தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 17, 2015

கணபதி பப்பா மோரியா!

இன்று விநாயக சதுர்த்தி.
எங்கள் குடியிருப்பின் நுழை வாயிலிலேயே ஒரு பிள்ளையார் கோவில் அமைத்திருக் கிறோம்.

ஒவ்வொரு கோவிலிலும் பிள்ளயாருக்கு ஒரு பெயர் உண்டல்லவா?எங்கள் குடியிருப்புப் பிள்ளையார் லட்சுமி கணபதிஎன்றழைக்கப் படுகிறார்.உண்மையிலேயே குடியிருப்பு வாசிகளுக்கு,லட்சுமி கடாட்சத்தை நல்கி வருபவர்.ஒவ்வொரு ஆண்டும்  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஹோமங்களும்,சிறப்பு பூஜையும் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு ஹோமம் இல்லை.


 விநாயக சதுர்த்தி அன்று காலனி வாசிகளில் பலர்  பூஜையை முன்னிட்டு விநாயகருக்குப் பல பிரசாதங்கள் தயார் செய்து கொண்டு வருவர் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை,கொழுக்கட்டை,கேசரி, சுண்டல் என்று.சில பிரசாதங்கள் நல்ல ருசியாக இருக்கும்;சில….......! அதெல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தது!,பக்தியைப் பொறுத்த தல்ல!


இன்றைய பூஜைக்கும் பிரசாதத்துக்கும் காத்திருக்கும் நேரத்தில்,திருமந்திரத்தின் பாயிரப் பாடலில் பிள்ளையார் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதை பார்ப்போமா?
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

பொருள்:-:ஐந்து கரங்களையுடையவரும்,யானை முகத்தை யுடையவரும், இளம் பிறைச் சந்திரனையொத்த ஒற்றைத் தந்தத்தை உடையவரும்,சிவனுடைய குமாரரும், ஞானச்சிகரமாக விளங்குபவரும் ஆகிய விநாயக் கடவுளது திருவடிகளைச் சித்தத்துள் வைத்து வணங்கு கிறேன்.
ஐந்து கரத்தனை”-ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.அவையாவன-
படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.
கும்பம் ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,பாசம்  ஏந்திய  கரம்   மறைத்
தலையும்,அபயகரம் அருளலையும் குறிக்கும். சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும், மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.

யானை முகத்தனை’-விநாயகருக்கு,மனித உடல்,யானைத்தலை. பரமசிவன் கணபதியின் தலையைக் கொய்த பின்,பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்கி,பூத கணங்களை அனுப்பி, வடக்கே தலை வைத்து உறங்கும் உயிரின் தலையைக் கொய்து வரச் சொல்ல,அது ஒரு யானையின் தலையாக முடிந்தது என்பது ஒரு கதை.யானை நாதத்திற் தோன்றியதாதல் போலப் பிள்ளையாரும் பர நாதத்திற்தோன்றிப் பிரணவ வடிவினராதலின் கூறினார்என்பது ஓர் உரை.

காளமேகப் புலவரின் பாட்டொன்றில் இத்தலை பற்றி அவர் எழுதுவதாவது-

சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
படித்தோர்க்கு மாறு தலைப் பார்.

சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு; முருகனுக்குத் தலைகள் ஆறு.;பிள்ளையார்க்கு மாறிய தலை;.ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை நினைத்துப் போற்றுபவர்களுக்கு,நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இதுவே பாடலின் பொருள்.

இந்து இளம் பிறை போலும் எயிற்றனை’-பரஞானம்,அபர ஞானம் இரண்டுமே கணபதிக்குத் தந்தங்கள்;ஒரு தந்தம் ஒடித்து எழுதியதால் மற்ற முழு தந்தம் பார்ப்பதற்கு,இளம் பிறை நிலாவைப் போல்,வளைந்து,வெண்மையாய்,ஒளி விடுகிறது.

நந்தி மகன்றனை’-இங்கு நந்தி என்றது சிவ பெருமானை.பிள்ளையார் சிவனின் முதற் பிள்ளை.

ஞானக் கொழுந்தினை’-ஞானத்தின் உச்சம்.தீ எரியும்போது,கொழுந்து விட்டெரியும் தீ என்று சொல்வோம்.அதே போல் விநாயகர் ஞானக் கொழுந்து.சிவன் ஞானமே வடிவானவன் ;அவன் பிள்ளை ஞானக் கொழுந்து என்றுரைப்போரும் உளர்.

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’- புந்தி என்றது புத்தி.பிள்ளையாரை சிந்தையில் இருத்திப் போற்றுகின்றேன் என்பதாகும்.

வாருங்கள்,நாமும்,விநாயகப்பெருமானைப், ’புந்தியில் வைத்தடி போற்றுவோம்  
(இது ஒரு மீள்பதிவு,சில மாற்றங்களுடன்)



9 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா!! விநாயக சதுர்த்தி
    வாழ்த்துக்கள்!! தங்களுக்கும் அனைவருக்கும்! நன்றி

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு.

    அனைவருக்கும் நல்லதே நடக்க விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்.....

    பதிலளிநீக்கு
  3. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப்பெருமானைப் போற்றும் நல்ல பதிவு. விநாயகர் அருளை வேண்டுவோம். நன்றி.

    பதிலளிநீக்கு

  4. விநாயகர் பாடல்களுக்கு ஒரு தமிழாசான் சொல்வதுபோல் அருமையாய் விளக்கங்களை தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்! விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா நலம்தானே....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    பாடலுக்கு நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சிறப்பாக உள்ளது பதிவு பகிர்வுக்கு நன்றி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. கொழுக்கட்டை தின வாழ்த்துகள் ஸார்!

    பதிலளிநீக்கு
  9. அருமை! அது சரி கடைசியில் பிரசாதத்திற்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு பிரசாதம் பற்றி சொலல்வே இல்லையே....

    பதிலளிநீக்கு