தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 09, 2011

சசி(சண்முகம் சிவலிங்கம்) கவிதை.

இன்று ஒரு கவிதை படித்தேன். அதன் தாக்கத்திலிருந்து விடுபட வெகு நேரமாயிற்று.அந்தக் கவிதையை உங்களுடன் பகிர விழைகிறேன்.

கவிஞர்.திரு.   சண்முகம் சிவலிங்கம் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்.

இதோ அந்தக் கவிதை--

”ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.


கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டிகள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.

நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.

வீதி சமைத்தேன்.

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மி யழவில்லை.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்ததும்
குடல் சுருங்கி நின்றார்கள்.

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்.
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்.
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆன வரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்.
போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

39 கருத்துகள்:

  1. இனிய மாலை வணக்கம் ஐயா,
    நலமாக இருக்கிறீங்களா?

    எமக்கெல்லாம் நன்கு பரிச்சியமானவரின் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

    போர்க் காலத்தில் இக் கவிதையினை ஒரு இசைத் தட்டில் பாடலாகவும் வெளியிட்டிருந்தார்கள்.

    இணையத்தில் தேடி அகப்பட்டால் அதன் லிங் இனை பின்னூட்டப் பெட்டியூடே பகிர்கிறேன்,

    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  2. மனதைப் பிசைகிறது கவிதை. ஆக்காண்டி என்றால் என்ன சார்..?

    பதிலளிநீக்கு
  3. முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்
    இரண்டு குளம் பாழு, ஒண்ணு தனியே இல்லை’
    என்ற பழைய பாடல் போல் தோன்றினாலும் கவிதையின் கருவின் பொருளைய உணர்ந்தபோது மனது வலித்தது உண்மை. நல்ல, மனதை நெருடும் கவிதையை, பதிவேற்றியதற்கு நன்றி.
    கவிஞர் சசிக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கண்ணீர் உகுத்தேன்
    கடல் உப்பாய் மாறியதே.// அவருடைய அனுபவத்தை இயற்கையோடு இணைச்சிருக்கார்.

    மனதை நெகிழச்செய்த கவிதை..

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி ஐயா .
    இக்கவிதைவரிகளை எழுதிய அந்தக் கவிஞருக்கு
    என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
    உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
  6. படைத்துவிட்டு காத்திருந்து காலம் சென்று இழந்த பல விடயங்களை சொல்லும் கவிதை மனதை கனக்க செய்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
  7. ஏற்கனவே வாசித்த ஒன்று...

    அறிமுகமான கவி...

    இருந்தாலும் மறுபடி வாசிக்கையில்...பாதிப்பு கூடுதல் தான்...

    பதிலளிநீக்கு
  8. நான் படித்திருக்கிறேன்.ஆக்காட்டி என்று படித்ததாக நினைவு.ஆக்கான்டியா? ஆக்காட்டியா? நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  9. அர்த்தம் பொதிந்த கவிதை....

    நிதர்சனம் மனதைத் தொட்டது....

    பதிலளிநீக்கு
  10. @கணேஷ்
    ஆள்காட்டிப் பறவை.ஆங்கிலத்தில் lapwing.
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  11. @shanmugavel
    ஆக்காண்டி என்றுதான் நான் படித்தேன்.அது ஆள்காட்டியைத்தான் குறிக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நாலு குஞ்சும் போர் புரிய
    நடந்து விட்டார் என்ன செய்வேன்
    ஆன வரைக்கும்
    அந்த மலைக் கப்பாலே
    போனவரைக் காணேன்.
    போனவரைக் காண்கிலனே./

    கடலளவு ஆழமான ஆழ்ந்த கருத்துக்களம்!...

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை
    பகிர்வுக்கு நன்றி
    த,ம 12

    பதிலளிநீக்கு
  14. ஆனாலும் குஞ்சுக்கு
    அரை வயிறு போதவில்லை.
    காதல் உருகக்
    கதறி அழுது நின்றேன்.
    >>>>
    கலங்க வைத்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை. அழகான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மனதை தொடும் கவிதை ... Please read my blog www.rishvan.com and leave your comments.

    பதிலளிநீக்கு
  17. இந்தக்கவிதையை சிறுவயதில் நானும் என் சகோதரர்களும் பாடித்திரிந்திருக்கிறோம். இப்போதுதான் அர்த்தம் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  18. Ramani கூறியது...

    //அருமையான கவிதை
    பகிர்வுக்கு நன்றி
    த,ம 12//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  19. ராஜி கூறியது...

    //ஆனாலும் குஞ்சுக்கு
    அரை வயிறு போதவில்லை.
    காதல் உருகக்
    கதறி அழுது நின்றேன்.
    >>>>
    கலங்க வைத்த வரிகள்.//

    //த ம 13//
    நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  20. Philosophy Prabhakaran கூறியது...

    // செம ஃபீலிங் ஆயிடுச்சு தல...//
    நன்றி பிரபா!

    பதிலளிநீக்கு
  21. FOOD கூறியது...

    //அருமையான கவிதை. அழகான பகிர்வு. நன்றி.//
    நன்றி சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  22. Rishvan கூறியது...

    //மனதை தொடும் கவிதை ... Please read my blog www.rishvan.com and leave your comments.//
    நன்றி ரிஷ்வன்.

    பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. Loganathan Gobinath கூறியது...

    //இந்தக்கவிதையை சிறுவயதில் நானும் என் சகோதரர்களும் பாடித்திரிந்திருக்கிறோம். இப்போதுதான் அர்த்தம் புரிகிறது.//
    நன்றி கோபிநாத்.

    பதிலளிநீக்கு
  24. மனதை உருக்கும் கவிதை
    வரிகள்!
    கவிஞருக்கும் எடுத்துக் காட்
    டிய தங்களுக்கும் பாராட்டுக்கள்!


    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு