தொடரும் தோழர்கள்

நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 06, 2011

நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு.

நண்பர் ரியாஸ் அஹமது அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத் தொடர்கிறேன்.



பலருக்கு இளமைக்கால நட்பு இறுதி வரை தொடர்கிறது.
அதற்கெல்லாம் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு ஊர் வேண்டும்.எனக்கோ ”யாதும் ஊரே,யாவரும் கேளிர்”
பள்ளிப் படிப்பு மூன்று ஊர்களில்!
கல்லூரிப் படிப்பு இரண்டு ஊர்களில்!
அலுவலகப் பணி பத்து ஊர்களில்!
எங்குமே வேர் விட முடியாத ஒரு வாழ்க்கையில் ஆயுட்கால நட்பு எங்கிருந்து வரும்?

ஆயினும் அந்தந்தக் கால கட்டத்தில் நல்ல நண்பர்கள் இல்லாமல் இல்லை.

அப்பு என்கிற கணேசன்

என் ஆரம்பப் பள்ளிப் பருவத்தில் ஆறாண்டுக் கால நண்பன்.சாத்தூரில் என்னுடன் --கல்லெறிந்து மாங்காய் பறித்தவன்,வைப்பாற்று மணலில்கால் புதைய நடந்தவன்,மணல் மேடு எனும் இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் கதை பேசியவன்,ஓலையில் காற்றாடி செய்து,அதை முள்ளால் குச்சியில் குத்தி அதை லேசாகத் திருகி அதனிடம் ”குன்னாங்குன்னாங்குர்ரா” என்று சொல்லி(அப்போதுதான் நன்றாகச் சுற்றுமாம்!) கையில் பிடித்துக் கொண்டு என்னுடன் ஓடியவன், நானே எழுதி நடித்த என் முதல் நாடகத்தில் எனக்குச் சவாலாக நடித்தவன்.என் விளையாட்டுத் தோழன்.நான் சாத்தூரை விட்டுக் கோவில்பட்டி சென்றபின் ஓர் அரையாண்டு விடுமுறை சமயத்தில் கோவில் பட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.ஓரிரு நாட்களில் என் தாத்தா வெளியூரிலிருந்த வந்தவர் என்னை அவர் ஊருக்கு அழைக்கவே அவருடன் சென்று விட்டேன்.பின்னர் அப்பு வந்து நான் இல்லாததால் ஏமாற்றமடைந்து சென்று விட்டான்.அப்படி ஒரு நண்பேன்டா நான்! பின்னர் அடுத்த விடுமுறைக்கு அவன் வந்தான் எனபது வேறு!இப்போது எங்கு இருக்கிறானோ!

பெரிய ரமணி என்கிற ராமசாமி

கோவில்பட்டியில் என் நண்பன்.வகுப்புத்தோழன்.பெரிய வீட்டுப் பிள்ளை.நானும் அவனும் சேர்ந்து கிரிக்கெட்டில் கலக்கியிருக்கிறோம்.நான் சொல்லும் மர்மக்கதைகளின் பரம ரசிகன் அவன்.என் அண்ணா கானன் டாயில்,எட்கார் வேலஸ் என்று பலரது கதைகளைப் படித்துச் சுருக்கமாகச் சொல்வார்.அதற்குக் கண்,காது மூக்கெல்லாம் வைத்து நான் அவனுக்குச் சொல்வேன்.அக்கதைகளால் உந்தப்பட்ட அவன் தமிழில் வரும் துப்பறியும் கதைப் புத்தகங்கள் பல வாங்கிப் படித்து விட்டு எனக்கும் தருவான்.எனக்குப் பல நாட்கள் பால முருகன் கஃபேயில் டிஃபன் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.பின்னர் கால்நடை மருத்துவர் ஆனதாகக் கேள்விப் பட்டேன்.

கலந்தர்

என் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வில் என்னுடன் எனக்கு ஒரு பலமாய் இருந்தவர்.சில உண்மைகளை எனக்கு எடுத்து உரைத்தவர்.சில முடிவுகளை எடுத்து அவற்றைச் செயல்படுத்த உதவியவர்.எனக்கு ஏற்பட்ட துயர் கண்டு வருந்தியவர்.எனது பிரச்சினையின் தீர்வுக்கு உதவினாலும்,அப்படி நிலை ஏற்பட்டதற்காக வருந்தியவர்.நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லாவிட்டாலும், இன்றும் என்றும் என் நெஞ்சில் நிற்பவர்.திருப்பூர் நண்பர்.

சேஷாத்ரி

என்னுடன் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்புப் படித்தவர்.சில ஆண்டுகள் தொடர்பில் இருந்த பின் அவர் வேலைக்காகக் குவைத் சென்று விட நானும் பல ஊர்களுக்கு மாற்றல் ஆகத் தொடர்பு அற்றுப் போனது.

நான் விருப்ப ஓய்வில் வந்து சென்னையில் மீண்டும் குடியேறிய பின்,அவரது தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டு பிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன். அன்று நட்பு மீண்டும் துளிர்த்தது.என்னை விட ஒரு வயது மூத்தவர் ஆகையால் நான் அவரது தம்பி என்றே இன்று என்னைச் சொல்பவர்.அவரது ஆசை-கோவையில் அவரது நிலத்தில் சிவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி,அருகில் நாங்கள் குடியேற வேண்டும் .அந்த ஆலயப் பொறுப்பை நானேற்க வேண்டும் என்பது.அவன் சித்தம் எதுவோ?

இன்று என் பதிவின் மூலம் உலகெங்கும் நட்பு வட்டம் விரிந்தது போல் உனர்கிறேன்!

இதைத் தொடர நான் அழைப்பது

1)நினைத்துப் பார்க்கிறேன் வே,நடனசபாபதி

2)நினைவில் நின்றவை கே.ஆர்.விஜயன்

3)venkatnagaraj வெங்கட் நாகராஜ்

4)கூடல்பாலா கூடல்பாலா

என்னை எழுதப் பணித்த தம்பி ரியாஸ் அஹமதுக்கு நன்றி!