தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 19, 2015

தெறிக்க விடலாமா?......தல!



தெறித்தல் என்ற பதத்தின் பொருள் என்ன?.........

சிதறுதல்; குலைதல்; துள்ளிவிழுதல்; முரிதல்; பிளத்தல்; உடைத்தல்; அறுதல்; வேறுபடுதல்; நீங்குதல்; தவறுதல்; செருக்காயிருத்தல்; பிதுங்குதல்; குறும்புபண்ணுதல்; நரம்புதுடித்துநோவுண்டாக்குதல்; விரலால்சுண்டுதல்; விரலால்உந்துதல்; முற்றுதல்; தாக்கப்பட்டுவெளிப்படுதல்.



ஒவ்வொரு யுக முடிவிலும் ,உலகம் அழிகிறது
எனவே துவாபர யுகத்தின் முடிவிலும் உலகு சிவனால் அழிக்கப்படுகிறது


கலியுக ஆரம்பத்தில் பிரம்மா மீண்டும் உலகைப்படைக்கிறார்.

அப்போது சிவனால் ஒரு தெய்வீகப் பானையில் வாழ்க்கை அமுதம் அடைக்கப்பட்டு அந்த ஊழி வெள்ளத்தில் அனுப்ப்படுகிறது.

அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அலைந்து இறுதியாகக் காவேரியில் ஒரு இடத்தில் தங்குகிறது.

சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் தோன்றி அப் பானை மீது அம்பு எய்து அதை உடைக்கிறார்.அதனுள்ளிருந்த வாழ்க்கை அமுதம் வெளியே சிந்தி உலகில் உயிர்கள் உண்டாகின்றன.

அம்பு பட்டு பானை பல துண்டுகளாகத் தெறித்து விழுகிறது.துண்டுகள் விழுந்த இடங்களில் எல்லாம் ஆலயங்கள் உருவாகின்றன.அந்த நகர்தான் கும்பகோணம் .உடைந்த கும்பத்திலிருந்து உண்டானதால் கும்பகோணம்.

பானையைத் தெறிக்க விட்ட தலைவன் சிவன்தான்  புராண காலத்தின் முதல் தல!

இன்னொரு கதை

சக்தி தக்‌ஷன் மகளாகப் பிறந்து சிவனை மணக்கிறாள்.சிவன் மீது வெறுப்புக் கொண்ட தக்‌ஷன் தான் நடத்தும் யாகத்துக்குச் சிவனை அழைக்கவில்லை.ஆனால் சக்தி யாகத்துக்குச் சென்று அவமானப்பட்டு,தன்னை எரித்துக் கொள்கிறாள்.

சிவன் கோபங்கொண்டு தக்‌ஷனைக் கொன்று கையில் சக்தியின் உடலை ஏந்தித் தாண்டவம் ஆடுகிறார்.அதை நிறுத்த விஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தை விட்டு சக்தியின் உடலைச் சிதைக்கிறார்.சக்கரத்தால் அறுபட்ட உடல் பல கூறுகளாகத் தெறித்துப் பல இடங்களில் விழுகிறது;அவையே சக்தி பீடங்கள்


சக்கரத்தால் உடலைத் தெறிக்க விட்ட விஷ்ணு புராண காலத்தின் மற்றொரு தல!


கம்பராமாயணத்தில் ஒரு பாடல்

குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதம் இட்டுத் திரியும் திரைக் கடல்
துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார்-
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால்.

இராம சேது கட்டப்படுகிறது.அப்போது குமுதன் என்ற வானர வீரன் ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் போடுகிறான்.அதனால் கடல்நீர் நடனமாடுவது போல் எழுந்து ஆடுகிறது.அதன் விளைவாகத் தெறிக்கும் நீர்த்துளிகள் வானுலகம் வரை சென்று தெரிக்கின்றன.வானவர்கள் மீண்டும் அமுதம் கிடைக்குமென மகிழ்கிறார்கள்

இங்கு துமி என்ற  வழக்கில் இல்லாத ஒரு சொல்லைக் கம்பன் உருவாக்குகிறான்
அதன் பின் ஒரு கதை உள்ளது அதைப் பிறிதொரு சமயம் பார்ப்போம்

ஆக,கடல் நீரைத் தெறிக்கவிட்ட குமுதன் இராமாயண காலத்து தல!

நாய் துரத்த  சிறுவன் தலை தெறிக்க ஓடுகிறான்.

தொழிலாளி வியர்வை தெறிக்க உழைக்கிறான்

சிறுவன் கோலியைத் தெறிக்க விடுகிறான்

இப்படி எத்தனையோ தெறிக்க விடுதல்.

ஆனால் இப்போது நாயகன் திரையில் கண்களில் கனல் தெறிக்க விடுகிறான்.

எதிரிகளின் குருதி தெறிக்க விடுகிறான்

பலர் தப்பி தலை தெறிக்க ஓடுகின்றனர்

தெறிக்க விடலாமா?!

தல!


27 கருத்துகள்:

  1. அருமை அய்யா! ஒரு வார்த்தைக்கு இத்தனை அர்த்தங்களா! அதற்கான காரணமும் கதையும் அருமையிலும் அருமை!
    வித்துயாசமாய் தருவதால் அய்யா நீங்கதான் "தல "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா!நண்பர் நாஞ்சில் மனோ மாதிரி நீங்களும்!
      மிக்க நன்றி பூபகீதன்

      நீக்கு
  2. பலபொருள் ஒரு சொல்லுடன் இலக்கியமும் புராணமும் இணைந்து.

    நல்ல ரசனை.!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ‘தல’ புராணம் அருமை. இறுதியில் நம் ‘தல’ பற்றியும் சொல்லியிருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியில் நாயகன் என்று சொல்லியிருப்பது தலதான்!
      நன்றி ஐயா

      நீக்கு
  4. வணக்கம் ஐயா புராண விடயங்கள் சில அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  5. தெரித்தலில் ,உள்ளவைகளை தெரிந்து கொண்டேன் :)

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான கருத்தை சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. பாடலும் விளக்கமும் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  8. தெறிக்க விடலாமா தெரியாத கருத்துகளை என்னுள்ளே தெறிக்க விட்டது ஐயா...

    பதிலளிநீக்கு
  9. அருமை... அடையார் அஜித் கலக்கறீங்களே!

    பதிலளிநீக்கு
  10. அருமையான பல விடயங்கள் தெரிந்து கொண்டேன் ஐயா மிக்க நன்றி பதிவுக்கு.

    பதிலளிநீக்கு
  11. உணமையிலேயே இத்தனை விடயங்கள் இங்கு
    உங்கள் பதிவினாலேயே அறிகிறேன் ஐயா!

    மிக மிக அருமை! தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு
    கலந்திட்ட பதிவு மிகவே சுவை!

    வாழ்த்துகிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  12. தெறித்தல் என்ற சொல்லுக்கு விளக்கம் சொன்ன கதைகளும் பாங்கும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. தெறித்தல் ஆரம்பித்து கதை தொடர தல யில் முடித்த செபி யின் தல செம தல!

    ரசித்தோம்...

    பதிலளிநீக்கு