நண்பர் வே.நடனசபாபதி அவர்கள்,என்னை மீண்டும் பள்ளிக்குப் போகச் சொல்லி,கணேஷ் சொன்னது போல் ‘மாட்டி விட்டு விட்டார்’ஆம் என் தோளில் பள்ளிப்பையை மாட்டி விட்டு விட்டார்!இதோ போகிறேன்.!
என் முதல் பள்ளி அனுபவமே மறக்க முடியாததுதான்.சென்னையில் ,என் தந்தை வாழ்ந்த காலத்தில் என் ஐந்தாவது வயதில் என் அன்னை என்னைப் பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினார்.அது என்னவாயிற்று?70 களில் ‘கணையாழி’ வாசிக்க ஆரம்பித்த புதிதில் ,அதன் பாதிப்பில், நான் எழுத முயன்ற ஒரு புதுக்கவிதை போன்ற ஒன்று அதைச் சொல்கிறது—
“சின்ன வயதினில் என்னைப் பள்ளிக்கு
தூக்கிச் சென்ற துரைசாமியின்
சட்டையை கிழித்து விட்டேன்.
இன்றவரைத் தேடுகிறேன்.
சட்டைகள் வாங்கித் தர!
எங்கே இருப்பாரோ எங்க துரைசாமி?!
ஆக ஒரே நாளில் சென்னைப்பள்ளி வாழ்க்கை முடிந்து போனது!
(மீண்டும் சென்னைக்கு வரப்போவது என் பட்ட மேற்படிப்புக்காகத்தான்.என் சென்னைக் காதல் பற்றி அறிய விருப்பமா?பாருங்கள்—
என் தந்தை மறைவுக்குப்பின்,நாங்கள் குடும்பத்துடன் என் தாத்தாவுடன் (அம்மாவின் அப்பா) சாத்தூருக்குப் புறப்பட்டோம்.ரயில் பிரயாணத்தின்போது என் தாத்தா ”ஊருக்குப் போனதும் ஒரு பயலை ஸ்கூல்ல போடணும்” என்று சொல்வதும்,அதற்கு நான் ”ரயிலிலிருந்து குதிச்சிடுவேன்” என்று சொல்வ துமாகப் பயணம் நிறைவேறியது.
சாத்தூர் சென்றதும்,பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். -சா.இ.நா.எட்வர்ட் உயர்நிலைப்பள்ளியோடு சேர்ந்த ஆரம்பப்பள்ளி.(S.H.N.Edward high school). இப்போதெல்லாம் ஜாலியாகப் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைக் கண்டால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பள்ளிக்குப் போகாமல் டபாய்க்கும் சுகத்தை அவர்கள் இழந்து கொண்டி ருக்கிறார்கள்!நான் முதல் வகுப்பு(ஒண்ணாப்பு) படிக்கும்போது பள்ளிக்குப் போவது போல் சென்று விட்டு எங்காவது பதுங்கிக் கொள்வேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் கண்டுபிடிக்கப்பட்டுப் பள்ளிக்கு அனுப்பப்படுவேன்!
சில நாட்களுக்குப் பின் இந்த ஆட்டம் போரடித்து ஒழுங்காகப் பள்ளிக்குப் போக ஆரம்பித்தேன்!ஏற்கனவே 5 வயது நிறைந்து விட்ட படியால்,இரட்டை உயர்வு கொடுத்து மூணாப்புக்கு அனுப்பும் நோக்கத்தில் எனக்கு தனிப் பயிற்சி கொடுக்கப்பட்டது.அந்த ஆசிரியர்,குருநாத ஐயர்,காலை 7 மணிக்கு வந்து என்னை சிரமப் படுத்துவார்.இப்போதெல்லாம்,சிறுவர்களுக்கு பத்தாம் வாய்ப்பாடு கூடத்தெரிவதில்லை. ஆனால் அவர் எனக்கு மாகாணி, அரைக்கால், முண்டாணி வாய்ப்பாடுகள் கூடச் சொல்லிக் கொடுத்தார். அதன் பலனாய் நான் நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு அனுப்பப்பட்டேன். மனக்கணக்கில் எப்போதுமே நூறு மதிப்பெண்கள் வாங்கினேனென்றால் அதற்கு அந்த ஆசிரியர் அமைத்துத் தந்த அடித்தளமே காரணம்.
அப்போது சீருடை எல்லாம் கிடையாது.காலில் செருப்பு கூடக் கிடையாது. சாத்தூரின் கரிசல் மண்ணில் கால் புதைய நடந்தே பள்ளி செல்வேன்.
ஐந்து வகுப்புகள் முடித்தபின் அந்த உயர்நிலைப்பள்ளியிலேயே முதல் படிவம் என்று சொல்லப்பட்ட ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். ஓராண்டுக்குப் பின் சாத்தூர் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
என் அண்ணா கோவில்பட்டியில் வேலை பார்த்து வந்தார்.அங்கு நாங்கள் குடி புகுந்தோம்.புதிய பள்ளி,புதிய நண்பர்கள்,புதிய வாழ்க்கை புதிய பேச்சு (என்னலே,வாலே,போலே). கோவில்பட்டி வ.உ.சி.போர்ட் உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் படிவத்தில்(ஏழாம் வகுப்பு) சேர்ந்தேன்.அந்த வாழ்க்கையில் முக்கியமாக நினைவு கூரவேண்டியவை இரண்டு.ஒன்று –ஹாக்கியில் என் திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.திரு தயான்சந்த் அவர்களே ஒரு முறை பள்ளிக்கு வந்து சிறிது பயிற்சியளித்தார்! இரண்டாவது,பத்தாம் வகுப்பில் கணிதப் பாடத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பம்! நண்பர்கள் பயமுறுத்தியதால் நான் பொதுக்ணிதத்தைத் தேர்வு செய்தேன்.பின் என் தாத்தா அறிவுரைப்படி, கலவைக்கணிதம் எடுத்தேன் (composite maths) .அதுதான் பின்னர் கணிதத்தில் பட்ட மேற்படிப்பு வரை என்னைக் கொண்டு சென்றதோ?என் கோவில்பட்டிப் பள்ளிக்கூட வாழ்வு பத்தாம் வகுப்புடன் முடிவடைய,எஸ்.எஸ்.எல்.சி படிப்பு சிவகாசியில் அமைந்தது.என் அண்ணாவின் பணி இட மாற்றமே காரணம்.
கோவில்பட்டி வ.உ.சி.பள்ளியில்,பின்னாளில் படித்தவர்தான் பிரபல பதிவர் செங்கோவி!
சிவகாசி S.H.N.V உயர்நிலைப் பள்ளி என்னுள் மறைந்திருந்த பல திறமைகளை, வெளிக் கொண்டு வந்தது.ஒரு நடிகனாக அறியப்பட்டதோடு (குட்டி நடிகர் திலகம் பற்றி அறியப் பாருங்கள்
என் தமிழாசிரியர் திரு மீனாட்சிசுந்தரம் அவர்களின் முயற்சியால்,ஒரு பேச்சாளனாகவும் உருவானேன். பேச்சுப் போட்டி,பாட்டுப் போட்டி என்று எனது எல்லைகள் விரிவடைந்தன.மிகக் கண்டிப்பானவரான தலைமை ஆசிரியர் திரு பசுபதி அவர்கள் கூட என்னிடம் கனிவுடன் நடந்துகொள்வார்.நடிகன் என்ற முறையில் ஒரு செல்லப் பிள்ளையாகவே இருந்தேன்.படிப்பிலும் சிறப்பாக இருப்பினும், தலைமை ஆசிரியர் என் அண்ணாவிடம் ஒரு முறை சொன்னார் ”தன்னம்பிக்கை இருக்கலாம், ஆனால் இவன் அதீத தன்னம்பிக்கை உடையவன் ”(over-confident).என் கணித ஆசிரியருக்கும் கொஞ்சம் வருத்தம்தான்”நடிப்பு வந்து படிப்பைக் கெடுத்து விட்டது ’என்று.
இதே பள்ளியில் பல ஆண்டுகளுக்குப் பின் படித்தவர்தான்,பிரபல பதிவர்,நண்பர் தனசேகரன் அவர்கள் .
தொடர விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்!
பள்ளி வாழ்க்கை இதோடு முடிந்தது.இனி கல்லூரி வாழ்க்கை.யாராவது ஒருவர் அதைப்பற்றி எழுதி விட்டு ஐந்து பேரைத் தொடரச் சொல்வார்.அவர்கள் ஐவரும் ஆளுக்கு ஐந்து பேரைத் தொடரச் சொல்ல இப்படியே................ஆளை விடுங்கப்பா!இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை!!