தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 12, 2015

அவன் ஒரு காதலன்!



கண்டதும் காதல் என்று சொல்வார்கள்.

அவனைப் பொறுத்தவரை அதுவே நடந்தது

கண்டான்;காதல் கொண்டான்.

முதல் பார்வையிலேயே அவள் அழகு அவனை அவள் மேல் காதல் கொள்ள வைத்தது.

சிற்றூர்களிலேயே பள்ளி முதல் பட்டப் படிப்பு வரை பயின்ற ஒருவன் , பெண்க ளுடன் அதிகம் பேசிப் பழகாதவன்.,அவளின் பேரழகில் மயங்கியது  இயல்பே ஆகும்.

அவன் இருந்த ஊர்களில் அந்தப் பெருமையை,அந்த ஒப்பனையை ,அந்தக் கவர்ச்சியை அவன் கண்டதில்லை .அவளுடன் கழித்த இரண்டு ஆண்டுகள் இரண்டு நொடிகளாகக் கடந்தன.

படிப்பு முடிந்து.பிரியும் நேரம் வந்தது.

னக்கே அவன் வாக்களித்துக் கொண்டான்…..விரைவில் அவளைக் காண வருவேன் என்று

ஆனால் நிரந்தரமாக அவளுடன் வாழும் வாய்ப்பு வாய்க்கவில்லை.

வருவான்;போவான்.அந்த இடைப்பட்ட காலத்தில் அவள் அழகை ரசிப்பான்.
அவன் ரசனையில் அலுப்பு ஏற்பட்டதில்லை

காலம் காத்திருப்பதில்லை

அவள் மாறத்தொடங்கினாள்,காலத்திற்கேற்ப!

அவளது கட்டுப்பெட்டி மனோபாவம் கரையத் தொடங்கியது

முற்போக்கான சிந்தனைகள் பிறந்தன.

புதிய ஆடைகள்;புதிய அணிகலன்கள்;புதிய ஒப்பனைகள் 

இவை அவள் அழகை மேம்படுத்தின.

எதிலும் ஒரு அதீதம் தெரிந்தது. 

அந்த மாற்றங்களை அவன் கவனித்தான்.

அவள் எப்படி மாறினாலும் அவள் மீதுள்ள காதல் அவனுக்கு மறையவில்லை.

அவனது 56ஆவது வயதில் அவளுடன் நிரந்தரமாக வசிக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தது. 

மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

அவள் இப்போதும் தினம் தினம் மாறிக்கொண்டேதான் இருக்கிறாள்

ஆனாலும் அவளைக் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறான்.

அவள்தான் அவனுக்கு பழகக் கற்றுக் கொடுத்தவள்

 நாலு பேருடன் பேசக் கற்றுக் கொடுத்தவள்.

அவளைக் காதலிக்காமல் எப்படி இருக்க முடியும்?

அதுவும் அவன் ஒரு பித்தன் அல்லவா?! 

சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா அவனால்!





21 கருத்துகள்:

  1. சரிதான்.

    இது உங்களிடம் இரண்டாம் முறை வாங்கிய பல்பு. :)

    அது சரி.

    சென்னையும் காதலிக்கிறதா..?


    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சி எப் எல்லா,எல் இ டி யா?
      எத்தனையோ பேர் அவளைக் காதலிக்கிறார்கள்.அவள் யாரையென்று காதலிப்பாள்?
      நன்றி

      நீக்கு
  2. எனக்கும் 18 வருடம் காதலித்த நினைவுகள் இனியவை ஐயா...!

    அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்...
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...
    காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்...
    கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ....ஓ....

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அருமை, நான் கூட என்னமோ என்று நினைத்தேன்,
    அருமை.

    பதிலளிநீக்கு
  4. அருமை! வாசகர்களை வாரிச் சாய்ப்பதில் நீங்கள் சூரர்!

    நல்ல நடை. வரிகள் கூடக் கூட ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டே போய் கடைசியில் களுக் கென்று சிரிக்கவைத்தது.

    God Bless You

    பதிலளிநீக்கு
  5. அடடா அப்படி வருகிறீர்களா இது ரொம்பவே நல்லா இருக்கே நன்றி பதிவுக்கு.! அருமை அருமை !

    பதிலளிநீக்கு
  6. உங்களைப் பித்தனாக்கி விட்டது சென்னை. அதற்குமுன் எந்த ஊர் ஸார்?

    பதிலளிநீக்கு
  7. நம்ம ஊரு சென்னைக்கு பெரிய விசிலு அடிங்க ......

    பதிலளிநீக்கு
  8. காதல் கதையென எண்ணினேன். வழக்கம்போல் கடைசியில் ஒரு திருப்பம் கொடுத்து தங்களின் புனைப்பெயரின் இரகசியத்தை சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. சென்னை எல்லோரையும் பித்தனாக்கி விடுகிறது இல்லையா? அருமையாக சொன்னவிதம் சிறப்பு!

    பதிலளிநீக்கு
  10. தில்லியில் கூட கொஞ்ச நாள்! :)

    அருமையான பதிவு. ரசித்தேன்!

    பதிலளிநீக்கு