தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 18, 2011

அங்கதன் காத்திருந்தான்---(நிறைவுப் பகுதி)



அன்னை உரைத்தபடி சுக்ரீவனிடமும் இராமனிடமும் ஆசி பெற அங்கதன் சென்றான்.இருவரும் இணைந்தே காணப்பட்டனர்.சுக்ரீவனை முதலில் வணங்கினான்.அவனும் ஆசி கூறினான்.பின் இராமனை வணங்கினான். ”நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ்வாய்” என வாழ்த்திய இராமன்,அவனை மார்புறத்தழுவினான்.அந்த நேரத்தில் அங்கதன் ஒரு புதிய அனுபவத்தை அடைந்தான்.எங்கோ மிதப்பது போன்ற அனுபவம்.மயிர்க் கூச்செரிந்தது.

அணைப்பிலிருந்து விடுபட்ட அங்கதன் தன் கோபம் குறைந்தது போல் உணர்ந்தான்.

”கூடாது.இவன் என் தந்தையைக் கொன்றவன் .காலம் கருதி நான் இப்போது நட்புடன் இருப்பேன்.காத்திருப்பேன் தகுந்த காலத்துக்காக”என மனதுள் உறுதி பூண்டான்.

சிறிது காலத்துக்குப் பின் சீதையைத் தேடி பல திசைகளிலும் வானரர்கள் சென்றபோது அங்கதனும் அதில் ஒருவன்.

பின் சீதையை அனுமன் கண்டு வந்து சேதி சொன்னபின்,இராமன் வானர சேனையோடு போருக்குப் புறப்பட்டான். போருக்கு முன் தூது அனுப்ப வேண்டும் என்று எண்ணியபோது இராமன் அங்கதனைத்  தேர்ந்தெடுத்தான்.

அங்கதன் போய் இராவணனைச் சந்தித்தான்.அப்போது அவன் கேட்ட கேள்வி அங்கதனைக் கலங்கச் செய்தது.

'"தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இரு கை நாற்றி,
பேதையன் என்ன வாழ்ந்தாய்"” என்று அவன் கேட்ட போது, அங்கதன் தன் நிலைமைக்காக நொந்தான்.தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்,

 ”காலம் வரும் அது வரை காத்திருப்பேன்.” என்று.

எல்லாம் முடிந்து கிஷ்கிந்தை திரும்பியதும் அங்கதன்  அன்னையைக் காண ஓடோடி வந்தான்.

“அம்மா!நடந்ததைக் கேள்விப் பட்டீர்களா?”

“எதைச் சொல்கிறாய் மகனே?இராமனின் வெற்றிதானே”

“அதுவல்ல.அதற்குப் பின் நடந்தது.இராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னானே அது.சே,தன் மனைவி மீதே நம்பிக்கை இல்லாத இவன் ஒரு ஆண்மகனா?”

“”தவறு மகனே! இராமனுக்கு மனைவி மீது முழு நம்பிக்கை இருந்ததால் தான் துணிந்து தீக்குளிக்க செய்து அதன் மூலம் உலகத்தாருக்கு உணர்த்தச் செய்தான்.அவள் ஒரு கற்புக்கனல்.அக்கனலை தீ ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவன் அறிவான்!”

அங்கதன் யோசனையுடன் அகன்றான்.

இராமன் அயோத்தி திரும்பினான்.

சில நாட்களுக்குப் பின் செய்தி வந்தது.இராமன்,யாரோ ஒருவனின் அவதூறுப் பேச்சைக் கேட்டுச்  சீதையைக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று.

அங்கதன் தாரையிடம் சொன்னான்.

தாரை கலங்கிப்போனாள்.எப்படி, ஏன்,என்று ஆயிரம் கேள்விகள்.

அங்கதன் சொன்னான்”அம்மா!அன்று சொன்னீர்கள்.இராமன் தன் மனைவியை நம்புகிறான் என்று.இப்போது என்னநடந்தது?எவனோ ஒருவன் சொன்ன சொல்லுக்காக மனைவியைக் காட்டுக்கனுப்பி விட்டான்.
யாருமே செய்யத் துணியாத ஒரு கொடுஞ்செயல் செய்தான்”

தாரை சொன்னாள்”மகனே! இராமன் அரசன்.அவன் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாயிருக்க வேண்டும்.எனவேதான் இந்த முடிவு எடுத்திருக்கிறான்.அவன் சீதையை எவ்வளவு நேசித்தான் என்பது யாவரும் அறிந்ததே.வனத்தில் சீதையைப் பிரிந்தபோது நிலை குலைந்து போனானே!”

”தன் உயிரினும் மேலான சீதையை இன்று பிரிந்து தன்னைத்தானே தண்டித்து  கொண்டு ,உயிரற்ற உடல் போல் இருக்கும் அவனுக்கு வேறென்ன தண்டனை இனி நீ தரப்போகிறாய்? விட்டு விடு .”

அங்கதன் சிந்தித்தான்.” /ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை, பிரிந்த பின்னை,/ இராமன் ஒரு உயிரற்றவன்தான் அவனைக் கொல்லுதல் நமக்கு அழகன்று.”

ஆனால்...........

இன்று அரச போகத்தில் தன்னை மறந்து ,நாட்டை மறந்து.குடி,பெண்டிர் எனப் போகத்தில் இருக்கும் அந்தத் துரோகி சிற்றப்பன்?இப்போதே நாட்டு மக்கள் என் மீது அதிக அன்பு கொண்டுள்ளனர். அதிகம் படை வீரரும் நான் சொல்வதைக் கேட்கச் சித்தமாயிருக்கின்றனர். நாள் நெருங்கி விட்டது. அந்த சுக்ரீவனை நிச்சயம்  கொல்வேன்”

அங்கதன் காத்திருந்தான்!


டிஸ்கிஇது முழுவதும் கற்பனையே.இராமாயணத்தில் இதற்கான கிளைக் கதையோ,கருவோ கிடையாது.

தந்தையின் வீரத்தைக் கண்டும் அது பற்றிப்பலர் கூறக்கேட்டும் வளர்ந்த ஒரு சிறுவன்,தன் தந்தை வஞ்சகமாக் கொல்லப்பட்டார் என்றறியும்போது, என்ன மன நிலையை அடைவான்?அதைத்தான் நான் இங்கு கதையாக்கி விட்டேன்.இது முழுவதும் அங்கதன் பார்வையே!


”மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை,”----போற்றுகிறேன்!.

நன்றி.

46 கருத்துகள்:

  1. காப்பியங்கள் ஏன் இப்படி நடந்திருக்க கூடாது என்ற கற்பனை ரசிக்க தக்கவை... எஸ்.ரா வின் உபபாண்டவம் மற்றும் பிரளயனின் ஒரு நாடகமும் இவ்வகை சார்ந்தது.. இந்த வகை இலக்கியத்திற்கு ஒரு பெயர் வைப்பார்கள் நான் அதை மறந்து விட்டேன்... நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ம்... கற்பனைக் குதிரையின் ஓட்டம் அருமை. புராணக் கதைகளை வேறு வடிவங்களில் சிந்திப்பது நல்ல விஷயம்தான். அழகான சிந்தனை. மிக ரசித்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. அப்போ கடைசி வரைக்கும் அங்கதான் ஒண்ணுமே செய்யலியா..என்னனே இது...!

    பதிலளிநீக்கு
  4. கற்பனையென்றாலும்,
    உண்மையில் அங்கதன் என்ன நினைத்திருப்பான் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளும்/இரசிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!
    மேலும் இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்க்கலாமா?

    ஒரு விடுகதையை எங்கள் ஊரில் சொல்வார்கள்.இந்த நேரத்தில் அதை சொல்ல நினைக்கிறேன். ஒருவனுக்கு காலில் முள் தைத்துவிட்டதாம்.அதை எப்படி எடுப்பது எனக் கேட்டபோது பதிலை கீழ் கண்டவாறு சொன்னார்களாம்.
    முடிந்தால் விடையைக் கண்டுபிடித்து அடுத்த பதிவில் எழுதவும்.

    “பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
    சத்துருவின் பத்தினியின்
    காலெடுத்துத் தேய்”

    பதிலளிநீக்கு
  5. அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாயிருக்க வேண்டும்.

    சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட்வளாக இருக்கவேண்டும் என்ற ஷேக்ஸ்பியரின் காவிய வரிகளை எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    அற்புத படைப்புக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. suryajeeva கூறியது...

    //காப்பியங்கள் ஏன் இப்படி நடந்திருக்க கூடாது என்ற கற்பனை ரசிக்க தக்கவை... எஸ்.ரா வின் உபபாண்டவம் மற்றும் பிரளயனின் ஒரு நாடகமும் இவ்வகை சார்ந்தது.. இந்த வகை இலக்கியத்திற்கு ஒரு பெயர் வைப்பார்கள் நான் அதை மறந்து விட்டேன்... நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்//
    நினைவு வந்ததும் சொல்லுங்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கணேஷ் கூறியது...

    // ம்... கற்பனைக் குதிரையின் ஓட்டம் அருமை. புராணக் கதைகளை வேறு வடிவங்களில் சிந்திப்பது நல்ல விஷயம்தான். அழகான சிந்தனை. மிக ரசித்தேன் நண்பரே...//
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  8. விக்கியுலகம் கூறியது...

    //அப்போ கடைசி வரைக்கும் அங்கதான் ஒண்ணுமே செய்யலியா..என்னனே இது...!//
    இராமாயணக் கதையை மாத்த முடியாதே!
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  9. வே.நடனசபாபதி கூறியது...

    //கற்பனையென்றாலும்,
    உண்மையில் அங்கதன் என்ன நினைத்திருப்பான் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளும்/இரசிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!
    மேலும் இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்க்கலாமா?

    ஒரு விடுகதையை எங்கள் ஊரில் சொல்வார்கள்.இந்த நேரத்தில் அதை சொல்ல நினைக்கிறேன். ஒருவனுக்கு காலில் முள் தைத்துவிட்டதாம்.அதை எப்படி எடுப்பது எனக் கேட்டபோது பதிலை கீழ் கண்டவாறு சொன்னார்களாம்.
    முடிந்தால் விடையைக் கண்டுபிடித்து அடுத்த பதிவில் எழுதவும்.

    “பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
    சத்துருவின் பத்தினியின்
    காலெடுத்துத் தேய்”//
    பதில் தெரியும்.ஆனாலும் பதிவிலேயே சொல்கிறேன். எழுதுவதற்கும் ஒரு விஷயமாச்சே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாயிருக்க வேண்டும்.

    சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட்வளாக இருக்கவேண்டும் என்ற ஷேக்ஸ்பியரின் காவிய வரிகளை எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    அற்புத படைப்புக்குப் பாராட்டுக்கள்..//
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  11. கதையை மாற்றிப்போட்டு ஒரு பதிவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் தல....!!!

    பதிலளிநீக்கு
  12. அங்கதன் பழிவாங்க காத்து இருக்கிறான், ஹி ஹி நல்ல முடிவு...!!!

    பதிலளிநீக்கு
  13. அருமை சார்

    பின்னொரு காலத்தில் இது ஒரு கிளை கதையா கூட மாறலாம்..

    பதிலளிநீக்கு
  14. அற்ப்புதமான முயற்சி..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. நல்ல கற்பனை ஐயா அங்கதன் உண்மையில் அறத்தின் வழி சென்றான் என்று தான் அருனாசலக் கவிராயரின் கம்பநாடகம் கூறுகின்றது.கிலைக்கதையை நாடகம் ஆக்கும் அளவுக்கு இருக்கு ஐயாவின் கற்பனை வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //கதையை மாற்றிப்போட்டு ஒரு பதிவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் தல....!!!//
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அங்கதன் பழிவாங்க காத்து இருக்கிறான், ஹி ஹி நல்ல முடிவு...!!!//
    :)

    பதிலளிநீக்கு
  18. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

    //அருமை சார்

    பின்னொரு காலத்தில் இது ஒரு கிளை கதையா கூட மாறலாம்..//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    //வாழ்த்துக்கள்.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //அற்ப்புதமான முயற்சி..

    வாழ்த்துக்கள்//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  21. தனிமரம் கூறியது...

    // நல்ல கற்பனை ஐயா அங்கதன் உண்மையில் அறத்தின் வழி சென்றான் என்று தான் அருனாசலக் கவிராயரின் கம்பநாடகம் கூறுகின்றது.கிலைக்கதையை நாடகம் ஆக்கும் அளவுக்கு இருக்கு ஐயாவின் கற்பனை வாழ்த்துக்கள்!//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. ////இது முழுவதும் கற்பனையே.இராமாயணத்தில் இதற்கான கிளைக் கதையோ,கருவோ கிடையாது.////

    அட வித்தியாசமான முயற்சி நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் ஜயா

    பதிலளிநீக்கு
  23. புராணக் கதை...
    நல்ல முயற்சி...அழகான சிந்தனை...ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  24. நிறைவான பகிர்வு அய்யா,நன்றி.

    பதிலளிநீக்கு
  25. shanmugavel கூறியது...

    //நிறைவான பகிர்வு அய்யா,நன்றி.//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  26. அய்யா, அசத்தலான கற்பனை ஓட்டம், உங்கள் எண்ணத்தின் வாட்ட சாட்டத்தை நிருபணப்படுத்தியது. அமர்க்களம்

    பதிலளிநீக்கு
  27. உங்கள் கற்பனையும் அருமையாகத்தான் இருக்கின்றது .வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    பதிலளிநீக்கு
  28. என்னண்ணே ? அதுக்குள்ள முடிச்சீட்டீங்க?

    அப்புறம் எதுல டைப்பிங்க்? வார் ஃபாண்ட்? சரி இல்லையே? கவனிங்க

    பதிலளிநீக்கு
  29. அருமை பித்தரே!
    கற்பனை என்றாலும்
    அற்புதம்!

    கம்பனின் கவிநயத்தை
    ஆங்காங்கே எடுத்துக் காட்டி
    பொன குடத்திற்கு பொட்டு
    வைத்தீர்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  30. சார் இப்படி பல்பு கொடுத்துட்டீங்களே? நானும் ராமாயணத்தில் வரும் கதை என்றே நம்பினேன். ஆனால் உங்கள் கற்பனை வளம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  31. வாத்யாரே
    நாயகன் படத்லே,
    "மெரா பாபா மர்கயா" அப்டீனு ஒரு கேரக்டர்தான்பா எனக்கு நாபகத்துக்கு வர்து. கட்ஸியா இன்னா பண்றான்பாருபா, ஹீரோவயெ போட்டுத்தள்ளுரான்பா.
    கரீட்டா?

    பதிலளிநீக்கு
  32. @சி.பி.செந்தில்குமார்
    இந்த ஃபாண்ட்,கீண்ட்டெல்லாம் எதுவும் தெரியாது!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  33. ஒரு புது கோணத்தில் வாலி வதமும் அதன் பின் அவன் மைந்தன் அடைந்த வேதனையையும் கண்டேன் . பழி வாங்கும் உணர்ச்சியில் உந்தபட்டால் ஒருவன் வாழ் நாள் முழுவதும் நிம்மதி இழப்பது உறுதி என்பதை " அங்கதன் காத்திருந்தான் " உணர்த்துகிறது .
    திரு சபாபதி அவர்களின் விடுகதையும் , அடுத்த பதிவில் அதன் பதிலும் அருமை . தங்கள் பதிவுகளும் அதில் வரும் இது போல் பின்னூட்டங்கள் நல்ல விருந்து ....வாசு

    பதிலளிநீக்கு