தொடரும் தோழர்கள்

சுய புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுய புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

சென்னைக்காதல்-2

காதலிக்க நேரமில்லை’ என்று ஆரம்பமாயிற்று என் சென்னைக் காதல்!

பத்தொன்பது வயது வரை சிற்றூர்களிலேயே வாழ்ந்து பழகிய ஒருவன்,இருபதாவது வயதில் நகரத்துக்கு வந்தால் பிரமிப்பு ஏற்படாதா?

அந்தத் திரை அரங்கம்,,ஓட்டல்,அவை தவிர முதன் முதலாகப் பார்த்த அலை மோதும் கடல்,பரந்த கடற்கரை எல்லாமே புதிய அனுபவம்தான்.கடலில் கால் நனைய நின்றது, தே.மா.ப.சு. சாப்பிட்டது,குழந்தையாக மாறி மணலில் ஓடியது எல்லாமே புது அனுபவம்தான்.எல்லாவற்றையும் விட வியப்பை எற்படுத்தியது,அவன் பார்த்த இளம் பெண்கள்,அவர்களின் நாகரிக உடை,அவர்கள் பேசிய ஆங்கிலம்.

மெஸ்ஸில் சுவை உணவு
லஸ்ஸில் விண்டோ ஷாப்பிங்
பஸ்ஸில் ஊர் சுற்றல்
மிஸ்ஸிங்—வேறென்ன படிப்புதான்!
(கடைசியில் மேக்கப் பண்ணிட்டோமுன்னு வச்சிக்குங்க!)

கல்லூரி விடுதியில் மிக அருமையான சைவ உணவு கிடைத்தது.ஞாயிறன்று தயாராகும் மோர்க்குழம்பு மிகப் பிரசித்தம்.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்!பீன்ஸ் பொரியல்,மைசூர் ரசம்,தயிர்.
சாப்பிட்ட சாப்பாடு செரிக்க வேறென்ன செய்வது?—ஊரைச் சுற்று!

லஸ்!மயிலையின்ரத்த நாளம்!இன்றும் இருக்கும் சுக நிவாஸ்-மங்களூர் போண்டா பிரமாதம்.இல்லாமல் போய் விட்ட சாந்தி விஹார்.அன்றைக்கு ’காஃபி டே’ யோ,ஜாவா க்ரீனோ’ ‘மோக்கா’ வோ இல்லை—சந்திப்பதற்கும்,சல்லாபிப்பதற்கும்.(இப்போதெல்லாம் இம்மாதிரி இடங்களில் எழுதுகிறார்கள்—’காஃபியும், பேச்சும்’,காஃபியும் அதற்கு மேலும்,’என்றெல்லாம்!

அப்போது எங்களுக்கு இருந்ததெல்லாம் சாந்தி விஹார் தான்.வெறும் காஃபி மட்டும் குடிப்பதற்காகக் கூட்டமாய்ப் போய் அரைமணிக்கும் மேல் அங்கு அமர்ந்து பேசி விட்டு(பார்த்து விட்டும்!) வருவோம்.இல்லையென்றால், குளக்கரையில் இருந்த உடுப்பியின் ரூஃப் கார்டனில், மணக்கும் நிகரற்ற குழம்பியுடன் ஊர் வம்பு!

வெள்ளியன்று,பக்தி அதிகமாகி விடும்!கபாலீச்வரரையும், கற்பகாம்பாளையும், பார்க்காமல் இருக்க முடியாது—நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்!!அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!

லஸ்ஸிங்கும்(லஸ்ஸுக்குப் போய் சுற்றி விட்டுப் பார்த்து விட்டு வருவதற்கு நாங்கள் வைத்த பெயர்),கோவிலிங்கும் இல்லாத நாட்களில் இருக்கவே இருக்கிறது அழகிய சாந்தோம் கடற்கரை.(பீச்சிங்).முன்பே எழுதியது போல சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத ,அழகிய கடற்கரை.இன்று இல்லாமல் போய் விட்டாலும் என் நினைவில் நிற்கும்,நினைவில் கலந்து விட்ட கடற்கரை.கச்சேரி ரோடு வழியாக நடந்தே போய்க் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு நடந்தே திரும்பி வருவோம்.

இன்று பெரிய பெரிய வணிக வளாகங்கள் இருக்கலாம்.ஆனால் அன்று சிறிய ’லாக்ஸ் அண்ட் லாக்ஸ்’, கடையில் பொருள் வாங்கிய(அல்லது பார்த்துவிட்டு வாங்காமல் வந்த),சுகமே தனிதான்!அச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றே!) ,கடைக்காரரின் தனிக் கவனிப்பு எல்லாமே மறக்க முடியுமா?

சனிக்கிழமை இரவுகள் விடுதியில் கட்டவிழ்த்து விட்ட இரவுகள். பெரும்பாலும் சினிமா பார்க்கும் நாட்கள்.இன்றில்லாத அரங்குகளான மினர்வாவில் ‘ஹடாரி’ குளோபில் முதல் நாள் முதல் காட்சி ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” சஃபைரில் ‘க்ளியோபாட்ரா’,’மை ஃபேர் லேடி’,சஹானிஸ்(ராஜகுமாரி)யில் ’சரேட்’ ’டாக்டர்.நோ’’எல்ஃபின்ஸ்டன், ஓடியன் அரங்குகளில் பல ஆங்கிலப் படங்கள்,--மறக்க முடியுமா?

எல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்!

அவை பற்றிப் பின்னால் பார்ப்போம்!

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

சென்னைக் காதல்!

சென்னையின் மீதான என் காதல் எப்போது ஆரம்பமானது?
நான் பிறந்தது இந்த தரும மிகு சென்னையில்தான்.-மதராஸ்- திருவல்லிக்கேணியில்..ஆனால் குடும்பத்தலைவரான என் தந்தையின் மறைவுக்குப் பின் ஐந்து வயதே நிறைந்த நான் புலம் பெயர வேண்டியதாயிற்று!தென் தமிழ்நாடு எங்களை வரவேற்றது.எனவே அந்த வயதுக்குள் என் சென்னைக் காதல் சாத்தியமில்லை!

பின் என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது .சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி என்று பல இடங்களில் தொடர்ந்தது.பள்ளி கோடை விடுமுறையில் ஒரு முறை என்னை சென்னையில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பவதாக என் அண்ணா சொல்லியிருந்தார்;நானும் சென்னையில் போய் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை.சில நாட்கள் மிக வருத்தத்தில் இருந்தேன்.எனவே காதல் தள்ளிப் போய் விட்டது(நான் என்ன காதல் கோட்டை அஜித்தா,பார்க்காமலே காதலிக்க!)

பின் கல்லூரி வாழ்க்கை.வங்கி ஊழியரான என் அண்ணா செல்லும் ஊர்களில்லாம் என் கல்வி தொடர்ந்தது போல்,புகுமுக வகுப்பும் பட்டப் படிப்பும் உத்தமபாளையத்தில் தொடர்ந்தன.சென்னை வெறும் கனவாகவே இருந்தது.கணிதத்தில் பட்டம் பெற்ற பின்,பட்ட மேற் படிப்புக்காக விண்ணப்பம் அனுப்பும் நேரம் வந்தது .அப்போதெல்லாம், விண்ணப்பம் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதில் முன்னுரிமை அளித்து மூன்று கல்லூரிகளின் பெயர் குறிப்பிட வேண்டும்.இங்கேதான் விழுந்தது காதலின் வித்து!முதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்!சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து,கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்!) சென்னை சென்று அடைந்தேன்!

முதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.அதன்பின்,மவுண்ட் ரோடு மதுபன் ஹோட்டலில் போண்டா சாம்பார்,காபி,கடைசியில் மெரினா கடற்கரை.

சென்னையின் திரையரங்கும்,ஸ்பூனால் வெட்டியெடுத்துச் சாப்பிட்ட சாம்பாரில் மிதக்கும் மைசூர் போண்டாக்களும் , பிரம்மாண்டமான மெரினா கடற்கரையும்,ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் நீட்டும் வங்காள் விரிகுடாவும்,என்னை சென்னையின் பால் ஈர்த்தன.

காதல் தொடங்கியது!

மதராஸில்,முதலில் அன்று பார்த்த திரைப்படத்தின் பெயரில் ஒரு வேடிக்கையான பொருத்தம்,அல்லது முரண்நகை இருக்கிறது!

அந்தப் படம்---”காதலிக்க நேரமில்லை”!

(இன்னும் வரும்)