தொடரும் தோழர்கள்

உண்மைக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மைக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 04, 2011

ஒரு வரலாறு--6-விலைவாசி!

92 வயது நிறைந்த ஒரு பெண்மணியின் வரலாற்றில் ,அவர்களது நினைவுகள் பின்னோக்கிச் சஞ்சரிக்கும்போது, இந்றைய வாழ்க்கையின் பல அம்சங்களை
அந்தக் காலத்துடன் ஒப்பிடுவது என்பது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது
அதில் முக்கியமான ஒன்று விலைவாசி!

இன்று---

” வா,தங்கம்,வா,எப்போ வந்தேள் அமெரிக்காலேர்ந்து?’
அவர்கள் குடியிருப்பில் வசிக்கும் விஜயனும் அவர் மனைவி தங்கமும் யு.எஸ் ஸில் இருக்கும் பையனிடம் சென்று திரும்பியிருந்தனர்.ராஜியைப் பார்க்க வந்த தங்கத்திடம்தான் ராஜி கேட்டாள்.

”நேத்து ராத்திரிதான் வந்தோம் மாமி.காலையிலே ஓட்டலில் போய் டிஃபன் சாப்பிட்டு விட்டு வந்தோம்.என்ன மாமி,ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு தோசையும்,காஃபியும் சாப்பிட்டோம்; பில் 100 ரூபாய் ஆயிடுச்சு !”

ராஜி அதிர்ந்தாள்;ஆச்சரியப் பட்டாள்.அவள் மனம் பின்னோக்கிப் போயிற்று.

அன்று

அவளுக்குப் பத்து,பதினோரு வயதாக இருந்த கால கட்டம். அவள் அப்பா பள்ளித் தலைமை ஆசிரியராகஇருந்தார்.வீட்டில் காலையில் அவருக்கு மட்டும் இட்லி,தோசை இப்படி டிஃபன்.ராஜிக்குப் பழையதுதான்!மதியம் சூடான சாப்பாடு. அவள் அப்பாவுக்கு இரவும் சூடான சாப்பாடு வேண்டும்;எனவே தினமும் இரவு சூடான சாதத்துடன், துவையல், வத்தல்குழம்பு இப்படி ஏதாவது செய்வாள் அவள் அம்மா.இந்த நடைமுறை மாதம் ஒரு முறை மாறும். அந்த நாட்களில் ராஜி அவள் அப்பாவுடன் அருகில் இருந்த சுப்பையர் கிளப்பில் சாப்பிட்டு விடுவாள்.அவள் அம்மாவுக்குக் காலையில் இட்லி வாங்கப் போவாள்.ஓட்டலில் ஓர் அணாவுக்கு நான்கு இட்லிகள்.ஆனால் அவள் அம்மா அங்கு வாங்க வேண்டாம் என்று சொல்லி விடுவாள்.ஒரு பாட்டி காலையில் இட்லி விற்று வந்தாள்.அவளிடம் ஓரணாவுக்கு ஆறு இட்லிகள்(பதினாறு அணாக்கள் = ஒரு ரூபாய்;அதாவது ஒரு ரூபாய்க்கு 96 இட்லிகள்! )அவள்டம்தான் ராஜி காத்திருந்து இட்லி வாங்கி வருவாள்.

மறக்க முடியாத இன்னொரு உணவு சம்பந்தமான விஷயம்,--ராஜிக்கு எப்போதாவது காலணா கிடைத்ததென்றால், மசால் வடை வாங்கிச் சாப்பிட ஆசைப் படுவாள்; காலணாவுக்கு இரண்டு மசால் வடைகள்.ஆனால் அவள் அம்மா அதை மறுத்துக் காலணாவுக்குக் காராபூந்தி வாங்கிவா இரண்டு பேரும் சாப்பிடலாம்.’ என்று சொல்லி விடுவாள்.அதை மறுத்துச் சொல்லும் துணிச்சல் ராஜிக்குக் கிடையாது.எனவே மசால் வடையை நினைத்துக் கொண்டு காராபூந்தியைச் சாப்பிடுவாள்.

அந்தக் காலத்தில் நயம் நெல்லூர் அரிசி ரூபாய்க்கு நாலு படி.!

திருமணத்துக்குப் பின் கூட அவள் முதல் கர்ப்பத்தின் போது காலையில் குமட்டலாக இருக்கும்.சாப்பாடு பிடிக்காது.அப்போது அவள் மாமியார் அவளுக்கு மட்டும் ஓட்டலிலிருந்து இரண்டு இட்லி ஒரு தோசை வாங்கித் தருவாள்.இரண்டும் சேர்ந்து ஒன்றரை அணாதான்!ராஜி அடிக்கடி சொல்வாள் 1939 வரை,இரண்டாம் உலக யுத்தம் வரை விலை வாசி ஏறவில்லை என்று.

அவள் சாத்தூரில் இருந்தபோது பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக இருந்தவருக்குச் சம்பளம் மாதம் ரூபாய் 25 தான்.அவர் ,அவர் மனைவி,ஒரு பெண் அடங்கிய குடும்பம்.வீட்டு வாடகை ஐந்து ரூபாயும்(ஏஞ்சல்ஸ் விதியின் படி பத்து விழுக்காடுகள்தான் வாடகை தர வேண்டும் ;ஆனால் அது என்றுமே சாத்தியமில்லை)கொடுத்து அவர்கள் ஓரளவு வசதியாகவே வாழ்ந்ததாகவே ராஜி சொல்வாள்.

ஆனால் இன்றோ!

ராஜி பெருமூச்சு விட்டாள்!

(அடுத்த வாரம்---ராஜியைப் பெண் பார்க்கும் படலம்!)

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

ஒரு வரலாறு-மீண்டும் தொடர்கிறது!

ஒரு வரலாறு என்ற ஒரு தொடரை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதத் தொடங்கினேன்.அறிமுக இடுகையிலேயே Dr.ருத்ரன் அவர்கள் பின்னூட்டத்தில் வாழ்த்துச் சொல்லியிருந்தார்.என்ன காரணம் என்று தெரியவில்லை அந்தப்பதிவு ஆமை வேகத்தில்தான் வளர்ந்தது.நீண்ட நாட்களாகத் தேக்கமடைந்து விட்ட அத்தொடரை மீண்டு தொடர எண்ணி நவம்பர் 2010ல் ஒரு இடுகை வெளியிட்டேன்.நண்பர் நடன சபாபதி அவர்கள் பின்னூட்டத்தில் சொன்னார்கள்

//வே.நடனசபாபதி கூறியது...
ஏப்ரல் 2009 ல் இந்த தொடரை நீங்கள் ஆரம்பித்தபோது விரும்பிப்படித்தவன் நான்.
இடையிலே நிறுத்தி இருந்தபோது ஏமாற்றமாக இருந்தாலும், "இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.பயணம் ஆரம்பம்." என்று நீங்களே ஆரம்பித்த அன்று சொன்னதால், திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன். பயணம் தொடங்கியது அறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

ஆனால் என் கவனம் வேறு திசையில் திரும்பியதால் பதிவு மீண்டும் தடைப்பட்டு விட்டது.இன்று காலை யு.எஸ் ஸில் இருக்கும் என் அண்ணன் மகள் தொலை பேசியில் இத்தொடரை நான் தாமதம் செய்வதற்காக வருத்தப் பட்டாள். எனவே இத்தொடரில் வாரம் ஒரு இடுகையாவது எழுத விழைகிறேன்---இன்ஷாஅல்லா!
இதுவரை வந்த இடுகைகள்---

http://chennaipithan.blogspot.com/2009/03/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_15.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_22.html
http://chennaipithan.blogspot.com/2009/05/3a.html
http://chennaipithan.blogspot.com/2010/11/4.html.

ஒரு வேண்டுகோள்.மேலே குறிப்பிட்ட பதிவுகளைப் படித்துவிட்டுத் தொடரைப் படித்தால் தொடர்ச்சி புரியும்.நேரமிருந்தால் படியுங்கள்.நேரமில்லாதவர்களுக்காக ஒரு சுருக்கம்—

1)ராஜி என்கிற வரலாற்று நாயகி அறிமுகம்.76 ஆண்டுகளுக்கு முன்(இப்போது 78)
14 வயதில் மணந்து 26 வயதுக்குள் ஆறு குழந்தை பெற்று 32 வயதில் கணவனை இழந்து நிர்க்கதியான பெண்மணியின் அறிமுகம்.90 வயதிலும் அதே மன உறுதியுடன்(இப்போது 92) வாழும் பெண்மணி.

2)கணவன் மறைவுக்குப் பின் சென்னையிலிருந்து குழந்தைகளுடன் ராஜி புறப்படுகிறாள்.குழந்தைகள் அறிமுகம்,பெயர் மாற்றத்துடன்.ராஜியின் துயரம்.

3)8ஆம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ராஜி,அங்கு பெண்கள்
உயர் நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால் மேற்படிப்புக்காகக் கடலூரில் இடம் கிடைக்காமல்,சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.அது பற்றிய விவரங்கள்.

4)கால இயந்திரம் நிகழ்காலத்துக்கு வருகிறது.ராஜி செய்தித்தாளில் தன் பள்ளித்தோழி ஒருத்தியின் மறைவு பற்றிய செய்தி பார்க்கிறாள்.பள்ளி நாட்களில் தானும் அவளும் பாடிய பாட்டு ஞாபகம் வருகிறது.

5)ராஜியின் புகுந்த வீட்டில் கொலு.நவராத்திரியின்போது பாடகர் ஜி.என்.பி வீட்டில் அவருக்கு முன் ராஜி பாடியது!

6)இந்த வயதான காலத்தில் ராஜி படும் சிரமங்கள்.

இனி அடுத்த இடுகை 22ஆம் தேதி வெளியிடப்படும்.அதுவரை பழைய இடுகைகளைப் படிக்க எண்னுபவர்களுக்கு நேரம் தருகிறேன்;எனக்கும் தகவல் திரட்ட!

சந்திப்போம்!