இது நிச்சயமாகப் ’பிலாசபி பிரபாகரன்’ பற்றிய பதிவு அல்ல!
பாவம் அவர் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார்.
ஏன் என்று பலருக்குத் தெரியலாம்;சிலருக்குத் தெரியாதிருக்கலாம்.
அவர்களுக்காக இந்தத் தகவல்.
சென்ற வார(28-3-12) என் விகடனில் வலையோசை பகுதியில் பிரபாகரனின் வலைப்பூ அறிமுகம் என்று சொல்லி அவரது புகைப்படத்துடன்(பிடரி மயிர் இல்லாத சிங்கம் பார்த்திருக் கிறீர்களா?), அறிமுகக் குறிப்புக்களுடன், பதிவிலிருந்து சில பகுதிகள் வெளியிட்டிருந்தார்கள்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தப் பதிவு அவருடையதல்ல.வேறு ஒரு ’யூத்’ பதிவருடையது!
(’யூத்’ என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!)
அதில் ஒரு பதிவு “அங்கிள்,இது லேடீஸ் டாய்லெட்” என்ற தலைப்பிட்ட பதிவு.அதைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் பிரபாகரனுக்குப் போன் செய்து”என்னப்பா,ஒரு பேரிளம்பெண் உன்னை அங்கிள் என்று அழைத்து விட்டாளா ” என்று கலாய்த்து விட்டார்களாம்.
பாவம் பிரபாகரன்.மாற்றிப் போட்டதுதான் போட்டார்கள்;ஒரு உண்மையான ’யூத்’ பதிவரின் பதிவைப் போட்டிருக்கக் கூடாதோ?
எனவே இது அவரைப் பற்றிய பதிவு அல்ல.
அறிவியல் சில அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
“எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் “ என்பது ஒன்று.
அப்படியானால்,இந்தசுழலும் உலகத்துக்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
கடவுள் எனப் பதில் சொன்னால்,அடுத்த கேள்வி அந்தக் கடவுளுக்குக் காரணம் என்ன?
கடவுள் தானாகவே உண்டானவர் என்றால்,ஏன் உலகம் தானாகவே உண்டாயிருக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.
எனவே ஒரு கட்டத்தில் அடிப்படைக் கோட்பாடு உடைந்து போகிறது.
இதைத்தான் பிலாசபி செய்கிறது
(பட்டவகுப்பில் -1961—64- ஒரு சிறிய பாடம்,”நவீன அறிவியலின் அடிப்படைகள்,தத்துவத்தின் பிரச்சினைகள்” என்பது.எனது முக்கிய பாடமான கணிதத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?!என்னவோ பாடத்திட்டம்!)
இது போலத்தான் தர்க்கவியல் என்று ஒன்று உண்டு.அதில் தவறான வாதம் என்று ஒன்று சொல்வார்கள்
உதாரணம்,--விஸ்கியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
பிராந்தியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
ரம்மும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
இவை மூன்றிலும் பொதுவானது தண்ணீர்.
எனவே தண்ணீர் குடித்தால் போதை வரும்!
இது ஒரு தவறான வாதம்.(ஃபேலஸி)
ஒரு சர்தார்ஜி கரப்பை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தாராம்
ஒரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்தது.
இன்னோரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து
மூன்றாவது காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து.
நான்காவது காலையும் வெட்டி விட்டு எத்தனை முறை நகர் என்று சொல்லியும் நகரவில்லை!
உடனே அவர் எழுதினார்”கரப்புக்கு நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது”