தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 25, 2012

ஏதாவது சாப்பிட்டு விட்டு வாங்க!


              இடைவேளை

      பாப்கார்ன் கொறிச்சிட்டு, 7 அப் குடிச்சிட்டு  வாங்க!

                 Au revoir!

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

இன்று என்ன நடந்தது?என்ன செய்யலாம்?

 
இன்று அட்சய திரிதியை!

இந்நாளில் புராண காலத்தில் என்னவெல்லாம் நடந்தது?

திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.


குசேலர் துவாரகை சென்று கிருஷ்ணரைக் கண்டு அவல் அளித்துப் பெருஞ்செல்வம் பெற்றார்.
(இது பற்றிய எனது பழைய கவிதை----
     குசேலர்!
     பெற்றது இருபத்தேழு
     கற்றது எம்.பி.ஏ.மார்க்கெட்டிங்கா?
     விற்றது என்னவோ ஒரு பிடி அவல்தான்-விலையாய்ப்
     பெற்றதோ பெருஞ்செல்வம்!)


குபேரன்,லக்ஷ்மி தேவியைப் பிரார்த்தித்துத் தன் கருவூ லத்தை நிரப்பிக் கொண்டான்.

திரௌபதி அட்சய பாத்திரம் பெற்றாள். 

வியாசர் சொல்ல,விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங் கினார். ----------------

(தொடர்வது  சென்ற ஆண்டு அட்சய திரிதியை அன்று எழுதி வெளியிட்ட பதிவு.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எழுதியவை எல்லாம் மாறாத உண்மைகள்தானே!)





”என்ன சார்,காலையில் ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்தீங்க போல?”


”ஆமாம் சார்,பாயசம் செய்யத்தான்!”


“வீட்டில ஏதும் விசேஷமா? நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”


”வீட்டில இல்லை சார்,நாட்டிலேயே விசேஷம்தான். இன்னிக்கு அட்சய திரிதியை!”


“ஓகோ!அதுதான் பால் ,பாயசம், மல்லிப்பூவெல்லாமா! இன்னும் ஏதோ பாக்கி இருக்கு போலிருக்கே?”


”அதுக்குத்தான் மனைவியோடு நகைக் கடைக்குப் போகப் போகிறேன்.அவளுக்கு நகை வாங்க.”


”தங்க நகைதானே?”


”இல்லை.பிளாட்டினம் நகை.அதுதான் ரொம்ப நல்ல துன்னு  டி.வி யில் சொன்னாங்க!”


“வெண்மை நல்லது என்றால் வெள்ளி வாங்கலாமே?”


“விலை மதிப்பில்லாத பிளாட்டினம்தான் நல்லதாம்”


“என்ன வாங்கப் போறீங்க?”


“ஒரு சங்கிலியும்,பெண்டண்ட்டும்.அதுதான் ஒரு நடிகையும் வாங்கினாங்களாம்”


சில ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!


க்ஷயம் என்ற வட மொழிச் சொல்லுக்கு ,வடமொழி-தமிழ் அகராதியில் பொருள்-அழிவு,நஷ்டம்,வீழ்ச்சி,குறைதல்.


அக்ஷயம் என்பது அதற்கு எதிரான பொருளைத் தரும்.-அதாவது குறையாதது அல்லது வளர்வது.


எனவே இந்த நாளில் செய்யப்படும் எதுவும் வளரும் என்ற நம்பிக்கை!


முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்; அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!


அந்த நம்பிக்கையிலாவது சில பசித்த வயிறுகளுக்கு நல்லது நடந்தது.தானம் செய்தவர் களுக்கும் ஒரு மன நிறைவு இருந்தது.


ஆனால் இன்றோ!


உங்களுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாவிடினும்,கொடுக்கின்ற அந்த மகிழ்ச்சிக்காக,சில பசித்த வயிறுகள் நிறையும்,அந்த முகங்கள் மலரும்,அந்த மனங்கள் வாழ்த்தும் என்ற காரணத்துக்காக இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே!


இந்த தானத்தை நகைக்கடைக்காரர்களே கொஞ்சம் பெரிய அளவில் செய்யலாமே!

இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே! கடையில் ஒரு அறிவிப்புப் பலகையில் இதை வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் காண வைத்தால் ஒரு விளம்பரமும் ஆகுமே!


பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகை யின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!


அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!


கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!





திங்கள், ஏப்ரல் 23, 2012

வலைப்பூ தந்த வருமானம்!


சார்!நான் தினம் உங்க ரூம் ஜன்னலைக் கடந்துபோகும் போது பார்க்கிறேன்,  கணினி முன்னால உட்கார்ந்து ஏதோ தட்டிட்டே இருக்கிங்களே?என்ன செய்றீங்க?”  பக்கத்து ஃப்ளாட்காரரின் கேள்வி.

வலைப்பதிவில் எழுதிட்டிருப்பேன்என் பதில்.

எப்பவும் அதே வேலையா இருக்கீங்களே?நிறைய வருமானம் வருமோ? நிறைய சம்பாதிச்சிருப்பீங்களே?” அவர்.

எதிலுமே பணத்தைத்  தேடும்  சராசரி மனிதர்.

அவருக்குத் தெரியாது நான் என்ன சம்பாதித்திருக்கிறேன் என்று.

ஆம் .விலை மதிப்பில்லாத ஒன்றைச் சம்பாதித்திருக்கிறேன்.ஒன்று அல்ல;பல.

என்ன அது?

நட்பு.

எதையும் எதிர்பார்க்காத நட்பு.


இந்தியா மட்டுமன்றி உலகம் முழுதும் விரிந்து கிடக்கும் நட்பு.


வயது வேறுபாட்டைக் கடந்த நட்பு.


அகத்தியனின் பார்க்காமலே காதல் போல்,இது எழுத்து மூலமாக மட்டுமே பார்த்துப் பழகிய நட்பு.


முன்பெல்லாம் பேனா நண்பர்கள் என்று கடிதத்தொடர்பின் மூலம் நண்பர்களாவார்கள்.


இப்போது கடிதம் எழுதுவது என்பது ஒரு அரிய கலையாகி விட்டது.



நான் வலைப்பதிவு தொடங்கும்போது,இப்படி நண்பர்கள் பலர் கிடைப்பார்கள் என நினைக்கவேயில்லை.


இல்லத் திருமண நிகழ்ச்சிக்குத் தொலைபேசியில் அழைத்துப் பின் அழைப்பிதழும் அனுப்பிய இதுவரை சந்திக்காத நண்பர்.


என்னில் பாதி வயதுக்கும் குறைவாக இருப்பினும் என்னையும் ஒரு யூத் பதிவராக ஏற்றுக் கொண்டு,கடற்கரைச் சந்திப்புக்கும்,நாடகங்களுக்கும் அழைக்கும் ஒரு நண்பர்.


வெளியூரிலிருந்து சென்னை வந்த நாளில்,நண்பருடன் என்னை வந்து சந்திக்கும்  நண்பர்.


சந்தித்துச் சென்றபின்  என்னைப் பற்றி ஒரு பதிவே எழுதி என்னைப்  பெருமைப்படுத்திய நண்பர்.


பிரபல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்க வரும்போது என்னையும் சந்தித்து உரையாடிச் சென்ற ஒரு நண்பர்


தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு உற்சாகம் தரும் கவி நண்பர்.


வெளிநாட்டிலிருந்து ஒரு வேலையாகச்  சில நாட்களே வந்திருக்கும்போது, குறைந்த நேரமே கிடைத்தாலும் அதில் என்னை வந்து(நண்பருடன்) சந்தித்து கலகலப்பாக உரையாடிய நண்பர்.



இப்படி இன்னும் எத்தனையோ முகம் தெரியாத இனிய நட்புகள்.சந்தித்தவை சில;சந்திக்காதவை பல.


ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புக் கொள்ளலாம் என்பதற்கு சிறந்த உதாரணம்-கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பு. அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ள வில்லை என்றாலும்  இன்றும் பேசப்படும் ஒரு அரிய நட்புக்கு இலக்கணம் வகுத்துச் சென்று விட்டார்கள்.


இன்று இந்தப் பிசிராந்தைக்குப் பல கோப்பெருஞ்சோழர்கள் கிடைத்திருக் கிறார்கள்.


இந்த நட்பை நினைக்கும்போதே மனம் நெகிழ்ந்து போகிறேன்.


இத்தகைய நட்புகள் கிடைக்க வழி வகுத்த இப் பதிவுலகை வாழ்த்துகிறேன்.


வாழ்க நட்பு.


ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

இன்றும் மரத்தில் வசிக்கும் மனிதர்கள்!இதுதான் இந்தியா!!


 ஐயா பாரதி!நீ இல்லையே இன்று?

இருந்தால் என்ன பாடியிருப்பாய்?

“நெஞ்சு பொறுக்குதில்லையே?”

”ஜகத்தினை அழித்திடுவோம்?”

உன் ரௌத்திரம்   எப்படி வெளிப்பட்டிருக்கும்?

ஆடினோம்,பள்ளுப்பாடினோம்

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என 1947 இல்.

65 ஆண்டுகளில் என்ன சாதித்திருக்கிறோம்?

மார் தட்டும் சாதனைகள்தாம்-

அக்னி ஏவுகணையும்,சந்திராயனும்!

ஆனால் நம் மக்களில் ஒரு பிரிவினர்,இன்னும் கற்காலத்திலேயே வாழ்கின்றனரே,அதை ஏன் எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை?

யாரும் செல்ல முடியாத தொலைதூரத்தில் உள்ள அடர்ந்த கானகத்தில் வாழ்கிறார்களா?

இல்லையே!

ஒவ்வொரு தேர்தலிலும்,அவர்களுக்கும் குவார்ட்டரும் ,பிரியாணியும் தந்து வாக்குக்களைச் சேகரிக்கும் பணியை அரசியல் கட்சிகள் செய்து கொண்டுதானே இருக்கின்றன?

தொழில் நுட்ப மையமான பெங்களூருவிலிருந்து 250 கி.மி.தொலைவில்  உள்ள, சோமவார் பேட்டை தாலுகாவில் உள்ள பனவாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜேனு குருபா என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் இன்றும் மரங்களின் மேல்,50-60 அடி உயரத்தில் வீடு கட்டிக் குடும்பமாக வசிக்கிறார்கள்! அவர்களுக்கு அதில் ஒரே ஆறுதல்!யானைகளின் தொந்தரவு இல்லையென்பதே!

அவர்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை!

இந்தச் செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்ட(!) அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர் தாம் விரைவில் இங்கு சென்று பார்த்து அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த(!) முயற்சி செய்வதாகக் கூறினாராம்!

ஒரு வேளை 50-60 அடி உயரத்தில் இல்லாமல் 100 அடி உயரத்தில் வசிக்க வகை செய்வாரோ!

நடக்கலாம் நடக்கலாம். எதுவும் நடக்கலாம்.

ஏனெனில் “மேரா பாரத் மகான்!”இந்தியா ஒளிர்கிறது!


(இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியே ஆதாரம்)



சனி, ஏப்ரல் 21, 2012

ரஜினி! சொன்னாலே சும்மா அதிருதில்லே!

ஒரு விவசாயி தன் நிலத்தில் ரஜினியின் உருவத்தை சோளக்கொல்லை பொம்மைக்குப் பதிலாக வைத்தான்.

பறவைகள் எல்லாம் முந்தின வருடம் எடுத்துச் சென்ற தானியங்களைக் கூடத் திருப்பிக் கொண்டு வந்து தந்து விட்டன!
-------------------


உலகம் டிசம்பர் 2012 இல் அழியுமா?எந்தப் பைத்தியக்காரன் சொன்னது?

ரஜினி இப்போதுதான்,மூன்றாண்டு உத்தரவாதமுள்ள ஒரு மடிக் கணினி வாங்கியிருக்கிறார்!
---------------------------------


ரஜினி மூச்சு விடுவதில்லை!


காற்று அவர் நுரையீரலில் ஒளிந்து கொள்ள வருகிறது!
----------------------------------


இன்று மாலை ரஜினியை வானத்தில் பார்க்கலாம்.


அவர் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார்!

----------------------------


ரஜினியின் புகைப்படத்தை ஜெராக்ஸ் எடுக்கக் கொடுத்தார்கள்.


என்ன நடந்தது தெரியுமா?


ஜெராக்ஸ் எந்திரத்தின் பிரதி ஒன்று வந்தது!


-----------------------------
சும்மா அதிருதில்லே!

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

நாளை என்பது நம் கையில் இல்லை!

யார் மீதேனும் வருத்தமா
யாரோடேனும் சண்டையா
சரி செய்ய யாரும் இல்லையா?
நீங்களே முயலுங்கள் 
உடன் சரி செய்ய!
இன்று அவரும் விரும்பலாம்
உங்களுடன் நட்பாயிருக்க
இன்றில்லையென்றால்
நாளை காலம் கடந்து போய் விடலாம்!

யாரையேனும் நேசிக்கிறீர்களா,
அவருக்கு அது தெரியாமலே?
உடனே சொல்லி விடுங்கள்
இன்று அவரும் உங்களை நேசிக்கலாம்
நாளை காலம் கடந்து விடக்கூடும்!

உங்களை மறந்து விட்டாரென்று எண்ணும்
நண்பர் மீது இன்னமும் நட்பா?
உடனே சொல்லி விடுங்கள்!
அவர் இன்னும் உங்கள் மீது
நட்புடன் இருக்கலாம்.
நாளை காலம் கை நழுவிப் போனதாகலாம்!

 எவருடையதேனும் நட்புஅணைப்புக்கு ஏக்கமா?
இன்றே வேண்டும் எனக் கேட்டு விடுங்கள்.
கட்டிப்பிடி வைத்தியம்
அவருக்கும் தேவைப்படலாம்.
இன்று நீங்கள் கேட்கத் தவறினால்
நாளை காலம் கடந்து போயிருக்கலாம்!

உண்மையான நண்பர்களைப்
பாராட்டுகிறீர்களா?
இன்றே சொல்லி விடுங்கள்.
அவர்களும் உங்கள் நட்பைப்
பாராட்டக்கூடும்
இன்று அவர்கள் எங்கோ
விலகிச் சென்று விட்டால்
நாளை கால தாமதமாகி விடலாம்.

இறுதியாக
உங்கள் பெற்றோரை அதிகமாக நேசிக்கிறீர்களா?
இன்று வரை அதை  வெளிக்காட்டியதில்லையா?
உடன் செயல் படுங்கள்.
இன்று அவர்கள் இருக்கிறார்கள் உங்களுடன்
உங்கள் அன்பை வெளிக்காட்ட
நாளை ?