தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 30, 2013

ஒரு மரணம்!



”அண்ணே!விஷயம் தெரியுமா?”

“வெள்ளக்காளதானே?கேட்டு அதிர்ச்சியாயிட்டேன் தம்பி.நேத்துக் கூடப் பாத்தேனே!இது ஆறுமுகம் குடும்பத்துக்கு மட்டுமில்ல;நம்ம கிராமத்துக்கே பெரிய இழப்புதான்”

“நீங்க சொல்றது சரிதாண்ணே”

”பத்து மணிக்கு எடுத்துடுவாங்க போல,போய்ப்பாத்துட்டு வரணும்.”

“வாங்கண்ணே போலாம்.”

”ஒரு மாலையும் வாங்கிட்டுப் போயிடலாம்;பெரிய சாவில்லையா?”

ஆம்!அந்தக் கிராமம் முழுவதுமே அதிர்ந்துதான் போயிருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டம் கையில் மாலைகளோடு ஆறுமுகத்தின் வீடு நோக்கிச் செல்கிறது.

ஆறுமுகமும் அவர் சகோதரர்  ராஜாவும் மிகவும் துக்கத்தில் இருப்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது.

விசாரிப்பவரிடமெல்லாம் ஆறுமுகம் சொல்லிக் கொண்டிருந்தார்”இத்தனை வருசத்தில ஒரு நாக்கூட,ஒடம்பு சரியில்லன்னு படுத்ததில்ல.காலைல எந்திருச்சிப் பாக்கேன்,உயிரில்ல.சிவன் கூப்பிட்டுக் கிட்டாரு போல.இதோ இந்த அறையில இருக்கே,கோப்பைகள்,கேடயங்கள் எல்லாம் போட்டிகளில பரிசா வாங்கினவை.எல்லாரும் பாக்கட்டும்னுதான் தெறந்து வச்சிருக்கேன்.  இந்த எழப்ப எங்களால தாங்கவே முடியலை”

பகிர்ந்து கொண்டால் கொஞ்சம் சோகம் குறைய வேண்டும்.மாறாக அதிகமாகிறது.

உடலை எடுக்கும் நேரம் வந்து விட்டது.

உடல் வாசனை நீரில் நீராட்டப்பட்டு,புதுத் துணிகள் அணிவிக்கப்படுகிறது .பாட்டு ,கூத்து , தாரை  தப்பட்டை முழங்க,வேட்டுச் சத்தம் அதிர இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

ஊரெல்லாம் பின் செல்ல , மயானம் அடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு சகாப்தம் முடிந்தது!

……………………………………………….
திருச்சி அருகில் உள்ள சூரியூரில் வெள்ளைக் காளை என்ற ஜல்லிக்கட்டுக் காளை ஞாயிறன்று காலை 8 மணிக்கு மரணம் அடைந்தது!ஜல்லிக்கட்டில்தங்களைக் கலங்க அடித்த காளையின் மறைவுக்காக மக்கள் கண்ணீர் சிந்தினர்.500க்கும் மேலானவர் மாலைகளுடன் வந்து இறுதி மரியாதை செய்தனர்.1997 இல் ரூபாய் 70000/=க்கு வாங்கப்பட்ட காளை அன்று முதல் பல ஜல்லிக் கட்டுகளில் வெற்றி பெற்றுப் பிரபலமானது.அதன் சமாதியில் ஒரு கோவில் கட்ட அக்குடும்பம் தீர்மானித்திருக்கிறது!--(டைம்ஸ் ஆஃப் இந்தியா 30-09-2013)




செவ்வாய், செப்டம்பர் 24, 2013

வெறுமை!



எதிலும் மனம் லயிக்கவில்லை

சிறிது நேரம் செய்தித்தாள்

சிறிது நேரம் முகநூல்

சிறிது நேரம் கூகிள்+

சிறிது நேரம் மின்னஞ்சல்

சிறிது நேரம் வலைப்பூ

சிறிது நேரம் டி.வி

சிறிது நேரம் சும்மா

வெறுமையான பார்வை

எதிலும் மனம் லயிக்கவில்லை

சிறிது நேரம் செய்தித்தாள்

……………….
..............

மீண்டும் மீண்டும்

சுற்றிச் சுற்றி

எதுவும் பிடிக்காமல்

பற்றற்று.

ஆனால் வெறுமையிலும்

மனம் அமைதியற்று!

என்று மாறும் இந்நிலை?!


ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ்!



பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று.என்ன விழிக்கிறீர்கள்? பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!மறக்க முடியாத, காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒரு குரல். சரிகைத் தலைப்பாகை அணிந்து  வெளியிடங்களில் காணப்பட்ட அந்த மனிதர் இன்று இல்லை;ஆனால் அவர் குரல் சிரஞ்சீவி!

அவரைப் பற்றி நண்பர் பார்த்தசாரதி ,இன்று வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை யுடன் எழுதி அனுப்பிய ,கட்டுரை கீழே!

//”கனியோ,பாகோ,கற்கண்டோ”—பி பி எஸ் இன் குரலின் இனிமையை அவர் கற்புக்கரசிபடத்தில் எம் எல் வி அவர்களுடன் பாடிய டூயட்டின் முதல் வரி மென்மையாக எடுத்து ரைக்கிறது!அவர் பாடிய பாடல்கள் எல்லாமே தேனமுதுதான்.நன்றாக இல்லை என அவர் பாடிய எந்தப்பாடலையும் ஒதுக்கிவிட இயலாது.

அறுபதுகளில் ஜெமினியின் குரலாக இருந்தவர் ஏ எம் ராஜா.அவர் இசையமைப்பாளர் ஆனபின் இசையமைத்த கல்யாணபரிசு,தேன்நிலவு,விடிவெள்ளி படங்களில் எல்லா பாடல்களும் ஹிட்!அதனால்தானோ என்னவோ ராஜா மற்ற இசையமைப்பார்களின் ஆதரவை இழந்தார்.இந்தச் சூழல்  பிபிஎஸ்ஸின் கலைவாழ்க்கையில் வந்தகாலம் பிறக்க வழி வகுத்தது.

ஜெமினி கழுத்தில் மஃப்ளரை மாலையாகப் போட்டுக் கொண்டுசாத்தனுர் அணையின் பின்னணியில் காலங்களில் அவள் வசந்தம்என்று பாடிய பாடல் ஒரு மிகப் பெரியை அலையை உருவாக்கியது.PBS,கண்ணதாசன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி  கூட்டணி கொடிகட்டிப் பறந்தது.பூ வரையும் பூங்கொடிக்குப் பூமாலை சூட்டி வாலியும்இதயத்தில் நீஆனார்.பிபிஎஸ் காதல் மன்னனின் நிரந்தரக் குரல் ஆனார்.youthful-melodious ஆக இருந்தஅவரது குரல்,பெண்கள்  காதலனிடம் எதிர்பார்க்கும் எல்லா உணர்ச்சிகளையும் அள்ளி வழங்கியது. அவர் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல்  ,பிரேமபாசம் படத்தில் ”அவன் அல்லால் புவி மேலே ஒரு அணுவும் அசையாது” என்ற பாடலே.

இனிமையான காதல்தான் அவரது சிறப்பு எனினும்,அவர் பாடிய சில தத்துவப் பாடல்கள் என்றும் அழியாதவை.’மயக்கமா,கலக்கமா’ ’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ ’மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ ஆகியவற்றைச் சொல்லலாம்.

எம் ஜி ஆருக்காகப் பாடிய “என்னருகே நீ இருந்தால்(திருடாதே),”பால் வண்ணம்”(பாசம் சிறப்பானவை.

ஜெமினிக்கு அடுத்தபடியாக,பாலாஜிக்கு நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார் என எண்ணு கிறேன் . விடிவெள்ளி,அன்புக்கரங்கள்,நாகநந்தினி,அண்ணாவின் ஆசை, போலீஸ்காரன் மகள்,பலே பாண்டியா,படித்தால் மட்டும்போதுமா, என பல படங்கள்.எஸ் எஸ் ஆர்,நாகேஷ், முத்துராமன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,கல்யாண்குமார்,ஏவிஎம் ராஜன், ஸ்ரீகாந்த், ஆனந்தன், அசோகன் என பலருக்குப் பாடியுள்ளார் .

டி எம் எஸ்,பி பி எஸ் இருவரும் சேர்ந்து பாடிய,படித்தால் மட்டும் போதுமா படப்பாடல் “பொன்னொன்று கண்டேன்”இன்றும் மெல்லிசை மேடைகளில் பாடப்படும் பாடல்.
தமிழ்த் திரை இசை உள்ளவரை,அவரது குரல் காற்றலைகளில் மிதந்து கொண்டே இருக்கும்.கேட்கும் காதுகள் கொடுத்து வைத்தவை!

(அவர் எழுதிய அனுப்பியது இன்னும் பல தகவல்கள் அடங்கியது.இன்றைக்கு இது போதும் என நிறுத்திக் கொண்டு விட்டேன்;பிறிதொரு சமயம் பார்க்கலாம்)


திங்கள், செப்டம்பர் 09, 2013

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!



இன்று விநாயக சதுர்த்தி.

எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக் கிறோம்.





ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் லட்சுமி கணபதிஎன்றழைக்கப் படுகிறார்.உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும்  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஹோமங்களும்,சிறப்பு பூஜையும் நடைபெறும்.நேற்று காலை கணபதி ஹோமமும், நவக்ரஹ ஹோமமும்.சிறப்பாக நடந்தேறியது.






 விநாயக சதுர்த்தி அன்று காலனி வாசிகளில் பலர்  பூஜையை முன்னிட்டு விநாயகருக்குப் பல பிரசாதங்கள் தயார் செய்து கொண்டு வருவர் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை,கொழுக்கட்டை,கேசரி, சுண்டல் என்று.சில பிரசாதங்கள் நல்ல ருசியாக இருக்கும்;சில….......! அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்த தல்ல!


இன்றைய பூஜைக்கும் பிரசாதத்துக்கும் காத்திருக்கும் நேரத்தில்,திருமந்திரத்தின் பாயிரப் பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதை பார்ப்போமா?
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

பொருள்:-:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம் பிறைச் சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தை உடையவரும்,சிவனுடைய குமாரரும், ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்கு கிறேன்.

ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-
படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.
 
கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம்  ஏந்திய  கரம்   மறைத்
தலையும்,அபயகரம் அருளலையும் குறிக்கும். சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும், மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.

யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்த பின்,பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்கி,பூத கணங்களை அனுப்பி, வடக்கே தலை வைத்து உறங்கும் உயிரின் தலையைக் கொய்து வரச் சொல்ல,அது ஒரு யானையின் தலையாக முடிந்தது என்பது ஒரு கதை.யானை நாதத்திற் தோன்றியதாதல் போலப் பிள்ளையாரும் பர நாதத்திற்தோன்றிப் பிரணவ வடிவினராதலின் கூறினார்என்பது ஓர் உரை.

காளமேகப் புலவரின் பாட்டொன்றில் இத்தலை பற்றி அவர் எழுதுவதாவது-

சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
படித்தோர்க்கு மாறு தலைப் பார்.

சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு; முருகனுக்குத் தலைகள் ஆறு.;பிள்ளையார்க்கு மாறிய தலை;.ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை நினைத்துப் போற்றுபவர்களுக்கு,நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இதுவே பாடலின் பொருள்.

இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை நிலாவைப் போல்,வளைந்து,வெண்மையாய்,ஒளி விடுகிறது.

நந்தி மகன்றனை’-இங்கு நந்தி என்றது சிவ பெருமானை.பிள்ளையார் சிவனின் முதற் பிள்ளை.

ஞானக் கொழுந்தினை’-ஞானத்தின் உச்சம்.தீ எரியும்போது,கொழுந்து விட்டெரியும் தீ என்று சொல்வோம்.அதே போல் விநாயகர் ஞானக் கொழுந்து.சிவன் ஞானமே வடிவானவன் ;அவன் பிள்ளை ஞானக் கொழுந்து என்றுரைப்போரும் உளர்.

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’- புந்தி என்றது புத்தி.பிள்ளையாரை சிந்தையில் இருத்திப் போற்றுகின்றேன் என்பதாகும்.

வாருங்கள்,நாமும்,விநாயகப்பெருமானைப், ’புந்தியில் வைத்தடி போற்றுவோம்  

இது ஒரு மீள்பதிவு,சில மாற்றங்களுடன்
Top of Form