தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 20, 2012

சிவராத்திரியும் ஸ்ரீருத்ர பாராயணமும்

 இன்று மாலை 6 மணிக்குத் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் எங்கள் வேதக் குழுவின் ருத்ர பாராயணம் நடை பெற்றது.பாராயணம் முடிந்தபின் சிறப்பு தரிசனம்.எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபின் எனது நண்பர் ஒருவர் சொல்லிய படி சிவராத்திரி பற்றி ஏதாவது எழுத வேண்டுமே என யோசனை.எனவே பல இடங்களிலிருந்த பெற்ற தகவல்களின் ஒரு தொகுப்பாக மகாசிவராத்திரி பற்றிய இப்பதிவு!

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசியன்று மாத சிவராத்திரி ஆகும்.மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி  மகா சிவராத்திரியாகும்.


ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்:
நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.
யோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.
 பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக் கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூசை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை பூசை செய்தாள். பூசையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.   

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. 


இன்னொரு கதை. ஒரு நாள் அன்னை உமா விளை யாட்டாக   ஈசனின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும் என்றும் வழங்கப்படுகிறது
 

மற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான்.  தூக்கம் வராமலிருக்க வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் தன்னைஅறியாமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வம்  கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.
  
 

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக் கண்டு களிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

நான்கு காலப் பூசை விவரங்கள்
முதல் சாமம்- பஞ்சகவ்ய அபிசேகம், சந்தனப்பூச்சு, வில்வம் தாமரை அலங்காரம் அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்- சர்க்கரை பால் தயிர் நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல் துளசி அலங்காரம் வில்வம் அர்ச்சனை பாயாசம் நிவேதனம் யஜுர் வேத பாராயணம்.

மூன்றாம் சாமம் தேன் அபிசேகம் பச்சைக் கற்பூரம் சார்த்துதல் மல்லிகை அலங்காரம் வில்வம் அர்ச்சனை எள் அன்னம் நிவேதனம் சாமவேத பாராயணம்.

நான்காம் சாமம்- கரும்புச்சாறு அபிசேகம் நந்தியாவட்டை மலர் சார்த்துதல் அல்லி நீலோற்பலம் அலங்காரம் அர்ச்சனை சுத்தான்னம் நிவேதனம் அதர்வண வேத பாராயணம். 


பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.  

20 கருத்துகள்:

 1. நான்கு வித சிவராத்திரிகள் & நான்கு காலப் பூசை விவரங்கள்
  அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.
  ஓம் நமச்சிவாய !

  பதிலளிநீக்கு
 2. "சிவராத்திரியும் ஸ்ரீருத்ர பாராயணமும்"

  தொகுத்தளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. சிவராத்திரி பற்றிய சிறப்பான பல தகவல்களைத் திரட்டிக்கொடுத்துள்ளது பலருக்கும் பயன்படும். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. ஆலகால விஷமுண்ட சிவனின் கழுத்தை பார்வதி இறுகப்பிடித்தாள். விஷம் சிவனின் கண்டத்தோடு நின்றதால் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டான். சிவன் உலகைக் காக்க விஷமுண்ட நாள் சிவராத்திரி.
  எனவேதான் அன்று முழுவதும் உபவாசமிருந்து,கண் விழித்து சிவனை பூஜிக்கிறோம்

  பதிலளிநீக்கு
 5. சிவசிவா! பக்தி மேட்டர்ல கருத்துச் சொல்ற அளவுக்கு எனக்கு விவரம் பத்தாது. சிவராத்திரியில சிவனைப் படிச்சதுல சந்தோஷம்!

  பதிலளிநீக்கு
 6. சிவராத்திரியின் போது 'இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.’ ன எழுதியுள்ளீர்கள். எனது தந்தையார் ஒவ்வொரு சிவராத்திரியின் போதும் நான்கு கால பூஜை முடிந்தே நடு இரவுக்குப்பின் விரதத்தை முடிப்பார். நான் சிறுவனாக இருந்தபோது நானும், நடு இரவு வரை விழித்திருப்பேன் சிவராதிரிக்காக அல்ல. நான்கு காலங்களிலும் சிவனுக்கு படைத்த நிவேதங்களை உண்பதற்காக! சிவராத்திரி பற்றி அறியாத விஷயங்களை விரிவாக விளக்கியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சிவ ராத்திரியின் விசேஷங்களையும் சிவ ராத்திரி பற்றியும் விளக்கமாகச் சொல்லியிருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 8. சிவராத்திரி பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா

  பதிலளிநீக்கு