தொப்பி பற்றிய ஒரு புதிய கதை இது!
நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்கள் தொப்பி பற்றிப் பல செய்திகளை வெளியிட்டிருந்தார்!
அதைப் படித்ததின் பாதிப்பே இக்கதை.
உங்களுக்கு முன்பே தெரிந்த கதையில் முடிவில் ஒரு சிறு மாற்றம்!
படியுங்கள்!
-----------
ஒரு தொப்பி வியாபாரி இருந்தான்.
அவன் ஒரு கூடை நிறையத்தொப்பிகளை எடுத்துக் கொண்டு வியாபாரத்துக்குப் புறப்பட்டான்!
வழியில் மிகவும் களைப்பாக இருந்ததனால்,கூடையைத்தலையினின்று இறக்கிக் கீழே வைத்துவிட்டு ஒரு மரத்தடியில் படுத்துக் கண்ணயர்ந்தான்.
கண்விழித்துப் பார்க்கும்போது கூடை காலியாக இருந்தது!
யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்களோ என்று நினைத்த வியாபாரி சுற்றும் முற்றும் பார்த்தான்.
மரத்தில் அமர்ந்திருந்த குரங்குகள் அவனது தொப்பிகளை அணிந்திருக்கக் கண்டான்.
ஒரு கல்லை எடுத்து வீசினான்.குரங்குகளும் கையில் அகப்பட்ட காய்களை வீசின.
தலையச் சொறிந்தான்.குரங்குகளும் தலையைச் சொறிந்தன.
உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
தான் அணிந்திருந்த தொப்பியை எடுத்துக் கீழே எறிந்தான்;குரங்குகளும் தாங்கள் அணிந்திருந்த தொப்பிகளைக் கீழே எறிந்தன!
அவற்றை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு வியாபாரி புறப்பட்டான்!
ஆண்டுகள் உருண்டோடின!
அவன் பேரனும் அதே தொப்பி வியாபாரம் செய்யத்தொடங்கினான்.
தொப்பிக்கூடையுடன் செல்லும் போது ஒரு நாள் களைப்படைந்து அதே மரத்தடியில் படுத்தான்!
விழித்துப்பார்க்கும்போது தொப்பிகள் இல்லை!மரத்தைப் பார்த்தான்;குரங்குகள் தொப்பி அணிந்திருக்கக் கண்டான்.
அவன் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது.
தன் தொப்பியைக் கழற்றிக் கீழே எறிந்தான்.
மரத்திலிருந்து ஒரு குரங்கு கீழே இறங்கி வந்தது.
அவன் எறிந்த தொப்பியைக்கையில் எடுத்துக் கொண்டு அவனருகே வந்தது
அவன் கன்னத்தில் ஓங்கி ஓரறை விட்டது!
பின் சொல்லிற்று”உனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா முட்டாளே!”
அவன் தொப்பியையும் எடுத்துக்கொண்டு மரம் ஏறிற்று!