தொடரும் தோழர்கள்

தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

சன்டே,ஃபன்டே !

இரு மனைவிகள் பேசிக் கொண்டார்கள்
ம.1:நேற்று எப்படி?
ம 2:மகா மோசம்.என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்தார்.5 நிமிடம் கழித்து சாப்பிட்டார்; அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கி விட்டார்.உனக்கு எப்படி?
ம 1.பிரமாதம்.என் கணவர் திரும்பியதும் என்னை உணவுக்கு வெளியே அழைத்துச் சென்றார். சாப்பாட்டுக்குப் பின் கைகளைக் கோர்த்தவாறே வீடு வரை நடந்தோம்.வீட்டுக்கு வந்த பின் வீடு முழுவதும் மெழுகு வர்த்தி ஏற்றினார். ஆகா!

அதே நேரத்தில் அவர்கள் கணவர்கள் பேசிக் கொண்டனர்

க 1.நேற்று எப்படி?
க.2.பிரமாதம்.அலுவலகத்திலிருந்து வந்தேன்.உணவு தயாராக இருந்தது. நன்றாகச் சாப்பிட்டேன்..சிறிது நேரம் கழித்து நன்றாகத் தூங்கி விட்டேன்.நீ எப்படி?
க.1.மகா மோசம்.வீட்டுக்கு வந்தேன்.மின்சார பில் கட்டாததால், இணைப்பத் துண்டித் திருந்தார்கள் ஒரே இருட்டு .என்ன செய்ய.சாப்பிட மனைவியை வெளியே அழைத்துச் சென்றேன்;ஏகப்பட்ட செலவு.திரும்ப பஸ்ஸுக்குக் கூடக் காசில்லை.நடந்தே வீடு திரும்பினோம்.வெளிச்சம் வேண்டுமே?வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தேன்.
-------------------------------------------------------
எதையும் சொல்லும் விதம் முக்கியம்!

திங்கள், செப்டம்பர் 09, 2013

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!



இன்று விநாயக சதுர்த்தி.

எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக் கிறோம்.





ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் லட்சுமி கணபதிஎன்றழைக்கப் படுகிறார்.உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும்  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஹோமங்களும்,சிறப்பு பூஜையும் நடைபெறும்.நேற்று காலை கணபதி ஹோமமும், நவக்ரஹ ஹோமமும்.சிறப்பாக நடந்தேறியது.






 விநாயக சதுர்த்தி அன்று காலனி வாசிகளில் பலர்  பூஜையை முன்னிட்டு விநாயகருக்குப் பல பிரசாதங்கள் தயார் செய்து கொண்டு வருவர் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை,கொழுக்கட்டை,கேசரி, சுண்டல் என்று.சில பிரசாதங்கள் நல்ல ருசியாக இருக்கும்;சில….......! அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்த தல்ல!


இன்றைய பூஜைக்கும் பிரசாதத்துக்கும் காத்திருக்கும் நேரத்தில்,திருமந்திரத்தின் பாயிரப் பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதை பார்ப்போமா?
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

பொருள்:-:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம் பிறைச் சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தை உடையவரும்,சிவனுடைய குமாரரும், ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்கு கிறேன்.

ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-
படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.
 
கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம்  ஏந்திய  கரம்   மறைத்
தலையும்,அபயகரம் அருளலையும் குறிக்கும். சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும், மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.

யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்த பின்,பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்கி,பூத கணங்களை அனுப்பி, வடக்கே தலை வைத்து உறங்கும் உயிரின் தலையைக் கொய்து வரச் சொல்ல,அது ஒரு யானையின் தலையாக முடிந்தது என்பது ஒரு கதை.யானை நாதத்திற் தோன்றியதாதல் போலப் பிள்ளையாரும் பர நாதத்திற்தோன்றிப் பிரணவ வடிவினராதலின் கூறினார்என்பது ஓர் உரை.

காளமேகப் புலவரின் பாட்டொன்றில் இத்தலை பற்றி அவர் எழுதுவதாவது-

சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
படித்தோர்க்கு மாறு தலைப் பார்.

சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு; முருகனுக்குத் தலைகள் ஆறு.;பிள்ளையார்க்கு மாறிய தலை;.ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை நினைத்துப் போற்றுபவர்களுக்கு,நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இதுவே பாடலின் பொருள்.

இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை நிலாவைப் போல்,வளைந்து,வெண்மையாய்,ஒளி விடுகிறது.

நந்தி மகன்றனை’-இங்கு நந்தி என்றது சிவ பெருமானை.பிள்ளையார் சிவனின் முதற் பிள்ளை.

ஞானக் கொழுந்தினை’-ஞானத்தின் உச்சம்.தீ எரியும்போது,கொழுந்து விட்டெரியும் தீ என்று சொல்வோம்.அதே போல் விநாயகர் ஞானக் கொழுந்து.சிவன் ஞானமே வடிவானவன் ;அவன் பிள்ளை ஞானக் கொழுந்து என்றுரைப்போரும் உளர்.

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’- புந்தி என்றது புத்தி.பிள்ளையாரை சிந்தையில் இருத்திப் போற்றுகின்றேன் என்பதாகும்.

வாருங்கள்,நாமும்,விநாயகப்பெருமானைப், ’புந்தியில் வைத்தடி போற்றுவோம்  

இது ஒரு மீள்பதிவு,சில மாற்றங்களுடன்
Top of Form

சனி, மார்ச் 31, 2012

பிலாசபியின் வேலை என்ன?!


இது நிச்சயமாகப் ’பிலாசபி பிரபாகரன்’ பற்றிய பதிவு அல்ல!

பாவம் அவர் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார்.

ஏன் என்று பலருக்குத் தெரியலாம்;சிலருக்குத் தெரியாதிருக்கலாம்.

அவர்களுக்காக இந்தத்  தகவல்.

சென்ற வார(28-3-12) என் விகடனில் வலையோசை பகுதியில் பிரபாகரனின் வலைப்பூ  அறிமுகம் என்று சொல்லி அவரது புகைப்படத்துடன்(பிடரி  மயிர் இல்லாத சிங்கம் பார்த்திருக் கிறீர்களா?), அறிமுகக் குறிப்புக்களுடன், பதிவிலிருந்து சில பகுதிகள் வெளியிட்டிருந்தார்கள்.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தப் பதிவு அவருடையதல்ல.வேறு ஒரு ’யூத்’ பதிவருடையது!
(’யூத்’ என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!)

அதில் ஒரு பதிவு “அங்கிள்,இது லேடீஸ் டாய்லெட்” என்ற தலைப்பிட்ட பதிவு.அதைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் பிரபாகரனுக்குப் போன் செய்து”என்னப்பா,ஒரு பேரிளம்பெண் உன்னை அங்கிள் என்று அழைத்து விட்டாளா  ” என்று கலாய்த்து விட்டார்களாம்.

பாவம் பிரபாகரன்.மாற்றிப் போட்துதான் போட்டார்கள்;ஒரு உண்மையான ’யூத்’ பதிவரின் பதிவைப் போட்டிருக்கக் கூடாதோ?

எனவே இது அவரைப் பற்றிய பதிவு அல்ல.

அறிவியல் சில அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

“எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் “ என்பது ஒன்று.

அப்படியானால்,இந்தசுழலும் உலகத்துக்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

கடவுள் எனப் பதில் சொன்னால்,அடுத்த கேள்வி அந்தக் கடவுளுக்குக் காரணம் என்ன?

கடவுள் தானாகவே உண்டானவர் என்றால்,ஏன் உலகம் தானாகவே உண்டாயிருக்கக்   கூடாது என்ற கேள்வி எழுகிறது.

எனவே ஒரு கட்டத்தில் அடிப்படைக் கோட்பாடு உடைந்து போகிறது.

இதைத்தான் பிலாசபி செய்கிறது

(பட்டவகுப்பில் -1961—64- ஒரு  சிறிய  பாடம்,”நவீன அறிவியலின் அடிப்படைகள்,தத்துவத்தின் பிரச்சினைகள்” என்பது.எனது முக்கிய பாடமான கணிதத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?!என்னவோ பாடத்திட்டம்!)

இது போலத்தான் தர்க்கவியல் என்று ஒன்று உண்டு.அதில் தவறான வாதம் என்று  ஒன்று சொல்வார்கள்
உதாரணம்,--விஸ்கியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                     பிராந்தியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                     ரம்மும்   தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                    இவை மூன்றிலும் பொதுவானது தண்ணீர்.
                    எனவே தண்ணீர் குடித்தால் போதை வரும்!
இது ஒரு தவறான வாதம்.(ஃபேலஸி)

ஒரு சர்தார்ஜி கரப்பை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தாராம்
     ஒரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்தது.
      இன்னோரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து
     மூன்றாவது காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து.
     நான்காவது காலையும் வெட்டி விட்டு எத்தனை முறை நகர் என்று சொல்லியும் நகரவில்லை!
உடனே அவர் எழுதினார்”கரப்புக்கு நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது”

செவ்வாய், டிசம்பர் 20, 2011

உவ்வே!

இப்போதுதான்  ஒரு ஜோக் படித்தேன்.உடன் அதை உங்களுடன் கண்டிப்பாகப்  பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியதன் விளைவே இந்தக் குறும் பதிவு.

மருத்துவக்கல்லூரியில் உடற்கூறு அமைப்பியல் பற்றி செய்முறைப்பாடம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்து கொண்டிருந்தது.மேசையின் மீது ஒரு இறந்த நாயின் உடல் கிடந்தது.

மருத்துவ விரிவுரையாளர் கூறினார்”மருத்துவர்களாகப் போகும் உங்களுக் கெல்லாம் அருவருப்பு என்பதே இருக்கக் கூடாது.அப்போதுதான் சிறப்பாகச் செயலாற்ற முடியும்”

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் அந்த நாயின் ஆசன வாயில் தன் ஒரு விரலை நுழைத்து எடுத்தார்.பின் விரலை வாயில் வைத்துச் சப்பினார்.பின் அனைவ ரையும்  பார்த்துச்சொன்னார்.”நீங்களும் இது போல் செய்யுங்கள்”அனைவரும் மிகுந்த அருவருப்புடன் அதைச் செய்து முடித்தனர்.சிலருக்கு வாந்தியே வந்து விட்டது.

பின் அவர் சொன்னார்.”அடுத்த மிக முக்கியமான பண்பு எதையும் கூர்ந்து கவனித்தல்.நான் எனது நடு விரலை உள்ளே நுழைத்தேன்.ஆனால் ஆள்காட்டி விரலைச் சப்பினேன்!!”

இது வெறு நகைச்சுவை மட்டுமல்ல;வாழ்க்கையின் தத்துவம்!நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பதின் அவசியத்தை உணர்த்தும் நகைச்சுவை!

சக பதிவர்களே!உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.பதிவெழுத அநேக தகவல்கள் கிடைக்கும்!

சனி, செப்டம்பர் 27, 2008

வாழ்க்கையின் முடிவு

வியாழனன்று(25-9-08) மதியம் ஒரு மணி அளவில் கணினி முன் அமர்ந்து பதிவில் ஏதாவது தட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது,தொலை பேசி அழைத்தது.வந்த செய்தி நல்ல செய்தி அல்ல-திருவண்ணாமலையில் இருந்த என் தமக்கையின் கணவர் காலமானர்.எண்பது வயதைத் தொட்டுக் கொண்டிருந்தவர்.விமானப் படையில் பணி புரிந்தவர்.வாழ்க்கையில் தன் எல்லாக் கடைமைகளையும் குறைவரச்செய்து முடித்தவர்.ஆனாலும் அச்செய்தி அதிர்ச்சியை அளிக்கத்தான் செய்தது.கண்களில் கண்ணீர் வரவழைக்கத்தான் செய்தது.இனி என் தமக்கை முழுவதும் தன் மகனைச் சார்ந்தே வாழவேண்டுமே,அவள் நன்கு நடத்தப் படுவாளா என்ற கவலை எழுந்தது.சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு 3மணிக்குப் பேருந்தைப் பிடித்து 7 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடைந்தேன்.

வீட்டின் ஹாலில் குளிர்பதனப் பெட்டியில் உடல் வைக்கப் பட்டிருந்தது(அன்று மதியம் வரை அவ்ர் அவரது பெயரால் அழைக்கப் பட்டிருந்தார். இப்போது வெறும் உடல்.)வீட்டில் அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.சொந்தக்காரர்கள்,தெரிந்தவர்கள் வரும்போதெல்லாம், எப்படி நடந்தது என்று ஒவ்வொருவருக்கும் விவரமாகச் சொல்லப்பட்டது. யாராவது வரும்போது அழுகுரல்கள் ஓங்கி ஒலித்தன.மறுநாள் மதியம் 12 மணிஅளவில் உடலுக்கு எரியூட்டப்ப்பட்டது.காட்டிலிருந்து வீடு திரும்பிக்,குளித்துச் சாப்பாடு முடிந்தது.நான் மாலை 3 மணிக்குத் திரும்ப முடிவு செய்தேன்.ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம். குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தனர்.பெரியவர்கள் எதைப் பற்றியெல்லொமோ பேசத் தொடங்கினர்.கலகலப்பும் சிரிப்பும் திரும்பி வந்தன.இதே ஹாலில்தான் இன்று காலை வரை என் அத்தானின் உடல் குளிர் பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.இப்போதோ,எல்லோரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறோம்.

எனக்குத் திருமந்திரப் பாடலொன்று நினைவுக்கு வந்தது.

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூறையங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே."

இதுதான் வாழ்க்கை.