தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 04, 2012

சொர்க்க வாசல் திறக்கிறது!

நாளை வைகுண்ட ஏகாதசி.ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?) மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவது,வைகுண்ட பலன் தரும் என்பார்கள்(விரதம் என்றால் என்ன?-பட்டினிதான்.! மற்ற சில நியமங்களும் உண்டு.)ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.


     அக்காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்”தினம் இரண்டு;வாரம் இரண்டு; மாதம் இரண்டு;வருஷம் இரண்டு என்று.மாதம் இரண்டு என்றால்,இரண்டு ஏகாதசிகளிலும் உண்ணா நோன்பை மேற்கொள்வது. (மற்றவை என்ன என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது;எனவே தெரியாவிடில் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!)


 ஏகாதசிக்கு மறுநாள்,துவாதசியன்று காலை சீக்கிரமே உணவு அருந்த வேண்டும்.(பின்னே ஒரு நாள் பட்டினி என்றால் சும்மாவா?)இதைப் பாரணை என்பார்கள்.பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக் கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்; பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|? துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும், நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கும் என நம்புகிறேன்.


இப்போது வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்.ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியா விட்டாலும்,வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் அது மூன்று கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம் என்று சொல்கிறார்கள்.அதனால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப் படுகிறது.


இத்தினம் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் மிக விசேஷமாக்          கொண்டாடப் படுகிறது.இந்நாளில் மிக முக்கியமான நிகழ்ச்சி சொர்க்க          வாசல் திறப்புதான்.அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டவுடன், அவ்வழியாகச் செல்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பர்.மது கைடவர்களின்  வேண்டு கோளுக்கிணங்கி,அன்று அவ்வாசல் வழியாக வருபவர்களுக்கு, அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார்.எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 நான்.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான்  பெரும்பாலும்   கோவிலுக்குச்  சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன்.   (கூட்டமான நாட்களில்,குறிப்பாக ஆடி,தை வெள்ளிகளில் கற்பகாம்பாள் தரிசனத்துக்குப் போனதெல்லாம் கல்லூரிக்காலம்!)            
எனவே  இந்த சொர்க்க வாசல் வழியாகச் செல்வதெல்லாம் இல்லை.



முடிந்தவர்கள்,வைகுண்ட ஏகாதசியன்று, உங்கள் ஊர்ப் பெருமாள் கோவிலுக்குச் சென்று.சொர்க்க வாசல் பிரவேசம் செய்து விட்டு வாருங்கள்.முக்திக்கு வழி வகுத்துக் கொள்ளுங்கள்!

(modified repost)

19 கருத்துகள்:

  1. நான் பட்டினியை விட்டு விடுகிறேன், பாரணையை விடுவதில்லை. எனக்கும் சொர்க்க வாசல் மூலம் சென்றால் சொர்க்கத்தில் இடம் என்பதிலும், கூட்டமான நாட்களில் கோவில் செல்வதிலும் உடன்பாடில்லை. வொய் பிளட், ஸேம் பிளட்! ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  2. எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார்.எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அண்ணே பகிர்வுக்கு நன்றி..நாங்கள் இருக்கும் ஊரில் இந்து கோவில்கள் இல்லை..இங்கிருந்தே வேண்டிக்கறோம்...!

    பதிலளிநீக்கு
  4. இனிய மதிய வணக்கம் ஐயா,
    வைகுண்ட ஏகாதசியின் சிறப்பினையும், சொர்க்க வாசல் பிரவேசம் செய்வதன் முக்கியத்துவத்தினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. பட்டினி கிடப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால் கோவிலுக்கு செல்வது என்று முடிவெடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. //துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும்,நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கும் என நம்புகிறேன்.//

    நெல்லிக்காய் உணவு செரிமானத்தை அதிகரிக்கும் என்றும், சுண்டை, பசி மந்தம்,சுவையின்மை,
    ஆகியவகைகளை போக்கும் என்றும் அகத்திக்கீரை குடற்புழுக்களை நீக்கும் என்றும் மருத்துவம் சொல்வதால் அவைகளை நம் உணவில் சேர்க்க நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

    1962 ல் என் அம்மாவிடம் ஏகாதசி விரதம் இருப்பது பற்றி கிண்டல் செய்தபோது,உன்னால் இருக்கமுடியாதென்றால் விரதம் இருப்பவர்களை கிண்டல் செய்யாதே என்று சொன்னார்கள்.வீம்புக்காக என்னாலும் ஏகாதசி விரதம் இருக்கமுடியும் என சொல்லி இருந்ததும்,சொன்னது போல் ஏகாதசி அன்று ஒன்றுமே சாப்பிடாமல்
    (தண்ணீர் கூ டஅருந்தாமல்)
    இருந்தபோது,என் அம்மா என் மேல் இரக்கப்பட்டு,‘பரவாயில்லை பாலாவது சாப்பிடு’என்றபோது அதையும் மறுத்து விரதம் இருந்து தூவாதசி அன்று காலையில் சாப்பிட்டது நினைவுக்கு இப்போது வருகிறது இப்போது இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. வைகுண்ட ஏகாதசியைப் பற்றி சிறப்பான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு...

    உங்கள் பக்கத்தினைத் திறந்த உடன் ஏதாவது காணொளி [வீடியோ] பக்கம் திறக்கிறது.... அதை நிறுத்துங்களேன்.... பதிவினைப் படிப்பதற்குத் தடையாக இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  9. @கணேஷ்
    நம்ம கோஷ்டியா நீங்க!ரைட்டு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @MANO நாஞ்சில் மனோ
    இறைவன் எங்கும் இருக்கிறான்.
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  11. @வெங்கட் நாகராஜ்
    நான் பார்க்கும்போது அப்படி எதுவும் வருவதில்லை.வந்தால் ஏன் வருகிறது என்றும் எனக்குத் தெரியாது;அதை எப்படி நீக்குவது என்றும் தெரியாது.என்ன செய்யலாம் என்று சொல்லுங்களேன்!

    பதிலளிநீக்கு
  12. ம்,விடியவிடிய சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு போய் விரதம் முடிப்பார்கள்.இப்போது ஏகாதசி சிறப்புக்காட்சி காணோம்.

    பதிலளிநீக்கு
  13. எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார்.எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


    சின்னவயதில் சொர்க்கவாசல் திறப்பில் கலந்துகொண்ட நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
  14. Sunday என்றால் இரண்டு என்று எட்டு வருடம் முன்பு வந்த தினமலர் நாளிதழ் விளம்பரம் ஏனோ ஞாபகம் வருதே ....வாசு

    பதிலளிநீக்கு