தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 20, 2008

நானும் காமிராவும்


சமீபகாலமாக சில பதிவுகளில் கண்ட புகைப்படங்கள் என்னுள் ஒரு பொறாமையை ஏற்படுத்துகின்றன.எத்தனை ஆண்டுகளானலும் என்னால் ஆளுமைப்படுத்தமுடியாத ஒன்று புகைப்படக்கலை.

நான் பட்டப்படிப்புப் படித்து வந்த போது ஒரு வீட்டு விசேடத்துக்காக என் நண்பர் ஒருவரிடம் காமிரா இரவல் வாங்கி(agfa foldable)ப் படம் எடுத்துத்தள்ளினேன்.கடைசியாக எல்லாப்படங்களிலும் உருவங்கள் பாதியாகவோ அல்லது கலங்கியோதெரிந்தன.

எனது அடுத்த முயற்சி சென்னையில் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது.நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்ற போது என் நண்பர் காமிராவை என் கையில் கொடுத்து அனைவரையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுக்கச்சொன்னார்.யானை முன்னால் அவர்கள் நின்ற படத்தில் அவர்கள் தலைகள்,யானையின் தலை மட்டுமே தெரிந்தது.அதன் பின் எங்கு சென்றாலும் காமிரா என் கைக்கு வராமல் பார்த்துக்கொண்டனர்.

பின்னர் சென்னையில் பணி புரியும்போது பர்மா பஜாரில் ஒரு யாஷிகா காமிரா வாங்கினேன்.குடும்பத்துடன் காஷ்மீர் செல்லும்போது டில்லி செங்கோட்டையில் காமிராவை கீழே போட்டு அது சிறிது வாய் பிளந்து கொள்ள பயணத்தில் ஒரு படமும் எடுக்கவில்லை.அதோடு முடிந்தது என் புகைப்பட நிபுணராகும் ஆசை.அந்தக் காமிரா எங்கோ கிடக்கிறது.

என் காமிரா ராசி நான் படம் எடுக்கும்போது மட்டுமன்றி நான் எடுக்கம்படும்போதும் இயங்குகிறது.

துபாய் சென்ற போது என் மருமகன் பல இடங்களில் என்னையும் என் மகளையும் ‘க்ளிக்கினார்.புறப்படுவதற்கு முன் தினம் பிரிண்ட் எடுத்த போது அதில் ஒன்றுமே இல்லை.மிகப் பழைய ஃபிலிம் என்று ஸ்டூடியோக் காரர் சொல்லிவிட்டார்.

காமிராவுக்கு என்னிடம் என்ன விரோதமோ தெரியவில்லை.

(பழைய வீட்டிலிருந்து)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக