தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 01, 2012

ஓய்வில் உறவுகள் தேடும் ஓர் உள்ளம்!

நேற்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் வாசகங்கள் இவை—

“நான் 29-02-1952 அன்று ,முழுகிக் கொண்டிருக்கும் ஒரு குடுமபத்தைக் காப்பதற்காக மிகக் குறைந்த சம்பளத்தில்  வங்கிப் பணியொன்றில் சேர்ந்தேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் என் முயற்சிகள் வீணாகி விடவில்லை என்பதாகவே தோன்றுகிறது.எத்தனை பேருக்கு இன்னும் நினைவிருக்கிறதோ, தெரியவில்லை.அவர்கள் அனைவருக்கும் கடவுளின்  அருள் கிட்டட்டும்”

இம் மின்னஞ்சலை அனுப்பியவர் எனக்கு நெருக்கமான உறவினர்தான்.தனது 18 வயதில் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புத்,தலை மகனான அவருக்கு வந்து சேர்ந்தது. குடும்பத் தலைவனான அவரது தந்தையை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த குடும்பம் அது.அவருக்குப் பின் நான்கு குழந்தைகள்.எனவே வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்.முதல் இண்டு மாதங்கள் சம்பளமின்றிப் பணி பயில்பவராக சேவை.பின் 40 ரூபாய் சம்பளம்.அவர் தன் உடன் பிறப்புகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவே இருந்து வந்திருக்கிறார்.அவரது கடமைகளை அவர் என்றும் செய்யத் தவறியதில்லை.  அவரது முயற்சிகள் நிச்சயம்  நல்ல பலனளித்தே இருக்கின்றன. எனவே அவர்கள் அனைவரும் அவரை நிச்சயமாக நன்றியுடன் நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால் காலம் மாறுகிறது.அனைவருக்கும் வயதாகி விட்டது.அவரவர் குடும்பம் குழந்தைகள், பேரப்பிள்ளைகள், பல புதிய உறவுகள்,பிரச்சினைகள் என்ற சுழலில் மாட்டிக் கொள்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின்  கட்டாயங்கள், பழைய நினைவுகளை  பின்னுக்குத் தள்ளுவது நிகழக் கூடியதே.அதனால் அவர்கள் அதை நினைக்கவில்லை ,மறந்து விட்டார்கள் என்பதல்ல.சமயம் வரும்போது அந்நினைவுகள் மேலேறி வரும் என்பது சந்தேகமில்லை.

ஒரு வேளை அவர் அவருடன் பணி புரிந்தவர்கள் எத்தனை பேருக்கு நினைவி ருக்கிறதோ எனக் கேள்வி எழுப்பியிருப்பாரானால்,அந்த சந்தேகமும் அவருக்கு வந்திருக்க வேண்டிய அவசிய மில்லை.  ஏனெனில் அவர் எப்போதுமே மிக  நகைச்சுவை உணர்வு மிகுந்த. .மற்றவர்களுடன் எளிதில் நன்கு  பழகக் கூடியவராக, தான் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவரையும் மகிழ்விப் பராகவே  இருந்திருக்கிறார்.எனவே உடன் பணி புரிந்தவர்களும் அவரை நினைவில் வைத்திருப்பர் என்பது திண்ணம்.

இந்த நாளில்,சுற்றம்,நட்புகள் சூழ இல்லாமல் தனிமையாக அமர்ந்து பழையவற்றை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறதே என அவருக்குத் தோன்றியிருக்கலாம்.அதுவும் காலத்தின் கட்டாயமே!

அவருக்கு எல்லாம் வல்ல இறைவன்.நல்ல ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்.மகிழ்வும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கையையும் அளிக்கட்டும். அவனது புத்தகத்தில் அவரது இந்த கடமை உணர்வு மிக்க நற்செயல்கள் பதிவாகியிருக்கின்றன.

அவரது மருமகன் சொன்னது போல் அவரது வாழ்க்கை  அம்மருமகனுக்கு மட்டுமன்றிப் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

அவருக்கு  என் மரியாதை கலந்த வணக்கங்கள்.

22 கருத்துகள்:

 1. சுயநலம் சாராது பிறர்க்கென வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்தானே... அவருக்கு உங்கள் மூலமாக என் மரியாதையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. தன்னலம் சாராது மற்றவர்க்கென வாழ்ந்தவர் நிச்சயம் வானுறையும் தெய்வத்துள் வைத்து போற்றப்பட வேண்டியவர் தான். அவருக்கு என் மரியாதை கலந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் உங்கள் மூலம் தெரிவிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கு மின்னஞ்சலில் வந்துள்ளது மிகச்சிறந்ததோர் அனுபவக் கருத்துக்களே.

  நானே என் பழங்கதைகளில் சிலவற்றை மனம் திறந்து கூறுவது போல எனக்குத் தோன்றியது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. அவருக்கு எல்லாம் வல்ல இறைவன்.நல்ல ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்.மகிழ்வும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கையையும் அளிக்கட்டும். /////

  எனது பிரார்த்தனையும் அதுதான்! அருமையான உள்ளத்தை வருடிய பதிவு!

  பதிலளிநீக்கு
 5. 78 வயதில் தான் கடந்துவந்த வாழ்க்கையக் அசைபோட்டுள்ள ஐயா அவர்களை வணங்குகிறேன்.
  வாழ்க்கையில் லாப நஷ்ட கணக்கை பார்க்க முடியாது.
  விதிப்படியே அனைத்தும் நடக்கிறது...நடக்கும்!
  தன் வாழ்நாள் முழுவதும் தானும் சந்தோஷப்பட்டு பிறரையும் சந்தோஷப்படுத்துவது... நினைக்கவே பெருமையாக உள்ளது ஐயா. நானும் கடைபிடிக்க முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. "ஓய்வில் உறவுகள் தேடும் ஓர் உள்ளம்!" காலத்தின் கட்டாயமே

  பதிலளிநீக்கு
 7. காலத்தின் கட்டாயத்தில் ஓடுபவர்கள் பலர் என்றாலும் ஓய்வும் தேவை அவரின் கடந்தகால குறிப்புக்கள் மற்றவர்களுக்கு தொழிலைப்பயில ஒரு உதாரணம். அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆனந்தத்தையும் கொடுக்க வேண்டும் இறைவன் என சேவிக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 8. அண்ணே பகிர்வுக்கு நன்றி..அந்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அவருக்கு என் வணக்கங்கள். கடவுள் நீண்ட ஆயுளையும், மன நிம்மதியும் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 10. சுயநலம் பாராது, பிறர் நலம் விழையும் சிலரில் உங்கள் உறவினரும் ஒருவர் என எண்ணுகிறேன்.அவருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள்! இறைவன் அவருக்கு எல்லா நலமும் தர வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. //அவருக்கு எல்லாம் வல்ல இறைவன்.நல்ல ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்.மகிழ்வும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கையையும் அளிக்கட்டும். //

  அவருக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 12. எங்கள் குடும்பத்திலும் இப்படி ஒரு உறவு இருந்தது. திருமணம் கூடச் செய்யாமல் குடும்பத்துக்காக வாழ்ந்து மறைந்த அவர் நினைவை எனக்குக் கிளறி விட்டது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
 13. வணங்க வேண்டிய மனிதர்களுள் இவரும் ஒருவராய்,ஆனால் இம்மாதியாய் 40 ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்கிறவர்களைகைதூக்கி விடுகிற ஒரு மிகப்பெரிய சக்தியாக சங்கங்கள் இருந்திருக்கின்றன,எப்பொழுதும்.
  அதையும் கொஞ்சம் நினைவு கூர்ந்திருக்கலாம்.நன்றி,வணக்கம்.

  பதிலளிநீக்கு
 14. அந்த நல்ல உள்ளத்தை நானும் பாராட்டுகிறேன்.அருமைப்பதிவு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. தொடர் பதிவிட உங்களை அழைத்திருக்கிறேன்.எனது பதிவைப் பார்க்கவும்

  பதிலளிநீக்கு
 16. உள்ளம் தொட்ட உய்ர்ந்த மனிதர், நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. அவருக்கு என் வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்! எல்லா மனிதர்களும் நினைவுகளை அசைபோடும் போது ஒரு கட்டத்தில் எத்தனை பேருக்கு நம்மீது நன்றி இருக்கிறது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை மின்னஞ்சல் செய்தியாக காட்டியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 19. கருத்துச் சொன்னை அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு