தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 10, 2015

நான் அனுப்புவது கடிதம் அல்ல!



’’அன்பே!இரண்டு நாட்களாக உன்னைப் பார்க்காமல்,உன் மதுர மொழிகளைக் கேட்காமல் பைத்தியம் பிடித்தது போல் ஆகி விட்டேன்;கடிதத்துக்குப் பதில் கடிதம் அனுப்பி என்னை மேலும் தவிக்க விடாமல் இன்று மாலை கடற்கரைக்கு வந்து விடு!
அன்பு முத்தங்கள்

உன் நினைவில் வாடும் ’’
...............

அன்பரே!

என்னென்னவோ நடக்கிறது!என்னை டில்லியிலிருந்து  வந்து பெண்பார்த்து விட்டுப் போய் விட்டார்கள் அவர்களுக்குப் பிடித்துத் தொலைத்து விட்டது;அப்பா முகூர்த்தம்  பார்க்க ஆரம்பித்து விட்டார்.அறைக்குள் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறேன்.உங்கள் கடிதம் உங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது.எப்படியாவது மாலை கடற்கரைக்கு வந்து விடுகிறேன்.
முத்தங்களுடன்
............;

பின்னர் கற்கரையில் சந்தித்த்தைக் கூட ஒரு கவிதைக்கடிதம் ஆக்கிவிடுகிறான்  காதலன்....

இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,
ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?
நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,
மெல்ல வாய் திறந்தாய் இரண்டு நாட்களாய்
என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,
பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.
என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?
அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.
என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.
உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்
என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.
ஐ ஏ எஸ் மாப்பிள்ளை அனைவருக்கும் சந்தோஷம்.
என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,
எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,
ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,
ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,
மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,
உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,
என்னை மறந்து விடுங்கள்என்றுரைத்துப் போய்விட்டாய்.
உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்
"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"
என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்
இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!


உயிருள்ள கடிதங்கள் இல்லையா இவை?காணாத நேரத்தில் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து,மார்போடணைத்து,அவளு(ரு)க் கொடுப்பதாய் மகிழ்ந்து கடிதத்துக்குக் கொடுக்கும் முத்தங்களுக்குக் கணக்குண்டா?

இவை கடிதங்கள் அல்ல உள்ளங்கள்

இவற்றில் உள்ளதெல்லாம் எழுத்தல்ல;எண்ணங்கள்

இந்த இன்பம்;இந்த ஆனந்தம் மின்னஞ்சலில், குறுஞ்செய்திகளில் கிடைக்குமா?

இழந்து விட்டோம் அந்த சுகத்தை;புறந்தள்ளி விட்டோம் அஞ்சலை! 

காலம் காலமாய் காக்கவேண்டிய பொக்கிஷங்கள் இவை!

எங்கே கடிதப் போக்குவரத்து?

இழந்தோம்

இது தொழில் நுட்ப மேம்பாட்டின் விலை!

அந்தக்காலத்தில் புறாவின் காலில் கட்டி ஓலை அனுப்பினார்கள்

(தூது வந்த புறாவை வறுத்துச் சாப்பிட்ட படம் நினைவிருக்கிறதா?!)

அன்னத்தைத் தூது விட்டார்கள்

மேகத்தை தூது விட்டார்கள்

தூது பற்றிய ஒரு லிமெரிக்.....
   சங்கரன் சின்ன மகள் சக்கு
   பார்த்தாலே ஏறும் கிக்கு
   பார்த்து மயங்கினான் மாது
   விட்டான் தங்கையைத் தூது
   இப்பத் தெருவெல்லாம் தூ,தூ’!

பின்னர் கடிதங்கள் வந்தன.

ஓடும் அஞ்சல்காரர் வந்தார்

கடிதப் பரிமாற்றம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமானது

எழுதி இடம் சேர்ந்த கடிதங்கள் மட்டுமல்ல

எழுதி  அனுப்பாமல் விட்ட கடிதங்களும் முக்கியமடைகின்றன

நாயகன் நாயகிக்கு எழுதிய கடிதம் ,பையில் போடும்போது தவறி விழுந்து,மற்ற மாணவிகள் கையில் சிக்கி,நாயகி கேலி செய்யப்பட்டு,அதனால் முதல்வரிடம் முறையிட,ஒரு கல்யாணப் பரிசு கிடைக்கிறது!

எத்தனையோ திரைப்படங்களில் கடிதம் ஒரு முக்கிய இடத்தை பெற்றதுண்டு.கடிதம் கதையின் போக்கையே தீர்மானித்த படங்கள் உண்டு (உ-ம்)படித்தால் மட்டும் போதுமா,நிறைகுடம். சுமைதாங்கி.கைகொடுத தெய்வம் 

முகவரி இல்லாத கடிதம் இறந்தகடித அலுவலகம் சென்று அனுப்பிய நாயகியின் முகவரிக்கே மீண்டும் வரும் முன்,நாயகியே இறந்து விடுகிறாள் -வெள்ளிவிழா

இவை சில மாதிரிகள்தாம் 

ஓர் அஞ்சலகத் தலைவர் பற்றிய தாகூரின் கதையை,தனது ’தீன் கன்யா’ படத்தில் செல்லுலாய்ட் காவியமாக்கி இருந்தார் சத்யஜித் ரே! 

ஆனால் இன்றோ....

எங்கே போயிற்று அந்த அஞ்சல்?

 இந்தத் தேசிய அஞ்சல் நாளில்.........

அஞ்சலுக்கு என்  அஞ்சலி!






10 கருத்துகள்:

  1. தேசிய அஞ்சல் நாளில் அஞ்சலுக்கு அஞ்சலி செலுத்துவதை விட அஞ்சேல் என்று சொல்லி வாழ்த்தியிருக்கலாம். எனக்கென்னவோ அஞ்சல் வழக்கம்
    எழுதும் வழக்கொழிந்துவிடும் எனத்தோன்றவில்லை. இப்படித்தான் சொன்னார்கள். காணொளி வந்ததும் வானொலி இருக்காது என்று. ஆனால் நடந்தது என்ன? இன்று அரசு ஏலத்தில் விடும் பண்பலை வரிசைக்கு ஒப்பந்த புள்ளி பெற வரிசையில் நிற்கிறார்கள். நீதிமன்றம் போகிறார்கள். அதுபோல என்னதான் மின்னஞ்சல் வந்தாலும் கையால் எழுதி அனுப்பும் அஞ்சல் மறையாது என்பதே என் கருத்து.

    வழக்கம்போல் ஒரு சுவையான பதிவை படிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! .நன்றி!

    பதிலளிநீக்கு
  2. புதுகைக்குக் கிளம்பிவிட்டீர்களா ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழா சிறப்பாக நடந்தேறியதை அறிந்தேன்
      நன்றி ஜெயக்குமார்

      நீக்கு
  3. அருமை அய்யா! அனைத்தும் உண்மைதான்!

    இதற்குதான் நான் எனக்கே கடிதம் எழுதி கொள்ளும் பழக்கம் இன்றும் என்னிடம் இருக்கிறது! நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுமையான பழக்கம்தான்!இலக்கீயம் பிறக்கலாம்!
      நன்றி பூபகீதன்

      நீக்கு
  4. ஆம் ஐயா இழந்து விட்டோம் அஞ்சலை.....

    பதிலளிநீக்கு
  5. தேசிய அஞ்சல் தின சிறப்பு பதிவு சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பதிவு. ரசித்த பதிவு! அந்த அழகியல் அஞ்சலையைத் தொலைத்துவிட்டோம்...

    பதிலளிநீக்கு