தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 15, 2009

ஒரு வரலாறு

அத்தியாயம்-2-ராஜியின் மேற்படிப்பு

“ஏண்டி,ராஜி !வெளியூருக்குப் போய் படிக்கப் போறயாமே? எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியாடி?”ராஜியின் தோழி கேட்டாள்.

“ஆமாண்டி,ராதா.இனிமே இந்த ஊரிலே பசங்களோட சேர்ந்து படிக்க வேண்டான்னு அப்பா சொல்லிட்டா.வெளியூர்ல கர்ள்ஸ் ஸ்கூல்ல படிக்கலாம்னு சொல்லிட்டா.”-ராஜி
“எந்த ஊருக்குடீ போகப்போறே.”
“ரெண்டு எடம் சொல்லியிருக்கா.ஒண்ணு கடலூர்;இன்னொண்ணு மெட்ராஸ்”
“நீதான் படிப்பிலே கெட்டிக்காரியாச்சே.போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளா வாடி”

இதுதான் அவள் தான் பிறந்து 13 வயது வரை வளர்ந்து , மூன்றாம் படிவம் வரை (8ஆம் வகுப்பு) படித்து முடித்த அந்த சாத்தூர் மண்ணை விட்டுத் தொலை தூரமான மதராசுக்கு வர நேர்ந்த காரணம்.

அவள் மூன்றாம் படிவம் படித்துத் தேறியபோது அவளுக்கு வயது 13.உயர் நிலைப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராக இருந்த அவளது தந்தை தன் பெண்ணுக்கும் உயர் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டார்.படித்து முடித்த வரை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி.ஆனால் இப்போது பெரியவளாகும் நேரம் வந்து விட்டது.பையன்களுடன் சேர்ந்து படிக்க வைக்க முடியாது. சாத்தூரிலோ,பெண்கள் உயர்நிலைப்பள்ளி கிடையாது.அவளது தந்தைக்குத் தெரிந்து,சென்னை மாகாணத்தில் இரு நல்ல பெண்கள் உயர் நிலைப்பள்ளிகள் இருந்தன.ஒன்று கடலூர் NT என்று அழைக்கப்பட்ட திருப்பாப்புலியூரில்(திருப்பாதிரிப்புலியூர்). மற்றது மதராஸ் மைலாப்பூரில் இருந்த நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.(இப்போது லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)

ஒரு நல்ல நாளில் அவள் தன் அம்மா மற்றும் அத்தையுடன் கடலூர் புறப்பட்டாள்.அத்திம்பேர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில்,ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.கடலூரில் பள்ளியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே ஒரு வீடும் பார்த்து ஏற்பாடு செய்து விட்டார்கள்,அவளும் அவள் அம்மாவும் தங்குவதற்கு.
அவர்கள் கடலூரை அடைந்தனார்.வேறு பள்ளியிலிருந்து வருவதால் அவளுக்கு ஒரு தகுதித்தேர்வு வைத்தனர் அப்பள்ளியில்.எட்டு வரை தமிழ் மீடியத்திலே படித்த அவளால் அந்த ஆங்கில மீடியப் பள்ளியின் தேர்வில் நன்றாக எழுத முடியவில்லை.முடிவு—அவளை மூன்றாம் படிவத்துக்கே எடுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி விட்டனர். ஏமாற்றம்தான்.அவள் தந்தைக்குச் செய்தி போயிற்று.அவர் தன் தம்பியிடம் ரூ.200/= பணம் கொடுத்து மெட்ராஸ் சென்று மைலாப்பூர் பள்ளியில் முயற்சி செய்யச் சொன்னார்.அவரும் மெட்ராஸ் சென்றார்.பள்ளியின் முதல்வரை-ஒரு ஆங்கிலேயப் பெண்மணி- பார்த்தார்.பழைய பள்ளியின் T.C யைக் காட்டினார்.எந்தவிதமான மறுப்பும் இன்றி,ராஜியைப் பார்க்காமலே அவளுக்கு நான்காம் படிவத்தில் இடம் தரப் பட்டது.
அவள் சித்தப்பா,பள்ளியில் ஒரு டெர்ம் சம்பளம் கட்டினார். மைலாப்பூர் அப்ரஹாம் முதலித் தெருவிலே,பள்ளிக்கு மிக அருகிலே ஒரு வீடு பிடித்தார்.அவளுக்காக ஒரு சிறிய புத்தக அலமாரி,ஒரு நாற்காலி எல்லாம் வாங்கிப் போட்டார்.எல்லாம் ரூ.200/க்குள்!கடலூருக்குத் தகவல் சென்றது.

இதோ ராஜி மெட்ராஸ் புறப்படப் போகிறாள்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக