தொடரும் தோழர்கள்

புதன், பிப்ரவரி 15, 2012

ஒரு வங்கிக் காசாளரும்,வாடிக்கையாளரும்!

(நேற்றைய பதிவின் நீட்சி)

ஒரு வங்கியின் கிளை.

உணவு இடைவேளைக்கு இன்னும் ஐந்து மணித்துளிகளே பாக்கி உள்ளன.

தனது கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் காசாளர்,தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார், சாப்பிடப்போவதற்காக.

அன்று காலை அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை.ஒரு சின்ன விஷயத்தில் தொடங்கி வெடித்து விட்டது.

மனைவியிடம் கோபித்துக்கொண்டு,”உன் சோத்தை நீயே கொட்டிக்கோ” என்று இரைந்து விட்டு,அலுவலகம்  வந்து விட்டார்.

நேரமாகி விட்ட படியால் எங்கும் சாப்பிடவுமில்லை.

காலையிலிருந்து மூன்று குழம்பி குடித்து வயிறே குழம்பிப் போயிருந்தது.

இப்போது உணவகம் சென்று ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

இடைவேளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

(இங்கு ஷாட்டைக் கட் செய்கிறோம்----அடுத்த ஷாட்--)

அந்தக் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர்.அன்றாட உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மொத்தக் கொள்முதலாளர்.

ஒரு தவணை உண்டியலுக்குப்( usance bill) பணம் கட்ட இன்று கடைசி நாள்.

இன்று கட்டவில்லை என்றால் அவரது முகவாண்மை ரத்தாகி விடும்.
பெரிய இழப்பாகி விடும்.

காலை முதல் அலைந்து திரிந்து தேவையான பணத்தைச் சேர்த்து விட்டார்.
இப்போது வங்கியில் பணம் செலுத்த வேண்டும்.

(ஷாட் கட்-அடுத்த ஷாட்!)

அவர் வங்கியில் நுழையும்போது உணவு இடை வேளைக்கு 5 மணித் துளிகளே பாக்கி!

காசாளரின் கூண்டை அடைந்து பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.10,20 50 100 என எல்லா விதமான நோட்டுக்களும் இருக்கின்றன.

காசாளர் கோபமாகச் சொல்கிறார்”.மூடும் நேரம்.பில்லுக்கெல்லாம் சின்ன நோட்டெல்லாம் வாங்க முடியாது.500,1000 இருந்தால் கொடுங்கள்.வாங்கிக் கொள்கிறேன்.”அவருக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது.

வாடிக்கையாளர் காலை முதல் மிகச் சிரமப்பட்டுப் பணத்தைச் சேர்த்திருக்கிறார் .இன்று கட்டா விட்டால் வியாபாரமே போய்விடும் எனும் நிலை.

“அதெப்படி  சின்ன நோட்டு வாங்க மாட்டேன்னு நீங்க சொல்ல முடியும்.நான் நேரம் முடியுமுன் வந்து விட்டேன்.நீங்க வாங்கித்தான் ஆகணும்” னச் சொல்கிறார்.

காசாளர்  சொல்கிறார்” நான் சொன்னாச் சொன்னதுதான்.வாங்க முடியாது”
வார்த்தை தடிக்கிறது.

காசாளர்  முகப்பை மூடிவிட்டு உணவுக்குப் புறப்படுகிறார்.

வாடிக்கையாளர் மேலாளரைப் பார்த்துப் புகார் செய்யப் போகிறார்.

முடிவு எப்படியிருக்கும்?

இதைத் தவிர்த்திருக்க முடியாதா?

முடியும். எப்படி?

காசாளர்;”சார்.சாப்பிடும் நேரம் வந்து விட்டது.இதை வாங்கினால் எண்ணி முடிக்க நேரமாகும்.கொஞ்சம் காத்திருங்கள்.நான் சாப்பிட்டு விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்.  நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையென்றால் வாருங்களேன் இருவரும் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.”
(அல்லது)

வாடிக்கையாளர்: காசாளரை நெருங்கியதும்”சாரி,சார் பணம் சேகரிக்க நேரமாகி விட்டது.கடைசி நாள்.நீங்கள் சோர்ந்திருக்கிறீர்கள் .நீங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். இல்லையெனில் இருவரும் சேர்ந்து வெளியில் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்”

முடியாதா?

முடியும்.

நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்!


46 கருத்துகள்:

 1. ஷாட் பை ஷாட் சொல்றிங்க .. சினிமா எடுக்க போறிங்களா

  பதிலளிநீக்கு
 2. முடியாதது என்று இவ்வுலகில் எதுவுமே இல்லை - எல்லாமே..., நாம் நடந்து கொள்ளும் விதம், புரிதல், விட்டு கொடுத்தல்........... இது எல்லாம் இப்ப இல்லையோன்னு தோணுதுங்க

  பதிலளிநீக்கு
 3. //நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்!//

  அதுதான் பிரச்சினையே. நம்மில் பலர் மற்றவர்களைப்பற்றி நினைப்பதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. முடியாதது என்று எதுவுமில்லை... வார்த்தைகள்தான் முக்கியம்... சமீபத்தில் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்குமிடத்தில் ஒருவர் கும்பகோணத்திற்கு எவ்வளவு பயணக்கட்டணம் என்று கேட்டார். அதற்கு பயணச் சீட்டு விற்பவர்- சொன்னா குடுத்துடுவீங்களா? என்கிறார். பக்கத்தில் நின்ற எனக்கே கோபம் வந்தது. ஏன்யா பயணச்சீட்டு வாங்குவதற்காகத்தானே எவ்வளவுன்னு கேட்கிறார். அப்புறம் என்ன 'சொன்னா குடுத்துடுவீங்களான்னு கேள்வி என்று... ஆனால் அந்த நபர் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டார். இப்படித்தான் இருக்கிறார்கள். என்ன செய்வது...

  பதிலளிநீக்கு
 5. குழம்பி - (காபி)குளம்பி இதுதான் சரி... உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. மற்றவர் பிரச்னையைப் புரிந்து கொண்டு நடந்தால் எங்கும் சிக்கலே இல்லை. எவரும் புரிந்து கொள்ள முயல்வது கூட இல்லை என்பதுதான் பிரச்னை.

  பதிலளிநீக்கு
 8. ஆமாம் சார். தங்களின் கோணத்தில் இருந்தே சிந்திக்காமல், அடுத்தவர்கள் கோணத்திலும் சிந்தித்து பேசினால் மட்டுமே வீண் சச்சரவுகளை தவிர்க்க முடியும். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. குடந்தை அன்புமணி கூறியது...

  // குழம்பி - (காபி)குளம்பி இதுதான் சரி... உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி...//
  குழம்பி என்பதே சரி என நினைக்கிறேன்.(குழம்பு என்று சொல்வது போல்)பேச்சு வழக்கில் அது குளம்பியாகி விட்டது.
  நன்றி

  பதிலளிநீக்கு
 10. இது மாதிரி புரிந்து கொண்டு நடப்பது என்பது எல்லோருக்கும் வராது.பழகிக்கொண்டால் நல்லதுதான்.

  பதிலளிநீக்கு
 11. அனைவரும் அறிய வேண்டிய
  பதிவு, ஏன் நெறி என்றே
  சொல்ல வேண்டும்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. //// குழம்பி - (காபி)குளம்பி இதுதான் சரி... உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி...//
  குழம்பி என்பதே சரி என நினைக்கிறேன்.(குழம்பு என்று சொல்வது போல்)பேச்சு வழக்கில் அது குளம்பியாகி விட்டது//

  காபி என்பதே சரி ;-). ஆளுக்காள் சொல்லுற்பத்தித் தொழிற்சாலை நடத்தினால் விளங்கிடும். நான் சொல்கிறேன் குளம்பு / குழம்பி இரண்டும் சரியில்லை. கழஞ்பதிமஜ் என்பதே சரி.

  பதிலளிநீக்கு
 13. அருமையான அறிவுரை.

  (ஷாட் பை ஷாட்) 12B படம் இன்னொரு முறை பார்த்த மாதிரி இருக்கு. :)))

  பதிலளிநீக்கு
 14. ரொம்ப யோசிக்க வைத்தது. சாதாரண communication skill தான் இல்லையா? வெளியில மட்டுமில்லை வீட்டுலயும் இதை கடைபிடிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 15. அருமையா சொல்லி இருக்கீங்க சார். சீர் தூக்கி பார்த்தால் பல பிரச்சனைகள் வரவே வராது.

  பதிலளிநீக்கு
 16. >>ஷாட் பை ஷாட் சொல்றிங்க .. சினிமா எடுக்க போறிங்களா

  அண்ணன் படம் எடுத்தா நான் தான் டயலாக் ரைட்டர் ஹி ஹி

  பதிலளிநீக்கு
 17. நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்!


  அணுகுமுறையும்,
  எடுத்துச் சொல்லும் விதமும் வெற்றிதேடித்தரும் என்பதை அருமையாய் உணர்த்தும் பகிர்வு.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 18. நல்ல கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றி அய்யா....

  பதிலளிநீக்கு
 19. முடியும்!ஆனால் முடியாது!!!அப்புறம் பிரஷ்டீஜ் என்னாவுறது?ஹ!ஹ!ஹா!!!!!

  பதிலளிநீக்கு
 20. @அமரபாரதி
  நீங்கள் சொல்வதும் சரிதான்.ஆனால் கடைசியில் ஜ் என்பதற்குப் பதில் ச் வரவேண்டும்.ஏனெனில் ஜ் தமிழல்ல!இது எப்படியிருக்கு!
  நன்றி

  பதிலளிநீக்கு
 21. @அப்பாதுரை
  கட்டாயம் செய்யலாம்.ஆனால் மிகச் சிறந்தது வீட்டில் வாயை மூடிக்கொண்டு இருப்பது!
  நன்றி

  பதிலளிநீக்கு
 22. @சி.பி.செந்தில்குமார்
  அட்வான்ஸ் ரூ.1/=உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி விடுகிறேன்.ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டு விடலாம்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 23. புரிதல் இல்லைன்னா வாழ்க்கையே இல்லீங்களே!

  பதிலளிநீக்கு
 24. அணுகுமுறையும்,எடுத்துச் சொல்லும் விதமும் மட்டுமே வெற்றிதேடித்தரும் என்பது அழகாகச் சொல்லப்பட்டுள்ளது,

  பதிலளிநீக்கு
 25. வணக்கம்!

  // வாடிக்கையாளர் மேலாளரைப் பார்த்துப் புகார் செய்யப் போகிறார். முடிவு எப்படியிருக்கும்? //

  “வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்துக்கு வரும் மிக முக்கியமான நபர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை. நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம்” - மகாத்மா காந்தி

  என்ற பொன்மொழியுடன் கூடிய எல்லா வங்கிகளிலும் மேலாளர் அறையில் மாட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் படம்தான் விடை.

  பதிலளிநீக்கு