தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 26, 2015

தமிழ் நாட்டில் புதிய கட்சி பிறந்தது!



ஆயிரம் உண்டிங்கு சாதி என்றான் பாரதி.

இப்போது இருந்தால் ஆயிரம் உண்டிங்கு கட்சி என்றும் பாடியிருப்பானோ என்னவோ!

அந்த அளவுக்கு நாட்டில் கட்சிகள் பெருகி விட்டன

ஒவ்வோரு சாதிக்கும் ஒரு கட்சி.அதைத்தவிர இடது ,வலது,மேலே,கீழே, என்று கட்சிகள்.

இரண்டு பேர் இருந்தால் ஒரு கட்சி தொடங்கி விடலாம்.


பெயருக்கா பஞ்சம்?

அதுவும் தமிழ் நாட்டில் கட்சி தொடங்கினால் உதவ ஏராளமான பெயர்கள்.

பெயரில் திராவிட,தமிழ்,தேசிய என்று ஏதாவது!

காந்தி,காமராஜ்,அண்ணா,பெரியார், பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

முன்னேற்ற,முற்போக்கு,மறுமலர்ச்சி என்று அடைமொழி சேர்த்துக் கொள்ளலாம்.

கொள்கையில் ஏதாவது ஒரு இசம் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையெல்லாம் மனதில் வைத்து நான் சனவரி 2011இல் ஒரு பதிவு எழுதினேன்.அப்போது தேர்தல் நேரமாக இருந்த்து ஒரு கூடுதல் வசதி


 வலைச்சர அறிமுகம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியே.நமக்கான அங்கீகாரமாக அதை உணர்கிறோம். நான் முதல் முதலாக வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது இந்தப்பதிவுக்காகத்தான்.. அறிமுகம் செய்தவர்,அரசியல் பதிவர் ரஹீம் கசாலி அவர்கள்

இதோ பதிவு

//மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் நேற்று அறிவிக்கப் பட்டார்.அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மயிலை சட்டமன்றத்தொகுதி வேட்பாளராக திரு.சென்னை பித்தன் அவர்கள் போட்டியிடுவார் என்று தெரிவித் திருக்கிறார்கள்.

இதையடுத்து,டுபாகூர் டைம்ஸ் நிருபர்,திரு.பித்தன் அவர்களைப் பேட்டி காணச் சென்றார்.அங்கே,வீட்டு வாசலில்,கூட்டமாகப் பலர் காத்திருந்தனர்.அருகில் நின்றவரிடம் விசாரிக்க அவர் சொன்னார் ”நாங்கள் எல்லோரும் தமிழ்ப் பதிவர்கள்.திரு சென்னை பித்தன் அவர்களும் ஒரு தீவிரமான பதிவர் எனவே அவர்களை வாழ்த்தி, எங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவிப்பதற்காகக் குழுமியிருக்கிறோம்” என்று .நிருபர் யோசித்தார்; தினம்,தினம் பெருகி வரும் தமிழ்ப் பதிவர் எண்ணிக்கையைப் பற்றி அவர் அறிவார்!! அத்தனை பதிவர்களும் ஆதரவு தெரிவித்தால் சென்னை பித்தன் வெல்வது எளிது என்று தீர்மானித்தார்!!

அப்போது வீட்டின் உள்ளிருந்து வந்த ஒருவர் சொன்னார் ”பதிவர்களுக்கெல்லாம் காலை உணவுக்கு ஐயா ஏற்பாடு செய்திருக்கிறார்.அனைவரையும் உணவருந்த அழைக்கிறேன்” என்று.உடனே நிருபர் தவிர மீதி அனைவரும் சென்று விட்டனர். நிருபருக்கும் பசிதான்.போகலாமா என யோசித்தார்.ஆனால் கடமை முக்கியம் என்பதால்,பேட்டிக்குப் பின் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து விட்டார்.மற்றொருவர் வெளி வந்து ,இவரை யாரென்று கேட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே,ஒரு குளுகுளு அறையில்,மாலைக் குவியலின் நடுவே பித்தன் அமர்ந்திருந்தார். பச்சை,வெள்ளை,சிவப்பு,கருப்பு,மஞ்சள்,ஆகிய வண்ணங்களில் கரை போட்ட வேட்டி; வெண்மையான கதர் சட்டை; தோளிலும்,வேட்டி போன்றே பல வண்ணக் கரை போட்ட மேல் துண்டு.

”நான் டுபாகூர் டைம்ஸ்.நிருபர்”
“மகிழ்ச்சி;அமருங்கள்”
“நீங்கள் மயிலைத்தொகுதியில் போட்டியிடுவதுபற்றி......”
“கட்சி மேலிடத்தின் கட்டளை”
"மேலிடம் என்றால்...?”
”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”
“கட்சி பற்றி நான் முன்னால் கேள்விப் பட்டதில்லையே?”
”.புதிய கட்சிதான், ஆனால் புதுமை நிறைந்தகட்சி.”
“உறுப்பினர்கள்......”
“சேர்க்கை நாடு முழுவதும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்”
”கட்சியின் கொள்கை.......”
“கட்சியின் பெயரிலேயே இருக்கிறது.நேருவின் சோசலிஸம், காமராஜின் ஜனநாயக சோசலிஸம் ,ராஜாஜியின் தாராள மயமாக்கல்,பெரியார்,அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகள் எல்லாம் சேர்ந்தது எங்கள் கொள்கை.கொள்கை விளக்கக் கையேடு ஒன்று தயாராகிகொண்டிருக்கிறது..’அநேகாபெராயிஸம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். எதிர் கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான கொள்கை இதுதான்.வேறொன்றில்லை!”

“!!!!!!!!!!!!!!!”

”உடனடித்திட்டங்கள் ஏதாவது........”

”எனது முதல் முயற்சி, என் தலைமையில்,தமிழ்ப் பதிவர் வாரியம் ஒன்று அமைப்பது. பதிவர்களுக்கு வீடு கட்டித்தர அரசு முன் வர வேண்டும்.அதில் மூத்த பதிவர்களுக்கு முன்னுரிமை-மூத்த என்றால் பதிவுலகில் அல்ல,வயதில்.(அப்போதுதானே எனக்கு நல்லது!)

“நல்ல திட்டம்தான்!வேறுதிட்டங்கள்.....?”


“பல உள்ளன.பதிவர்களுக்கு இலவசக் கணினி வழங்குவது,சிறந்த பதிவுகளுக்கு(என்புகழ் பாடும்) பரிசளிப்பது,பதிவர்களுக்கு மேலவையில் ஒரு இடம் ஒதுக்குவது இப்படிப்பல.”

”புரட்சிகரமாகச் சிந்திக்கிறீர்கள்”

“எனக்குப் பாராட்டே பிடிக்காது. பதிவுலகக் கவிஞர் மாதவன் என்பவர்(உண்மையில் அப்படி யாரும் இல்லை என நம்புகிறேன் -செ.பி.)ஒருவர் என்னைப் பாராட்டி ஒரு பாட்டெழுதி யுள்ளார்.இதோ பாருங்கள்”
நிருபர் பார்க்கிறார்
ஆதவன்
--------
நீ ஆதவன்
அறிவில் ஆதவன்
அழகில் ஆதவன்
ஆற்றலில் ஆதவன்
ஈகையில் ஆதவன்
எழுத்தறிவில் ஆதவன்
உயர்வில் ஆதவன்
கருணையில் ஆதவன்
புத்தியில் ஆதவன்.
உன் அருள் பெற்ற நான்
ஒரு மா தவன்!”
நிருபர் வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துப் பார்க்கிறார்-அறிவில்லாதவன்................என்று.--சிரிப்பு வருகின்றது.
நிருபர் சொன்னார்”கவிதை பொருத்தமாகத்தான் இருக்கிறது!”

அப்போது பதிவர்களெல்லாம் காலை உணவு முடித்து விட்டு வரவும்,பேட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று பித்தன் அவர்கள் கூற,நிருபர் புறப்பட்டார்
“அப்ப நானும் டிஃபன் சாப்பிட்டு விட்டுப் புறப்படுகிறேன்”
பதிவர்களை உணவுக்கு அழைத்துச் சென்றவர் சொன்னார் ”டிஃபனா?எல்லாம் காலியாகி விட்டதே!”

நிருபர் ஏமாற்றத்துடன் புறப்பட்டார்.//

31 கருத்துகள்:

  1. சார்.. மாதவன் கவிதை பஞ்ச்..

    பிசிறில்லாத நடை.. ரசித்தேன்.

    உண்மையாலுமே அருமை.

    God Bless You

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டத்தில் எல்லோரும் சொல்லும் கருத்து “அருமை”!
    அதனால் வேறுபடுத்தி,உண்மையாலுமே அருமை. என்று சொல்லியிருக்கிறீர்கள்
    உண்மையாலுமே நன்றி!

    பதிலளிநீக்கு
  3. திட்டங்கள் + அநேகாபெராயிஸம்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  4. திட்டங்களும் கவிதையும் அருமை ஐயா...
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ஹாஹா! செம காமெடி! இந்த பதிவை அப்போது படிக்கவில்லை! இப்போது இடைத்தேர்தலுக்கு பொருத்தமாக இருக்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு

  6. 2011 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள் தாங்கள் வெளியிட்ட இந்த பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டத்தையும் அதற்கு தாங்கள் அளித்த பதிலையும் ‘நினைத்துப்பார்க்கிறேன்’.

    இந்த பதிவை எத்தனை தடவை வேண்டுமானாலும் மீள் பதிவு செய்யலாம். ஏனெனில் என்றைக்கும் பொருத்தமான பதிவு இது!

    பதிலளிநீக்கு
  7. கட்சி தொடங்குவதும், தேர்தலில் நிற்பதும் இருக்கப்பட்ட சீமான்கள்களால்தான் முடியும்.. அய்யா....

    பதிலளிநீக்கு
  8. எனக்குத்தான் முதலில் வீடு! யாரும் போட்டிக்கி வரக்கூடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் ஐயா!நீங்கள்தானே அனைவரினும் மூத்தவர்
      நன்றி

      நீக்கு
  9. படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். மிக்க மகிழ்ச்சியாக மிகவும் சுவையாக இருந்தது. பாராட்டுகள். ஏற்கனவே இதனைப் படிக்காத எனக்கு மீள் பதிவாகத் தந்துள்ளதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஐயா !

    கட்சியில் ஆதவன் கட்டிய பாட்டினை
    ஓட்டிப் படித்தால் உதைவிழும் போல இருக்கு கா கா கா

    அருமை அருமை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கொள்கைப் பரப்புச் செயலாளர் பதிவு
    எனக்குத்தானே
    போட்டி ஏதும் இருக்காதே

    பதிலளிநீக்கு
  12. என்ன கொடுமை என்றால் ,புதிதாய் பிறந்த கட்சியின் பெயரில் தொழிற்சங்கமும் உருவாகி விடுகிறது ,தொழிலாளியின் உரிமைதான் காற்றில் பரந்து விடுகிறது :)

    பதிலளிநீக்கு
  13. ஆஹா புதிய கட்சியில் நானும் ஒரு உறுப்பினரா?

    ரசித்தேன். முன்பு படித்த நினைவில்லை......

    பதிலளிநீக்கு
  14. இந்த வருடம் ஆரம்பித்து விடலாம் ஸார். அடுத்த வருட சட்டமன்றத் தேர்தலுக்கு உதவும். கூட்டணிக்கு யார் வருகிறார்கள் என்று பார்க்கலாம். வலைப்பதிவர்களும் அவர்தம் குடும்பத்தினரின் ஆதரவும் உண்டே... ஜூலை முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் ஓட்டம் போல அறிவித்து விடலாம்.

    ஸார்.. அப்புறம் எனக்கு என்ன பதவி அங்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பையனுக்கும் பெண்ணுக்கும் முக்கிய பதவிகள்;கோபசே ரமணிக்குக் கொடுத்தாச்சு!நீங்கள்....துணைப் பொதுச் செயளாளர் ஆகி விடுங்க!
      நன்றி

      நீக்கு
  15. அட நம்ம கட்சி! நல்லாருக்குதே! ஆரம்பிச்சுடலாம் சார்!

    //மேலிடம் என்றால்...?”
    ”நான்,என் மகள்,மகன் அடங்கிய ஒரு குழு இருக்கிறது”//

    சார் இலவசத் திட்டம், கவிதை எல்லாம் செம....மிகவும் ரசித்து ரசித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது....கட்சி உறுப்பினர் பதிவர்களுக்கு மருந்தும் இலவசத்துக்கும் அப்படியே சொல்லிடுங்க...நாங்களும் உறுப்பினர் ஆகிவிட்டோம்... நண்பர் ஸ்ரீராமுக்கு துபொசெ...எங்களுக்கு அணில் இடமாவது இருக்குமில்லையோ...

    பதிலளிநீக்கு