தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 06, 2009

என் நாடக அனுபவங்கள்(பகுதி-1)

நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது, ஒரு சிவ ராத்திரியன்று இரவு, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடித்தோம்.’நீதிபதி’ என்ற அந்த நாடகத்தை எழுதி இயக்கியவன் நான்தான்.அதில் கதானாயகனாக நடித்தவனும் நான்தான்.அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த அந்த நாடகம் பெரிய பாராட்டைப் பெற்றது.அந்த ஊர் இளைஞர் சங்கத்தினர் அவர்களின் அடுத்த நாடகத்தில் எனக்கு ஒரு பாத்திரம் அளிப்பதாகக் கூறினர்.ஆனால் நான் வேறு ஊர் சென்று விட்டதால் அவர்களின் நாடகத்தில் நடிக்கவில்லை.

நான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியில் “நண்பர்கள் குழாம்”என்ற ஒருஅமைப்பில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்ச்சி தயார் செய்து அளிக்க வேண்டும்.ஒரு மாதம் என் வகுப்பின் சார்பில் நான் ஒரு நாடகம் தயார் செய்து நானே முக்கிய வேடத்தில் நடித்தேன்.பொறாமை கொண்ட ஒரு மன்னனாக நடித்தேன்.என் நடிப்பு மிகவும் பாராட்டப் பட்டது.அந்த நேரத்தில் எங்கள் பள்ளி ‘முத்தமிழ் விழா’வுக்காக ஒரு நாடகம் தயாரிக்கப் பட்டு வந்தது.பெயர்’தமிழ்——(முழுப்பெயர் நினைவில் இல்லை.)என் நடிப்பால் கவரப்பட்ட குழுவினர் என்னையும் அந்த நாடகத்தில் சேர்த்துக்கொண்டனர்.அந்த நாடகம் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த நாடகம்.நான் திருவள்ளுவர் வேடத்தில் நடித்தேன்.அதில் மன்னன் ஒருவனுக்கு அறிவுறுத்த நான் பேசிய குறள் இன்னும் மறக்கவில்லை.”உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” இந்த நாடகத்தில் நான் நடித்த மன்னன் நாடகமும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டு விட்டது.ஆக முதலிலியே நாடகத்தில் இரு வேடம் ஏற்று நடித்தேன்..திருவள்ளுவர் வேடத்தில் நடித்ததும் உள்ளே சென்று அவசரமாக ஒப்பனையைக் களைந்து மன்னன் வேடத்துக்கான ஒப்பனை செய்து கொண்டு உடைகளைத் தரித்துக் கொண்டு தயாரானது மிக சுவாரஸ்யமான அனுபவம்.

பள்ளி ஆண்டு விழாவில் ‘ராஜ ராஜ நரேந்திரன்’ என்ற நாடகம் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.ஏற்கனவே நல்ல நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அந்த நாடகத்திலும் எனக்கு ஒரு வேடம் தருவதாக முடிவு செய்யப்பட்டது.நான் முன்பு நடித்த மன்னன் பாத்திரம் ஒரு வில்லத்தனமான நாயகன் என்பதால் இந்த நாடகத்திலும் எனக்கு ‘மகாசயர்’ என்ற வில்லன் வேடம் என்று முடிவு செய்தார்கள்(image ! !).ஆனால் கதானாயகன் நரேந்திரனாக நடிப்பதற்கு சரியான மாணவன் கிடைக்காததால் நானே நரேந்திரனாக நடித்தேன். அதில் சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கும்போது என் துரோணாசாரியார் ‘சிவாஜி’ அவர்களையே மனதில் நிறுத்தி நடித்தேன்.என் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.என்னை எல்லோரும் “குட்டி நடிகர் திலகம்” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

இதே நாடகம் கோடை விடுமுறையில் நடக்கும் பொருட்காட்சியிலும் நடத்தப்பட்டது.என் ஜோடி அம்மங்கையாக நடித்த மாணவன் என்னை விட சிறிது உயரம்.எனவே அவனை மேடையில் சிறிது தலையைக்குனிந்து கொண்டே நடிக்கச் சொல்லியிருந்தேன்.இருந்தும் இந்த உயர வித்தியாசம் பார்வையாளர்களிடம் கேலிச் சிரிப்பை எழுப்பியது.நாடகம் பார்க்க வந்திருந்த என் தாயார் மற்றும் சகோதரிக்கு சிறிது சங்கடத்தை எற்படுத்தியது.ஆனால் சிறிது நேரம் சென்று என் முக்கிய காட்சி வந்ததும் சிரித்தவர்கள் எல்லாம் என் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.என் தாயின் அருகில் அமர்ந்திருந்த பெண்”இந்தப் பையன் சிவாசி மாதிரியே நடிக்குதே”என்று வியந்து பாராட்டவும் என் தாயார்”என் மகன்தான்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்களாம்.இந்த நாடகத்தில் “தூது நீ சொல்லி வாராய்” என்று நிலவைப் பார்த்து நான் பாடும் பாட்டு ஒன்று உண்டு.இது வேண்டாம் என்று முதலில் முடிவு செய்தோம்.ஆனால் அந்தக் காட்சி வருவதற்கு முன்னால் எங்கள் தமிழ் ஆசிரியர் அந்தப்பாட்டையும் சேர்க்கச் சொல்லி விட்டார்.அது காட்சி அமைப்பாளருக்குத் தெரியாது எனவே நான் பாட ஆரம்பித்தவுடன் நிலா காணாமல் போய் விட்டது!! இப்படியாக பள்ளியில் என் நடிப்பின் காரணமாக ஒரு ராஜாவாகவே வலம் வந்தேன்.இதில் என் கணித ஆசிரியருக்குத்தான் வருத்தம்-’நடிப்பு வந்து என் படிப்பைக் கெடுத்துவிட்டது’ என்று... (இன்னும் வரும்)

(பழைய வீட்டிலிருந்து)

4 கருத்துகள்:

  1. ஒர் நல்ல நடிகரை இழந்துவிட்டோமோ? வங்கிக்கு அடித்தது யோகம்! “நினைத்துப் பார்த்து, நிம்மதி நாடு”

    பதிலளிநீக்கு
  2. @RSK,
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.இன்னமும் அந்ததீ (நடிப்பு)உள்ளே கனன்று கொண்டுதான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. வங்கியில் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் நடிக்கவேண்டியிருக்கும். தங்களுடைய பள்ளி நாடக அனுபவம் வங்கியில் பணி புரியும்போது கைகொடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. @வே.நடனசபாபதி
    சரியாகச் சொன்னீர்கள்.இந்த உலகமே ஒரு நாடக மேடை;அதில் நாம் எல்லோருமே நடிகர்கள்தாம்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு