தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 24, 2015

தனி ஒருவன்!



தனது 35 வருட உத்யோக வாழ்க்கை நாளையுடன் முடியப் போகிறது என்று எண்ணுகின்ற போது கிருஷ்ணசாமி அவர்களுக்கு சற்று மலைப்பாகத் தான் இருந்தது.  கடந்த ஒரு வருட காலமாகவே பதவி ஓய்வு பற்றிய சிந்தனை அடிக்கடி தலை தூக்கிக்கொண்டிருந்தாலும், காலம் கரைந்து அது ஒரு நாள் கெடுவிற்கு வந்த நின்ற போது ஒரு சொல்லவொண்ணாத உணர்வு அவரைக் கவ்விக் கொண்டது.  

                                     இந்த பதவி ஓய்வு காரணமாக தன்னிடம் தற்போது உள்ள மட்டிலடங்காத அதிகாரம் பறிபோய் விடப்போகிறதே என்ற கவலையை அவர் எள்ளளவும் கொள்ளாத காரணத் தால் அவர் நிலையிலிருந்த எண்ணற்ற அதிகாரிகளின் மத்தியிலிருந்து அவர் தனித்து நின்றார்.


                                     அவரது வங்கியில் பணி புரியும் பல்லாயிரக்கணக்கானோர் ஊழியர்கள் அவருக்கு வழங்கப் போகும் பிரிவு உபசாரக் கூட்டம் அன்று மாலை நடை பெறவிருந்தது.  வங்கியில் சென்ற சிலகாலமாக பணிபுரிந்த சேர்மன்களுள் மனிதாபிமானம் மிக்கவர் என்ற இவரைப் பற்றிய கணிப்பு கிருஷ்ணசாமியின் பிரிவு உபசார விழாவிற்கு அவ்வங்கி ஊழியர்களின் தன்னிச்சையான ஆதரவை மஹோன்னத அளவில் ஈர்த்தது.  

                                     எவ்வளவோ பிரிவு உபசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தாலும் மிகவும் வலுக்கட்டாயப் படுத்தியதால் இந்த ஒரு விழாவில் மட்டும் கலந்து கொள்ள சம்மதித்து இருந்தார்.  விழாவை மிகவும் சிக்கனமான முறையில் நடத்த வேண்டும் எனவும் ஒரு நிபந்தனை போட்டிருந்தார்.  

               இந்தியாவின் பல மூலைகளிலும் வியாபித்திருக்கும் மிகவும் பிரபலமான வங்கியின் 10வது சேர்மன் கிருஷ்ணசாமி.  இதற்கு முன் பதவி விலகிய சேர்மன்கள் எல்லாம் பதவி விலகும் சமயம் ஒரு மாதம் டூர் போட்டும் கொண்டு எல்லா மாநிலங்களையும் படை யெடுத்து, பல பிரிவு உபசாரக் கூட்டங்களை விமரிசையாக ஏற்பாடு செய்ய வைத்து திரவியம் திரட்டிச் சென்ற சரித்திரம் அவ்வளவு பழசாகி விடவில்லை.  ஆனால் அந்த பாரம்பரியத்தின் மீது இவருக்கு மிகுந்த எரிச்சல்.  இவருக்கும் தெரியாமல் பிரிவு உபசார விழாவின் போது இவருக்கு அளிப்பதற்கான பணமுடிச்சு நிதி திரட்டல் ஊழியர்களிடையே வழக்கதிற்கு அதிகமான வரவேற்பு பெற்று வந்தது, அந்த விழாக் கமிட்டி செயலருக்கு மிக்க வியப்பை அளித்தது.  
           
 தனது அலுவலகம் தன் குடியிருப்பிலிருந்து அரை மணி நடைதூரத்திலேயே இருப்பதால் கிருஷ்ணசாமி நடந்தே ஆபிஸுக்குப் போகும் பழக்கத்தை கடைப் பிடித்து வந்தார்.  தனது உத்யோகத்தின் ஓய்வு ஒழிவின்மை உடல் நலத்துக்கு அளித்த பரிசுகளான இரத்த அழுத்தம், நீரிழவு ஆகியவைகளை தாக்கும் பிடிக்கவும் இந்த நடை ஓரளவுக்கு உறுதுணையாக இருந்தது.  தனது அலுவலக வேலை எந்தவிதமான சரீர சிரமத்தையும் தர இயலாதது என்பதால் டூர் செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில்  நடந்தே வருவதை ஒழுங்காக கடைபிடித்து வந்தார்.  


ஆபிஸுக்கு நடந்து போகும் போது பெரும்பாலும் அவர் தனிமையையே விரும்பினார்.  அவருடைய அலுவல்களில் இந்த அரைமணி அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.  அந்த நாளைய கடுமையான மன உளைச்சலுக்கு அந்த நடையின் மூலம் தன்னை தயார் செய்து கொள்வதாக அவர் சில சமயம் நினைப்பதுண்டு.  

           அன்று ஆபிஸ் புறப்பட்டபோது இன்னும் ஒரு நாளில் இந்த அதிகாரபூர்வமான உரிமை தன்னிடமிருந்து பறிபோய்விடும் என்று நினைத்தபோது அவருக்கு வினோதமாக இருந்த்து. 25 வயதில் தான் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி ஆசிரியர் வேலையை தைரியமாக விட்டுவிட்டு வங்கியில் ஆபிஸராக சேர்ந்து 35 வருடங்கள் ஆகிவிட்டதே என்ற நினைப்பு அவருக்கு வியப்பை அளித்தது.  இந்த 35 வருடங்களில் தன் உத்யோக வாழ்க்கை அடைந்த முன்னேற்றம் அவரது நினைவிற்கு வந்தது.  இந்த நீண்ட அனுபவத்தின் போது, தனக்கு உறுதுணையாக இருந்து தனது சிந்தனைகளை, ஆணைகளை செயலாக்கிய துணை அதிகாரிகள், தன்னை ஊக்குவித்து முன்னேற்றிய பெரிய அதிகாரிகள், தன்னை படாதபாடு படுத்த நினைத்து திண்டாடிய சில உயர் அதிகாரிகள், தனக்கு பக்க பலமாக இருந்து தனது வங்கியின் பெருமையை உயர்த்திய பல வாடிக்கையாளர்கள் இவர்களைப் பற்றிய நல்ல நினைவுகள் சில அவரில் அசை போட்டன.  

           ரிடையர் ஆனதற்குப் பிறகு என்ன செய்வது என்பது பற்றி ஒரு நாளும் அவர் கவலைப் பட்டதே இல்லை.  சென்னையில் தான் Housing Loan மூலம் வாங்கிய வீட்டில் குடிபுகுவது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தார்.  வங்கி வேலை தவிர கர்னாடக இசை, பரத நாட்டியம், புத்தகம் படித்தல், உலக விசாரங்கள் அகியவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததால் தன்னுடைய ஓய்வு நாள் வாழ்க்கை சுறுசுறுப்பாகவே இருக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருக்கு எப்போதும் உண்டு.  தான் கடந்த 10 ஆண்டுகளாக கேஸட்டில் சேகரித்து வரும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளை சீராக்கி வரிசைப் படுத்த வேண்டும் என்ற நீண்ட நாளைய ஆசைக்கு தனது ஓய்வு நாள் வாழ்க்கையில் முதலிடம் தர தீர்மானித்திருந்தார்.  பல விதமான Banking Journal களில் பலரும் பாராட்டுகின்ற வகையில் தான் எழுதியுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை ஓய்வு கால வாழ்க்கையின் போது இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டதுண்டு.  சில தினங்களில் இத்தகைய ஆசைகளுக்காக தான் எப்போது பதவியிலிருந்து ஓய்வு பெறுவோம் என்று கூட ஏக்கம் கொண்டதுண்டு.  

          தன்னுடைய அலுவலில் அவருக்கு மிக்க பற்று உண்டு.  எந்த வேலையை மேற்கொண்டா லும் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு முழுமூச்சுடன் ஈடுபடும் சுவாவம் கிருஷ்ணசாமியின் பிறவி குணம்.  சிறிய விஷயங்களைக் கையாளும் போது கூட பெரிய விஷயங்களை கையாளும் போது செலுத்தும் அதே அக்கறையுடன் செயலாற்றுவார்.  5 வருடங்களுக்கு முன் வங்கியின் ஜெனரல் மேனேஜராக பதவி வகித்தபோது Personnel Department ய் அவர் கையாண்ட பாணி அவருக்கும் அவரது வங்கிக்கும் மிகுந்த பெருமையையும் புகழையும் தேடித்தந்துள்ளது.  மிகவும் கறாராக இல்லாமல், அதே சமயம் அதிக சலுகைகளையும் தராமல் சமன் செய்து சீர் தூக்கி அவர் எடுத்த முடிவுகள் Personnel Management கொள்கைகளுக்கு பல புதிய பரிமாணங்களைச் சேர்க்க வல்லவை.  இந்த சக்தியினால், இவர்  தன் சக அதிகாரிகளின் மத்தியில் உயர்ந்து நின்றார்.  கிருஷ்ணசாமி எடுக்கும் எந்த விதமான முடிவும் விதிகளுக்கு கட்டுப் பட்டும், அதே சமயத்தில் எல்லாவிதமான குறைகளுக்கும் அப்பாற்பட்டு தீர்க்கமானவையாகவும் திகழும்.  விதிகளை மீறியும் சில முடிவுகள் அமைந்த தருணங்களும் உண்டு.  ஆனால் அவைகளை குறை கூற இனிமேல் தான் யாராவது பிறந்து வரவேண்டும்.  

தனது பணிகளை இது நாள் வரை செவ்வனே செய்து வந்துள்ளோம் என்ற ஒரு இறுமாப்பு கூட அவருக்கு உண்டு என்று சொல்லலாம்.ரிடையர் ஆவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே தான் முடிவு எடுக்க வேண்டிய எல்லா விஷயங்களைப் பற்றியும் ஒரு தீர்மானமான முடிவை எடுத்து ஓய்வு பெறுவதற்கென தன்னை முழுமையாக தயார் செய்து கொண்டுவிட்டார்.  கடந்த இரண்டு நாட்களாக routine விஷயங்களைத்தான் கவனித்து வந்தார்.

                  ஆனால் ஒரே ஒரு முக்கிய விஷயம் மட்டும் முடிவெடுக்கப்படாமல் தேங்கிக் கிடந்தது. 

------தொடரும்.

22 கருத்துகள்:

  1. ஐயா... போட்டிகளில் பங்கு பெறலாமே...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. அந்த ஒரு விசயம்தான் எங்களின் ஆவலைத் தூண்டுகிறது ஐயா
    தொடர்கிறேன்
    தம +1

    பதிலளிநீக்கு
  4. // ஆனால் ஒரே ஒரு முக்கிய விஷயம் மட்டும் முடிவெடுக்கப்படாமல் தேங்கிக் கிடந்தது. //

    அது என்ன என்று அறிய ஆவல்.தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அந்த விஷயம் என்ன? அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. நாளை வரை காத்திருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  7. தொடர்கிறேன்.....

    அடுத்த பகுதியும் வெளிவந்து விட்டது போல. இதோ படிக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு