தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 07, 2009

என் நாடக அனுபவங்கள்-பகுதி-2

பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.மீண்டும் மேடை ஏற பல ஆண்டுகள் ஆகி விட்டது.வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி ஊழியர் சங்க விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில் இரு வேடங்களில் (!) நடிக்க வேண்டியதாயிற்று-ஒரு ‘தொண தொணப்பு‘க் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்).

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.(பெயர்களைத் தவிர்த்து விட்டேன்).கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்தவர் அப்போது கல்லூரியில் படித்து வந்தார்.கத்திப் பேசாத மிகையில்லாத நடிப்பு அவருடையது.இப்போது பெரும்பாலும் பேட்டி காண்பவராகவே இருக்கிறார்.முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்;ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார்.மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம் “என்று பாராட்டினார்.

பின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என்நடிப்பைப் பாராட்டினர்.

ஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக்காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்த சானல் மூடப்பட்டது.அத்தொடர் வெளி வரவில்லை.

மீண்டும் ஒரு முறை ‘காமிரா’ என்னுடனான விரோதத்தை உறுதி செய்து விட்டது!!!(என் பதிவு “நானும் காமிராவும்” பார்க்கவும்).
(பழைய வீட்டிலிருந்து)
முன்பு தவிர்த்த செய்திகள் கீழே(தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன?)

உடன் நடித்தவர்கள்--நிழல்கள் ரவி,பிரியதர்ஷினி,சபிதா ஆனந்த்,மலேசியா வாசுதேவன்,பி.ஆர்.வரலட்சுமி,மஹாநதி சங்கர்.இயக்குனர்-தினகரன்.சானல்,ஜே.ஜே.

1 கருத்து: