தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 06, 2012

என்னைப் பாதித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்!


இது நான் கல்லூரி விடுதியிலிருந்து கிட்டத்தட்ட  வெளியேற்றப்பட்ட நிகழ்ச்சி.

1964-66 இல் நான் சென்னை விவேகானந்தா கல்லூரியில் கணிதத்தில் பட்டமேற்படிப்புப் படித்தேன்.முதலாண்டு படிக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கல்லூரி சில நாட்கள் மூடப்பட்டது.

முதல் நாள் எல்லோரும் கருப்பைப்பட்டை அணிந்திருந்தோம்.நானும் சில நண்பர்களும் கல்லூரி வாசல் பக்கம் வந்தபோது அங்கு கல்லூரித் தலைவரும் (டி.என்.சேஷாத்ரி) இராமகிருஷ்ணா மடத் தலைமைச் சாமியாரும் நின்றி ருந்தனர். சாமியார் என்னை அழைத்தார்.அத்தனை பேரில் குறிப்பாக என்னை ஏன் அழைத்தார்?ஒரு சாமியார் இன்னொரு சாமியாரை அடையாளம் கண்டு கொண்டாரோ?!

அருகில் சென்றேன்.அவர் என்னிடம் கேட்டார்”இந்தக் கருப்புப்பட்டை இந்திக்கு எதிராகவா அல்லது சமஸ்கிருதத்துக்கு எதிராகவா?” தலைவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இந்திக்கு எதிராக மட்டுமே” எனச் சொல்லி விட்டு நான் வேகமாக நழுவி விட்டேன்!

ஊரெல்லாம் கலவரமாக இருந்ததால் விடுதி மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை.

வழக்கமான உணவைத் தவிர மாலை பஜ்ஜியும் வழங்கினார்கள்—மாணவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பதற்காக!

மறுநாள் வில்லிவாக்கத்தில் இருந்த என் உறவினர் வீட்டிலிருந்து ஃபோன் வந்தது .பேசியவர், சென்னை வந்திருந்த என் அம்மா.என் உறவினர் வந்து என்னை வில்லிவாக்கம் அழைத்துச் செல்வார் என்று சொன்னார்கள்.

ஆனால் என்னால் அவர் வரும் வரை பொறுத்திருக்க முடியவில்லை.நாங்கள் இருந்த பழைய விடுதி அருகில் இருந்த சுவர் தாண்டும் உயரம்தான்.நான் சுவரைத் தாண்டி வெளியே சென்று பேருந்தில் வில்லிவாக்கம் சென்று விட்டேன்.அங்கு போன பின் தெரிய வந்தது என் உறவினர் என்னைப் பார்க்க விடுதி சென்றிருக்கிறார் என்று.அவர் திரும்பி வரும் முன்பே நான் அம்மாவிடம் பேசிவிட்டுத் திரும்பி வந்து விட்டேன்;மீண்டும் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று விட்டேன். 
அங்கு எனக்கு ஒரு அணுகுண்டு காத்திருந்தது.

என்னைத் தேடி வந்த என் உறவினர் என் அறை எண் தெரியாததால், வார்டனைப் பார்த்து உதவி கேட்க,வார்டன் அவரை அழைத்துக் கொண்டு என் அறைக்கு வர,அங்கு நான் இல்லாமல் போக,என் நண்பர்கள் ஏதோ சொல்லி மழுப்ப,உடனடியாக விடுதி முழுவதும் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அப்போது தெரிய வந்தது 39 மாணவர்கள் விடுதியில் இல்லை என்பது.(என்னால் எல்லோரும் மாட்டினார்கள்!)

மறுநாள் காலை வழக்கம்போல் பிரார்த்தனைக் கூடத்தில் கூடியிருந்தோம். வழக்குத்துக்கு மாறாகக்,கல்லூரித் தலைவர் அவர்களும் வந்திருந்தார்.

“நேற்று விடுதியிலிருந்து பல மாணவர்கள் அனுமதியின்றி வெளியே சென்று விட்டனர்.அதில் சில  முதுநிலை மாணவர்களும் இருந்தனர்.அவர்களை உடனடியாக விடுதியிலிருந்து நீக்குகிறேன். மற்றவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.”என்ற அறிவிப்பைச் செய்தார் தலைவர்.

என் தலையில் இடி விழுந்தது போலாயிற்று.”முதுநிலை மாணவர்கள் “என்று வேறு சொல்லி விட்டார்.நிச்சயம் நாம் அதில் அடக்கம் என்று எண்ணினேன். கூட்டம் கலைந்தவுடன் மெஸ்  மேற்பார்வையாளராக இருந்த சமஸ்கிருதப் பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன்.(பிற்காலத்தில் விஸ்வநாத சிவாச்சாரியார் எனப் பிரபலமானவர் அவர்).”நீ பேசாமல் இரு,நான் பார்த்துக் கொள்கிறேன் ”என்று அவர் சொல்லி விட்டார்.
ஒரு இரண்டாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவனையும்,மூன்றாமாண்டு பட்டப் படிப்பு மாணவனையும் விடுதியிலிருந்து நீக்கினர்.மற்றவர்களுக்கு  எச்சரிக்கையோடு மன்னிப்பு வழங்கப்பட்டது(அந்த இரு மாணவர்களும் கூடப் பின்னர் மன்னிக்கப் பட்டனர்)

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எனக்குக் கிடைத்த அனுபவம் இது.

தலைக்கு வந்து தலைப்பாகையோடு போயிற்று!

14 கருத்துகள்:

  1. தலைக்கு வந்து தலைப்பாகையோடு போயிற்று!

    பதிலளிநீக்கு
  2. மிக மிக வித்தியாசமான அனுபவம். ஹாஸ்டல் வாழ்க்கை எனக்குப் பரிச்சயமற்றது என்பதால் இதுபோன்ற அனுபவங்களை அறிவதில் ஒரு ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  3. எப்பிடி ஐயா இவ்வளவையும் நியாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு உண்மையில் நியாபக சக்தி ரொம்ப அதிகம் தான்...:)

    பதிலளிநீக்கு
  4. ஹிந்தி போராட்டம் என்ற போர்வையில் நாங்களும் ஒரு சில நாட்கள் பள்ளியில் ஸ்ட்ரைக் செய்திருக்கிறோம் - கும்பலோடு கோவிந்தாவாக, பின்னொரு நாள் தில்லியில் வந்து இருக்கப்போவது தெரியாதே....

    பதிலளிநீக்கு
  5. பித்தரே!
    அதுபோது நான் நுங்கம் பாக்கம் மாநகராட்சி
    உயர்நிலைப் பள்ளியில் பணி செய்து கொண்டிருந்தேன்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. உங்களால்தான் எல்லோரும் மாட்டினார்கள் என்பதும் உங்களைப்போலவே எல்லோரும் மன்னிக்கப்பட்டனர் என்ற சுவாரஸ்யமான செய்திகளை தந்தமைக்கு நன்றி. நீங்கள் ஏன் இரண்டாண்டு காலம் விடுதியில் இருந்தபோது நடந்த சுவையான நிகழ்வுகளைத் தரக்கூடாது?

    பதிலளிநீக்கு
  7. வே.நடனசபாபதி சொன்னது…

    //உங்களால்தான் எல்லோரும் மாட்டினார்கள் என்பதும் உங்களைப்போலவே எல்லோரும் மன்னிக்கப்பட்டனர் என்ற சுவாரஸ்யமான செய்திகளை தந்தமைக்கு நன்றி. நீங்கள் ஏன் இரண்டாண்டு காலம் விடுதியில் இருந்தபோது நடந்த சுவையான நிகழ்வுகளைத் தரக்கூடாது?//
    முயன்று பார்க்கிறேன்.
    நன்றி சபாபதி சார்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு.
    இன்னும் நிறைய பேர் இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  9. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று உங்களை போன்றவர்களுக்கும் பலருக்கும் ... ஆனால் பலரின் தலைக்கு தலைப்பாகை தந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம் .. வாசுதேவன்

    பதிலளிநீக்கு