அகத்தியர் மீண்டும் வரவேண்டும்.
வந்தேயாக வேண்டும்.
நம் அனைவரின் பிரார்த்தனைகளும் அதுவாகவே இருக்கட்டும்.
ஏன் வரவேண்டும்?
எதற்காக வரவேண்டும்?
வந்து என்ன செய்ய வேண்டும்?
இவ்வாறெல்லாம் கேள்விகள் எழுகின்றன அல்லவா?
அந்நாளில்,மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேச்வரப் பெருமானுக்கும்
திருமணம் நடந்தது
எங்கே?
மீனாட்சி ஆட்சி செய்த மதுரை நகரில்தான்.
அத்திருமணத்துக்கு,தேவர்கள்,முனிவர்கள்,மாந்தர்கள் என அனைவரும்
மதுரையில் குழுமினால்,தென் தமிழகம் தாழ்ந்து வட திசை உயர்ந்து விடும் என்பதால்,இறைவனால்,
வடக்கே
சென்று இருந்து நிலத்தைச் சமப்படுத்துமாறு குறு முனி பணிக்கப்பட்டார்.
இப்போது அது போன்ற ஒரு நிலை அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி உருவாக
இருக்கிறது.
உலகத்தின் எல்லாத் தமிழ்ப் பதிவர்களும் மதுரை மாநகரில் அன்று குழும
இருக்கிறார்கள்.
அந்தச் சுமையில் தென் தமிழகம் தாழும் என்பது நிச்சயம்.
எனவே மீண்டும் அகத்தியர் வர வேண்டும்!
அகத்தியருக்குத் திருமணத்தை அவர் இருந்த இடத்திலேயே காணத்தந்து
இறைவன் அருள் புரிந்தான்
சென்னையை விட்டு விலக இயலாத எனக்கு அது போல் விழாவின் காணொளியே
ஆறுதலாகட்டும்.
விழா வெற்றி பெற இப்போதே வாழ்த்துகிறேன்