆப்பிள் கொடுத்தார்.

சிறிது நேரம் இருந்தேன்.

சாமி மாடிக்குச் சென்ற பின் திரும்பினேன்.

நிறைய எதிர்பார்ப்புகளுடன் போனவன் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

அவரது தெய்வீகத்தைப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் எனக்கில்லையோ?!


22 கருத்துகள்:

  1. உங்களுக்கு ‘அல்வா’ கொடுக்காமல் ஆப்பிள் கொடுத்தாரே அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. அதெப்டிங்க இப்படி பட்டும் படாம.....

    பதிலளிநீக்கு
  3. உங்கள் உள்ளுணர்வு சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஆப்பிளா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  5. மீள் பதிவு என்பதை போடாமல் விட்டு விட்டீர்களே ,ஏனென்றால் ,இப்போதெல்லாம் அந்த கதவைத் திறந்தால் காற்று வருவதில்லை ,நாற்றம்தானே வருகிறது?
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மீள்பதிவல்ல.பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் தாமத பதிவு!பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது நினைவு கூர்ந்திருக்கிறேன்!
      நன்றி

      நீக்கு
  6. என்ன பித்தரே! இது உண்மையா ?

    பதிலளிநீக்கு
  7. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  8. அந்த ஆசாமியிடம் சிக்காமல் தப்பித்துவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  9. எல்லா ஆசாமிகளிடமிருந்தும் தப்பித்து வருகிறீர்களே, அதுவே நீங்கள் செய்த புண்ணியம்!

    பதிலளிநீக்கு