தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 21, 2011

எது நாடு?

வள்ளுவர் ஒரு முறை ஒரு அரசனைக் காணச் சென்றிந்தார்.அரசன் அவரை வரவேற்று நன்கு உபசரித்தான்.அவர் தன்னைப் பற்றியும் தன் நாட்டைப் பற்றியும் உயர்வாக நினைக்க வேண்டும்,பேச வேண்டும் என்று மன்னன் எண்ணினான்.நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.தேரில் சென்றபோது,பல இடங்களில்,அன்னதானச் சத்திரம் என்றெழுதிய கட்டிடங்கள் காணப்பட்டன.மக்கள் வரிசையில் உள்ளே சென்று கொண்டும்,பலர் வெளியே வந்துகொண்டும் இருந்தனர்.

மன்னன் சொன்னான்”திருவள்ளுவரே! இவைதாம் அன்னதானச் சத்திரங்கள்.மக்களில் யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து இலவசமாக உணவருந்திச் செல்லலாம்.தினமும் ஏராளமான மக்கள் வந்து உணவருந்துகின்றனர்”.

வழியில் பல இடங்களில் ’மருத்துவ மனை’ என்றெழுதப்பட்ட கட்டிடங்கள் இருந்தன.மன்னன் சொன்னான்”இவையெல்லாம் இலவச மருத்துவ மனைகள்.மக்களுக்கு இங்கு எல்லா வித சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப் படுகின்றன!தினமும் ஏராளமான மக்கள் வந்து பயனடைகின்றனர்”

மன்னன் வள்ளுவரைத் தன் படை அணிவகுப்புக்கும்,ஆயுதச் சாலைக்கும் அழைத்துச் சென்றான்.அவற்றைக் காட்டிச் சொன்னான் ”பாருங்கள் என் படைகளை.கணக்கற்ற தேர்,யானை,குதிரை,காலாட்கள் நிறைந்த படைகள்.இதோ,எத்தனை விதமான நவீன ஆயுதங்கள், பாருங்கள்.”

நாட்டைச் சுற்றிப் பார்த்தபின் மன்னன் கேட்டான்”வள்ளுவரே,என் நாட்டில் பசியென்று வந்தவர் எல்லோருக்கும் இலவச உணவு அளிக்கப் படுகிறது;பிணியால் வருந்துபவர்க்கு,இலவச மருந்து,சிகிச்சை அளிக்கப் படுகிறது.பகைவர்களை நடுங்கச் செய்யும் படை இருக்கிறது.நாட்டின் சிறப்புக்கு வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்?”

வள்ளுவர் சிரித்தார்.பின் சொன்னார்,”மன்னா!உன் நாட்டில் அன்னதான சத்திரங்கள் உள்ளன.இது எதைக் காட்டுகிறது?பசித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தானே?இலவச மருத்துவ மனைகள் உள்ளன.இது எதைக் காட்டுகிறது?பிணி அதிகம் இருக்கிறது என்பதைத்தானே!ஒப்பற்ற படைகளும்,படைக் கலங்களும் உன்னிடம் உள்ளன.அப்படியென்றால்,உனக்குப் பகைவர் உள்ளனர் என்றுதானே பொருள்?இது எப்படி நல்ல நாடாகும்?

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”
(மிக்க பசியும்,ஓயாத நோயும் அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடை பெறுவதே நாடாகும்).

மன்னன் தலைகுனிந்தான்.

(பி.கு.இறுதியாக இன்றைய நிலையை இணைத்து,ஒப்பிட்டுச் சில வரிகள் எழுத எண்ணியிருந்தேன்,ஆனால் எழுதவில்லை. ஏனெனில், சொல்ல நினைத்ததை சொல்லாமலே புரிந்து கொள்பவர்களல்லவா நீங்கள் ! அதுவும்,சொன்னதை விட சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்தானே! )

17 கருத்துகள்:

 1. இறுதியாக இன்றைய நிலையை இணைத்து,ஒப்பிட்டுச் சில வரிகள் எழுத எண்ணியிருந்தேன்,ஆனால் எழுதவில்லை. ஏனெனில், சொல்ல நினைத்ததை சொல்லாமலே புரிந்து கொள்பவர்களல்லவா நீங்கள் ! அதுவும்,சொன்னதை விட சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்தானே!//

  பதிவின் தலைப்புக்கு பொருத்தமாக முடித்திருக்கிறீர்கள்.
  "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.'என்பார் கவிஞர் கண்ணதாசன்.
  அதனால் தான் நீங்கள் பேச நினைப்பதை நாங்கள் பேசவேண்டும் என நினைக்கிறீர்கள் போலும்.
  ஒரே வரியில் சொன்னால், குறள் விளக்கம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு.. (வாழும் வள்ளுவர்களை(!) வாழ்ந்த வள்ளுவரின் வாயால் சாடியதும் இன்னும் அருமை..) இது போன்ற திருக்குறள் கதைகளை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் ஓர் எளிய வாசகன்..

  - அரவிந்த் குமார்.பா

  பதிலளிநீக்கு
 3. திருக்குறளும் அதற்கான விளக்கமும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் சொல்ல வந்த விஷயமும் புரிகிறது... நீங்கள் சென்னையில் இருப்பதால் மீதியை சொல்லவில்லையோ # Auto...

  பதிலளிநீக்கு
 5. ஏழைகள் இருக்கும் மட்டும் இலவசங்கள் தொடரும். சமீபத்தில் நமது முதலமைச்சர் கூறியது.. பசியும், பிணியும், ஆர்ய எதிரிகள் உள்ள மட்டும் கவலை இல்லை ! .... இதற்கும் நீங்கள் எழுதியதிற்கும் ஒரு தொடர்பு இருப்பது போல் தெரிகிறது ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 6. @வே.நடனசபாபதி,
  நாமெல்லாம் ஒரே அலை வரிசையில் சிந்திப்பவர்கள்!யார் பேசினால் என்ன?நமக்குத் தொழில் பேச்சு!
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 7. அரவிந்த் குமார்.பா கூறியது...

  // இது போன்ற திருக்குறள் கதைகளை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கும் ஓர் எளிய வாசகன்.. //
  உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆற்றலை ‘வாழ்ந்த வள்ளுவர்’தான் எனக்குத் தர வேண்டும்!
  உங்கள் முதல் வருகைக்கும், அன்பான பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அன்பு பாரதி,
  புரிந்தால் சரி!’தானி’ என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்துறீங்களே!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வாங்க வாசு!நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீர்கள்!தொடர்பு இருப்பதாக நீங்கள் நினைத்தால்,நான் மறுக்கவா போகிறேன்?
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வைகறை கூறியது...

  // பாவம் திருவள்ளுவர்!//
  ’நாடு’ என்று ஒரு அதிகாரம் எழுதிய வள்ளுவரையே பார்த்துப் பரிதாபப்படும் நிலைக்கு வந்துவிட்டதே நாடு!
  முதல் வருகை என எண்ணுகிறேன்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாழும் வள்ளுவருக்கு(????!!!!!!!)
  அனுப்பி வையுங்கள்
  இந்தக் கதையை.

  பதிலளிநீக்கு
 12. சிவகுமாரன் கூறியது...

  //வாழும் வள்ளுவருக்கு(????!!!!!!!)
  அனுப்பி வையுங்கள்
  இந்தக் கதையை.//
  சான்ஸே இல்லை!
  எண்ணித்துணிக கருமம்!
  செய்தக்க அல்ல செயக் கெடும்!
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்!

  பதிலளிநீக்கு
 13. இலவசம் என்றாலே மக்களுக்கு நினைவில் வரும் ஒரே பெயர் மாமன்னர் கலைஞர்தான். எனவே தனியாக எதையும் சொல்லவேண்டியதில்லை.

  பதிலளிநீக்கு
 14. அருமையாக நிகழ்காலத்துக்கும் பொருந்தும் என்று விளக்கி விட்டீர்கள்...விளங்க வேண்டியவர்கள் விளங்கிக் கொள்வார்களா...இல்லையென்றால் நாடு....விளங்கும்!!!

  பதிலளிநீக்கு
 15. இனியவன் கூறியது...

  // எனவே தனியாக எதையும் சொல்லவேண்டியதில்லை.//
  அதனால்தானே சொல்லவில்லை!
  நன்றி இனியவன்.

  பதிலளிநீக்கு
 16. goma கூறியது...

  //அருமையாக நிகழ்காலத்துக்கும் பொருந்தும் என்று விளக்கி விட்டீர்கள்...விளங்க வேண்டியவர்கள் விளங்கிக் கொள்வார்களா... இல்லையென்றால் நாடு....விளங்கும்!!!//
  விளங்கும்,விளங்கும்!
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா அவர்களே!

  பதிலளிநீக்கு