திருப்பூரில் இருந்த காலம்.
பலர் வாடிக்கையாளர் என்ற நிலை தாண்டி என்
நண்பர்களாக இருந்தனர்-குறிப்பாக ராமதாஸ்,
கலந்தர்,நாகரத்தினம்,ராமசாமி(ரமேஷ்) இவர்கள் போல்.அங்கு செட்டியாரில்
ஒரு பிரிவு உண்டு. பன்னிரெண்டாறு செட்டியார் என்று சொல்வார்கள்.அவர்களது கோவில் ஒன்று பாலக் காட்டுக்குப் பக்கத்தில் உள்ள பாறை என்ற ஊரில் இருக்கிறது.அம்மன் பெயர் மாங்கரை யம்மன்..ஒவ்வோர் ஆண்டுமொரு நாளன்று
அம்மனுக்கு விசேட பூசைகள் நடக்கும்.அநேகமாக அந்தப் பிரிவைச் சேர்ந்த
அனைவரும் அங்கு கூடியிருப்பர்,
ஒரு முறை நாகரத்தினம் என்னையும் அவர்களுடன்
வருமாறு அழைத்தார்.ஏற்றுக் கொண்டேன்.
ஒரு நாள் இரவு காரில் புறப்பட்டோம் நிதானமாக
நள்ளிரவு அங்கு போய்ச் சேர்ந்தோம். மறுநாள்
மாலைதான் பூசை.இரவு எங்களுக்கான அறையில் படுத்துறங்கினோம்.
காலை எழுந்து குளித்து முடித்த பின் காலை
உணவுக்கு அழைத்துச் சென்றார்.சுடச்சுட இட்லி,
வடை,சட்னி,சாம்பார்.மிருதுவான இட்லிகள்,சுவையான சாம்பார்.இட்லிகள் (எத்தனை என்று கேட்கக்கூடாது) வேகமாக உள்ளே போயின.பின்னர் மணம்
நிறைந்த காபி.
இனி என்ன செய்வது?
ஒரு பெரிய குழு சீட்டாட்டத்தில் மும்முரமாகி விட்டது.நான் சிறிது நேரம்
அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரம் தெருக்களைச் சுற்றி வந்தேன்.சில மணித்துளிகள் தூங்கினேன்.ஒரு வழியாக
மதிய உணவுக்கான நேரம் வந்து விட்டது .”சார் நீங்க தூங்கிட்டீங்க.மதிய
உணவில் பால் பாயசம் இருக்கு.நான் போய் டேஸ்ட் பாத்துட்டு வந்துட்டேன்,சூப்பர்”
அவர் சொன்னதைக் கேட்டதும் பசி வந்து விட்டது.வழக்கமான வடை பாயச
விருந்துதான். அவர் சொன்னது போல் பால் பாயசம் பிரமாதம்.இலையில் இரண்டு மூன்று முறை
ஊற்றிக் குடித்தேன் ..ஒரு முறை லட்டையும் அதோடு சேர்த்து….!ரத்தினம் கேட்டார்”சார்!
டம்ளரில் தரச் சொல்லட் டுமா ?” விடுவானேன்.அதையும் வாங்கிக் குடித்தாயிற்று.இது செரிக்க
ரெண்டு நாள் ஆகும் போல் இருக்கிறதே என எண்ணினேன்.
மாலை நானும் அவரும் ஒரு உள்ளூர்ச் சிற்றுலா சென்று வந்தோம்.
திரும்பி வரும்போது அவர் சொன்னார்.”சார்!சாயந்திரம் டிபனுக்குப்
பஜ்ஜி போடறாங்க.நான் நமக்காக ஸ்பெசலா சேவை போடச் சொல்லியிருக்கேன்.”
அடக் கடவுளே! மதியம் சாப்பிட்டதே நெஞ்சு வரை இருக்கிறது.இப்போது
இது வேறா?அவர் விடவில்லை அங்கு போய் அதையும் கொட்டிக் கொண்டேன் ….ஏவ்!சும்மா சொல்லக்கூடாது
சுவை சூப்பர்!
மாலை ஆறு மணிக்குப் பூசை ஆரம்பமாயிற்று.சிறப்பான பூசை.முடியும்போது
மணி 8.30.பூசை நடுவில் நண்பர் எழுந்து போய் வந்தார்.என் அருகில் அமர்ந்து சொன்னார்”சார்!
ராத்திரிக்குக் கொழுக்கட்டை போடப்போறாங்க!”
நானும் இனிப்பு உப்புக் கொழுக்கட்டைகள் போலும் என நினைத்தேன்.
பூசை விமரிசையாக முடிந்த்து.எல்லோரும் சாப்பிடப் போனோம்.பரிமாறப்பட்டது
பிடி கொழுக்கட்டை/உப்புமாக் கொழுக்கட்டை,சட்னியுடன். அங்கு சமைப்பவர்கள் உண்மையாகவே
விற்பன்னர்கள்தான்.
இப்படியாக இரண்டு நாளுக்கான உணவை ஒரு நாளில் சாப்பிட்டாயிற்று.அவ்வை
சொன்னது தப்பாகிப் போய் விட்டதோ…”ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்,இரு நாளைக்கேல்
என்றால் ஏலாய்”
அதுதான் இல்லை.
ஊர் திரும்பிய பின் வயிறு குழப்பமாகி மருத்துவரிடம் சென்று மருந்து
வாங்கிச் சாப்பிட்டு…. …..! இரண்டு நாள் பட்டினி!...”லங்கணம்
பரம ஔஷதம்”
கோவிலுக்குப் போய் மாலை வரை பூசை பற்றி நினையாமல் சாப்பாடு பற்றியே
நினைத்திருந்த இந்தப்பயணம்…............
.
.
வயிற்றுக்கான ஆன்மீகப் பயணம் அன்றி வேறென்ன?!