தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

நண்பர்கள் கவுண்டமணி,செந்தில்!



வாடா,மாங்கா மண்டையா!என்ன,கையிலே உடுக்கையோட வாரே?

அதுல ஒரு விசயம் இருக்குண்ணே.

அது என்னடா விசயம்?

நீங்க என்னோட நன்பர்தானேண்ணே?

ஆமாண்டா,போன சன்மத்துல நான் செஞ்ச பாவம்!

இந்த உடுக்கை காணாமப்போனா என்னோட கையாயிருந்து நீங்க உதவுவீங்கதானே?

எவண்டா சொன்னான்  அப்படி?

திருக்குறள்ள சொல்லிருக்கண்ணே!,உடுக்கை இழந்தவன். அப்படின்னு!

அடேஆட்டு மூளை மண்டையா!அதுக்கு அர்த்தம் வேறடா.இப்ப நீ நாலு போண்ணுக இருக்குற இடத்துல நிக்கறேன்னு வச்சுக்க.

ஆகா!கேக்கவே கிளு கிளுன்னு இருக்குண்ண!

உனக்கு அப்படி.அவங்களுக்கு?இப்போ ஒன் வேட்டி அவுருதுன்னு வச்சுக்க.

அய்யய்யோ!என்னண்ணே இது.

அதானே நீ என்னிக்கு வேட்டி கட்டிருக்க. என்னிக்கும் கோவணம்தானே பேச்சுக்கு வேட்டி கட்டிருக்கன்னு வச்சுக்க.அது அவுந்தா கை வேகமாப் போயி அதைத் தடுத்து சரியாக் கட்டும் இல்ல!அது மாதிரி நண்பர்கள் உதவி செய்யணுமாம்!

 புரிஞ்சிடுச்சு!அதாவது ஏன் வேட்டி அவுந்தா நீங்க கட்டி விடணும்னு வள்ளுவர் சொல்லிருக்காரு!இது பெரிய விசயமாண்ணே?

டே.ய்!ஒனக்கு புரிய வைக்க டாக்டர் மு.வ.வாலெயே முடியாது!ஓடிப்போடா!

 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


பரிமேலழகர் உரை:
உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.).

மு. வரதராசனார் உரை:
உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

இணையக் கோப்பெருஞ்சோழர்களுக்கு இந்தப் பிசிராந்தையின் நட்பு நாள் வாழ்த்துகள்

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

பரல்கள்



திருமணமான ஆண்களுக்கு இரு அறிவுரைகள்------
1)உங்கள் மனைவி விரும்பித் தேர்வு செய்யம் விஷயங்களைப் பற்றிக் கேலி செய்யாதீர்கள். நீங்களும் அவைகளில் ஒன்றுதான்!

2)நீங்கள் விரும்பித் தேர்வு செய்த விஷயங்கள் பற்றிப் பெருமைப் படாதீர்கள். உங்கள் மனைவியும் அவற்றில் ஒன்று.
..........................................................................

போட்டியின்றி வாழ்க்கையில்லை!
போட்டியென்பது நாம் சிறுவர்களாய் இருக்கும்போதே ஆரம்பமாகி விடுகிறது.

மூத்தவனாய்(ளாய்) இருந்தால் தம்பி தங்கைகளுடன்,இளையவனாய் இருந்தால் மூத்தவர்களுடன் போட்டி.
இதற்குத்தான் என்றில்லை. ஒரு ஆசனத்தில் அமர்வது,டிவி. பார்ப்பது,ஒரு பொருளை முதலில் உபயோகிப்பது என்று எதிலும் போட்டி.

பள்ளியில் படிக்கும் போது நான் ஓட்டப் பந்தயம்,உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல்,குண்டு எறிதல் என்று அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டதே இல்லை!

ஒரே ஒரு முறை,எட்டோ ,ஒன்பதோ படிக்கும்போது சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு எல்லைக் கோட்டை முதலாவதாகக் கடந்தேன்.ஆனால் பரிசு தரவில்லை!
...................ஏனெனில் அது ”ஸ்லோ சைக்கிள் ரேஸ்”!!

......................................................................

நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார்.பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நடத்துனர்,சில்லறை இல்லை,அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,நெல்லைக் காரர்,”பையக் கொடுங்க”.என்று சொல்லியிருக்கிறார்.,”ஏய்யா,நாந்தான் தரேன் என்று சொன்னேனே,உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட,பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.

பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.

”பஞ்சு கொண்டு ஒற்றினும் பைய,பைய என
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”
என்று கண்ணகியின் மென்மையான பாதங்கள் பற்றி சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது..

(கதம்ப மீ.ப)

வியாழன், ஆகஸ்ட் 04, 2016

தேவனின் துப்பறியும் சாம்பு



தேவனுக்கு எரிச்சலாக இருந்தது.

தினமும் இது நடந்து கொண்டே இருக்கிறது.அவனும் ஓரிரு நாட்களில் நின்று விடும்,அவசரத்துக்கு எவரேனும் செய்திருக்கலாம் என நினைத்தான்.

ஆனால் அது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

அவனுக்குக் கோபமெல்லாம் செய்பவர் யாராயினும் அவனிடம் சொல்லி விட்டுச் செய்திருக்கலாமே என்பதுதான்.

இதை இப்படியே விட்டு விடக் கூடாது,இன்று யார் என்று கண்டு பிடித்து விட வேண்டும்.

ஒரு முடிவுக்கு வந்தான்.

அறையில் அவனையும் சேர்த்து நான்கு பேர்.

தினம் முதலில் குளிப்பது அவன்தான் .

வழக்கம்போல் குளித்து விட்டு வந்தான். டாம்கோ தலை முடித் தைலத்தைத் தடவித் தலை வாரிக் கொண்டான்.

சில ஏற்பாடுகளைச் செய்தான்.

அறைக்கு வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்து பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டான்,அறை வாசலைப் பார்க்க ஆரம்பித்தான்.

வெங்கி குளிக்கப் போனான். குளித்து விட்டுத் திரும்பி அறைக்குள் போனான்

சங்கர் ---------------------------do--------------------------------------------------------------- 

கடைசியாக ரவி குளித்து விட்டுத் திரும்பி வந்து அறைக்குள் போனான்.இரு நிமிடங்களில் தலையைத் துண்டால் மூடிக் கொண்டு மீண்டும் குளியல் அறைப் பக்கம் ஓடினான்.

மாட்டிக் கொண்டான்.திட்டம் பலித்து விட்டது

தினம் அவனது தலைமுடித் தைலத்தைத் தடவிக் கொண்டது யாரென்று தெரிந்து விட்டது

டாம்கோ தைலத்தை எடுத்து விட்டு அதே இடத்தில் அதேபோல் இருக்கும் டாம்கோ சாம்பு சீசாவை வைத்துப் பல நாள் திருடனைக் கண்டு பிடித்தாயிற்று

சாதாரண சாம்பு இல்லை அது.

துப்பறியும் சா(ஷா)ம்பு!

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

நேற்றைய பதிவில் மறைந்திருக்கும் சோதிடம்



நேற்றைய பதிவில் குரு 8 ஆம் வீட்டுக்கு வருவதால் இராசிக்குத் தீமை என்று ஒரு 

கதை எழுதியிருந்தேன்.அதில் சோதிடமும் இருக்கிறது.குரு வரும் 8ஆம் வீட்டுக்கு 

சொந்தக்காரர் யார்,கதையில்-ரவி,அதாவது சூரியன்.சூரியனின் வீடு சிம்மம்;அதாவது 

சிம்மத்துக்குக் குரு பெயர்கிறார்.எந்தராசிக்குஇது எட்டாம் வீடு?—

மகரத்துக்கு.அதாவது மகர ராசிக்கு 8இல் வரும் குருவால் தீமை என்பதாகும்.இதற்கு 

என்ன செய்வது.யார் உதவியாவது கேட்க வேண்டும்.இங்கு உதவ உறுதியளிப்பவர்

 ஆய்வாளர் ராகவேந்திரர்.அதாவது குரு கெட்.டதனால்,தீமை விலக,குரு

 ராகவேந்திரரை நாட வேண்டும் என்பதாகும்.

இது எப்படி இருக்கு?!.............

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

குருப்பெயர்ச்சியும்,இராசியும்


அவர் எங்கள் குடும்ப நண்பர்.

சிறு வயது முதல் என்ன அறிந்தவர்.

சிறிது சோதிடமும் அறிந்தவர்.

அன்று என்னிடம் வந்தார்.

ஏதோ கவலையாக இருப்பது போல் காணப்பட்டார்.

”ஏன் ஐயா ,ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?”கேட்டேன்.

”தம்பி!உன்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்லவே வந்தேன்.எட்டாம் வீட்டுக்குக் குரு வந்து விட்டான்;இது இராசிக்கு நல்லதல்ல.ஏதாவது கேடு நேரலாம், உனக்குத் தெரியாததல்ல. அவனால் பல சங்கடங்கள் வந்து சேரும்.எச்சரிக்கையாக இருப்பது நல்லது” 
அவர் சொன்னர்.

நான் யோசிக்கலானேன்.குருவின் இந்தப் பெயர்ச்சி நிச்சயமாகஇராசிக்கு நல்லதல்ல. இதற்கு என்ன செய்வது?

நண்பன் மணியைக் கலந்து ஆலோசிக்கலாம் என அவன் வீட்டுக்குப் போனேன்

மணி கோவிலுக்குப் போயிருப்பதாக அவன் அம்மா சொன்னார்கள்

அவன்தான் தவறாமல் வெள்ளியன்று கோவில் செல்பவனாயிற்றே!

நானும் சென்றேன்

வணங்கி முடித்து வெளிச் சுற்றில் அமர்ந்தோம்.

அவனிடம் செய்தியைச் சொன்னேன்.

அவனும் அதிர்ந்தான்

இருவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம்,

மேலோட்டமான எந்தத் தீர்வும்  பலன் தராது.

வீட்டுச் சொந்தக்காரர் ரவியினால் ஏதாவது தீர்வு இருக்குமா?

நிச்சயம் தெரியாது

சிக்கலின் அடி வேருக்குப் போய்த்தான் அதை அறுக்க வேண்டும்.

அங்கிருந்து புறப்பட்டோம்

அந்த வீட்டை அடைந்தோம்”ஐயா!”

அவர் வெளியே வந்தார்-இராகவேந்திரன்

”வாங்க.பார்த்து பல நாட்களாகி விட்டன!””

”ஒரு முக்கிய செய்தி.உங்களிடம் தெரிவித்து விட்டால் நலம் எனத் தோன்றியது. அதனால்தான் வந்தோம்”

தகவலைச் சொன்னோம்.

”அவ்வளவுதானே..நான் பார்த்துக் கொள்கிறேன்.கவலைப்படவேண்டாம் என அவர்களுக்கும் சொல்லி விடுங்கள்.”

மனதின் சுமை இறங்கியதாக உணர்ந்தேன்.

இனி குருவைப் பற்றிக் கவலை இல்லை!

சில விளக்கங்கள்

இராசி….எங்கள் தெருவில் ஒன்றாம் இலக்க வீட்டில் வசிக்கும் கல்லூரி தேவதை.

குரு…..ஒரு பொறுக்கி.சில மாதங்கள் முன் இராசியிடம் தவறாக நடந்து கொண்டு  அவள் புகாரின் காரணமாகக் காவல் துறையால் கைது செய்யப்பட்டவன்.இப்போது அந்த் தெருவில் எட்டாம் இலக்க வீட்டுக்குக் குடி வந்திருக்கிறான்/எதற்கும் துணிந்தவன்

இராகவேந்திரன்…...காவல் துறை ஆய்வாளர் எங்கள் நலம் விரும்பி.நேர்மை தவறாதவர் 

(மீள் பதிவு)