மந்திரம் உண்டொன்று
சொல்வேன்
மறுமையை நீக்கி
இம்மைக்குச் சுகம் தரும்
ஐந்தெழுத்தும்
ஆறெழுத்தும் எட்டெழுத்தும்
இதற்குப் பின்தான்.
சொல்வதற்கு
எளிய மந்திரம்
பிறந்த குழந்தையும்
சொல்லும் மந்திரம்
மூன்றெழுத்து
மந்திரம்
“அம்மா”.
அழையுங்கள்
நாவினிக்கும்
அவளுக்கும்
நெஞ்சினிக்கும்.
ஓரன்னையின்
பயணம்
இளம் தாய்
குழந்தைகள்
கைபிடித்து
வாழ்க்கையெனும்
பாதையில்
சில இடங்களில்
பாதை கரடு முரடு
சில இடங்களில்
முட்கள் அடர்ந்து
எங்காயினும்
கால் நோவாமல் அழைத்துச் செல்கிறாள்.
சிகரங்களைக்
கண்டு மலைக்காமல்
ஏறி உச்சி காணச்
செய்கிறாள்
புயலைக் கண்டு
நடுங்காமல்
எதிர்கொள்ளச்
செய்கிறாள்.
காலங்கடந்தால்
முதுமையால்
தொய்ந்த உடல்
முன்பு போல்
வழி நடத்த இயலாமல்
இப்போது குழந்தைகள்
இல்லை
பெரியவர்கள்
வலிமை மிக்கவர்கள்.
தாய்க்கு ஆதாரமாய்
நிற்பவர்கள்
ஒரு நாள் அவள்
மறைகிறாள்
ஆயினும்
அவள் மறையவில்ல!
நம்மைச் சுற்றியிருக்கும்
ஓசைகளில்
நாம் முகர்கின்ற
நறு மணங்களில்
நமது சிரிப்பில்
நமது கண்ணீரில்
வாழ்கிறாள்.
அவள் வெறும்
நினைவல்ல.
நம்முடன் கலந்திருக்கும்
உணர்வு!
(அவள் ஒரு வரம்.இருக்கும்போது
அலட்சியம் செய்து இல்லாதபோது ஏங்குபவர்கள் பலர்.காலம் இன்னும் இருக்கிறது.அவள் காலடி தொழுங்கள்;கர்ம வினையகலும்)