தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 10, 2015

மந்திரத் தண்ணீர்!



ஒரு கிராமத்தில் ஒரு சாமியார் இருந்தார்.அவர் இந்தச் சாமியைப்போல  பித்தனாக இல்லாமல் பெரிய ஞானியாக இருந்தார்.பல ஊர்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சனைகளோடு வந்தனர்;அவர் அதற்கான தீர்வை எடுத்துரைத்தார்.

ஒரு நாள் ஒரு பெண் வந்தாள்.அவள் மாமியார் எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டே இருப்பதாகவும்,அது தனக்கு எரிச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றது என்று சொன்னாள்.சாமியார் அவளிடம் ஒரு சிறிய சீசாவில் தண்ணீர் கொடுத்துச் சொன்னார்இது மந்திரத்தண்ணீர்.எப்போது சண்டை தொடங்கினாலும்,இதில் கொஞ்சம் உன் வாயில் ஊற்றிக்கொண்டு,விழுங்காமல் உன் மாமியார் சத்தம் போட்டு முடியும் வரை இரு.பின்னர் விழுங்கி விடு.”

அதைப் பெற்றுக் கொண்டு அவள் போய்விட்டாள்.

சிலநாட்கள் சென்றன.அந்தப் பெண் மீண்டும் வந்தாள்.சாமியாரிடம் சொன்னாள் சாமி!அந்தத்தண்ணீரின் மகிமையே மகிமை.நீங்கள் சொன்ன படியே செய்தேன். இப்போது என் மாமியாருடனனான சண்டை வெகுவாகக் குறைந்து விட்டது சாமியார் சிரித்துக்கொண்டார்.சண்டையைக் குறைத்தது தண்ணீர்தான்;ஆனால் மகிமையால் அல்ல.அவள் வாயைத்திறக்க முடியாமல் அது செய்ததனால்!சிறிது பொறுமை பெரிய பலன்களைக் கொடுக்கும்.

இது தெரிந்திருந்தாலும் நம்மால் பொறுமை காக்க முடிவதில்லை.எந்த நிகழ்வுக்கும் உடன் எதிர்ச் செயலாற்றி விடுகிறோம் .

உங்கள் எல்லோருக்கும் சகாதேவனைத் தெரியும்.நடிகர் ஈ.ஆர்.சகாதேவன் அல்ல; பாண்டவர்களில் கடைசியான சகாதேவன்.அவன் சோதிட சாத்திர விற்பன்னன்.நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் வல்லமை பெற்றவன்.அவன் நடக்கப்போகும் நிகழ்வுகளை எடுத்துரைத்திருந்தால்,பாஞ்சாலி ஐவருக்கும் மனைவியாக இருக்க நேர்ந்திராது.சூதாட்டம் இல்லை.துகிலுரிதல் இல்லை.வனவாசம் இல்லை.பாரதப் போர் இல்லை.ஆனால் அவன் சொல்லவில்லை.ஏன் ?அவனாகவே முன்வந்து ஏதாவது வருவதுரைத்தால் அவன் தலை சிதறும் என்பது விதி.அது போல் நமக்கும் சாபம் ஏதாவது இருந்தால் பொறுமை காப்போமோ என்னவோ.?

சாபம் ஏதுமின்றியே பொறுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.பல நேரங்களில் மந்திரத் தண்ணீர் இல்லாமலே வாயை மூடிக் கொண்டிருக்கப் பழகுங்கள்.வள்ளுவர் சொல்கிறார்

 ”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்  பட்டு.”

எனவே யோசித்துப் பேசுங்கள்

கோபம் வரும்போது பேச்சைத் தள்ளிப் போடுங்கள்.

நலமோடு வாழுங்கள்

(ஸ்வாமி பித்தானந்தவின் உரையிலிருந்து)


33 கருத்துகள்:

  1. அருமையான வாழ்வியல் உண்மை ஐயா அழகாக விளக்கினீர்கள்.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. நல்ல அறிவுரை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை!

    பதிலளிநீக்கு
  3. இது யாகவா முனிவருக்குச் சொல்லப்பட்ட குறளோ என்று அப்போது நினைத்திருக்கிறேன்
    “யாகவ ராயினும் நாகாக்க ” என்பதாய் :)

    மந்திரத்தண்ணீரின் மகிமை அறிந்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கோபம் அடக்கவும் இது நல்ல
    வழியாகப் படுகிறதே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //
    அந்தப் பெண் மீண்டும் வந்தாள்.சாமியாரிடம் சொன்னாள் ”சாமி!அந்தத்தண்ணீரின் மகிமையே மகிமை.நீங்கள் சொன்ன படியே செய்தேன். இப்போது என் மாமியாருடனனான சண்டை வெகுவாகக் குறைந்து விட்டது”//

    நான் கேட்டு இருந்த ஜோக் கொஞ்சம் வித்யாசமா இருந்தது. இருந்தது எசன்ஸ் ஒன்று தான்.

    நான் கேட்ட ஜோக்.

    " அந்தப் பெண் மீண்டும் வந்தாள்.
    சாமியாரிடம் சொன்னாள். சாமி. அந்தத் தண்ணீரின் மகிமையே மகிமை. இப்போது என் மாமியாருடன் சண்டையே இல்லை. " என்றாள்.
    சாமியார் கேட்டார்: நான் சொன்னபடி தானே செய்தாய் !!
    பெண்:
    கொஞ்சம் வித்யாசம். நான் குடிப்பதற்கு பதிலாக, என் மாமியாருக்குக் கொடுக்கும் காபியில் தினம் ஒரு ஸ்பூன் கலந்து கொடுத்தேன்.இப்ப வாயே திறக்கறது இல்லை.
    சாமியார்: இப்ப சந்தோசம் தானே..
    பெண்; சாமி. இன்னொரு பாட்டில் தாங்க. அந்த பாட்டில் தீர்ந்து போயிடுத்து
    subbu thatha
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. நல்ல அறிவுரை இது ஐயா. நல்லா சொல்லியுள்ளீர்கள்.
    நன்றிகள்.

    தம +1

    பதிலளிநீக்கு
  7. வர வர பித்தானந்தா மிகவும் பிடித்துப் போனவராகிறார்.

    Simple and truthful.

    God Bless You

    பதிலளிநீக்கு
  8. இன்னொரு மருமகள் செய்தது ...மாமியார் பேச்சு எல்லை மீறியதால் ,மந்திரத் தண்ணீரை மாமியார் மேல் துப்பி அபிஷேகம் நடத்தி விட்டாராம் :)

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    வாழ்வியல் தத்துவத்தை அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. ‘மௌனம் சர்வார்த்த ஸாதகம்’என்பார்கள். வாயை மூடி இருந்தால் வீண் சச்சரவுகளை தடுக்கலாம் என்று விளக்கிய ஸ்வாமி பித்தானந்தா அவர்களின் முழு உரையையும் தரலாமே?

    பதிலளிநீக்கு
  11. மந்திரத் தண்ணிர் நல்ல தந்திரத் தண்ணிர்!

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான தத்துவம் சொன்ன நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நல்ல கருத்துச் செறிந்த கதை. ஆம் அது மாமியராக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி அவர்கள் கோபப்படும் போதோ, இல்லை நமக்குக் கோபம் வரும் போதோ, நாவடக்கி மௌனம் சாதித்தால், நாட்களும், வாழ்க்கையும் கனிந்துவிடும்....

    பதிலளிநீக்கு