தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

விஜய் டி.வி. செய்த போஸ்ட் மார்ட்டம்!

நேற்று இரவு விஜய் டி.வி. யில் சூப்பர் சிங்கர் முடிவுகளின் போஸ்ட் மார்ட்டம் நடை பெற்றது.வழக்கமான மூன்று நீதிபதிகளுடன், மேலும் 26 பேர் சேர்ந்து,மொத்தம் 29 நீதிபதிகள் இறுதிப் போட்டியில் மதிப்பெண் போட்டார்களாம்.அந்த மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதோடு,பல நீதிபதிகள் ஒவ்வொரு போட்டி யாளரின் அன்றைய திறமை வெளிப்பாடு பற்றியும் கருத்துக் கூறினார்கள்.



நேற்று,சாய் சரண் மற்றும் சத்தியப் பிரகாஷ் இருவரது பாட்டுக்களுக்கும் கருத்து வெளியிடப் பட்டது.அனைவரும் சத்தியப்பிரகாஷை மிகவும் புகழ்ந்து,அவருக்கே அதிக மதிப் பெண்கள் கொடுத்து மகேசன் தீர்ப்பைக் கேலிக்கூத்தாகி ,வெற்றி பெற்றவர் முகத்தில் கரி பூசினர்!சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்(வாக்கு வித்தியாசம்) முட்டாள்களாக்கப் பட்டனர்.இதில் அதீத உணர்ச்சி வெளிப்பாடுகள் வேறு.சத்யா தோற்றதில் அவர்கள் அனைவருக்கும் வருத்தம்,விஜய் டி.வி. உட்பட என ஒருவர் சொல்ல ,ஒருவர் கண்ணீர் சிந்த,ஒரே நாடகம்!மக்களின் வாக்குகளே முடிவைத்தீர்மானிக்கும் என முடிவு செய்த பின் இத்தனை நீதிபதிகளும் மதிப்பிடுதலும் எதற்காக?.



இன்றும் இது தொடரும்.பூஜாவுக்காகக் கண்ணீர் சிந்துவார்கள். சந்தோஷைப் பின் தள்ளுவார்கள்.



சத்யா மிகச்சிறந்தபாடகர் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. பரிசுக்குத் தகுதியானவரே!ஆனால் ஏற்கனவே போட்டி முடிந்து,பரிசுகள் கொடுக்கப்பட்டு விட்ட நிலையிலே,இப்படி ஒரு போஸ்ட் மார்ட்டம் தேவையா என்பதே என் கேள்வி. எஸ்.எம்.எஸ்ஸிலும் ஃபோன் காலிலும் வரும் வருமானம் வேண்டும்,அதற்காக மக்கள் தீர்ப்பு;ஆனால் அது பற்றி ஒப்பாரியும் வைப்போம் என்றால் எப்படி?



பேசாமல் அடுத்த முறை 50 நீதிபதிகளை வேண்டுமானால் வைத்து முடிவைத் தீர்மானிக்கட்டும்.



மகேசன் தீர்ப்பு வேண்டாம்!

புதன், செப்டம்பர் 28, 2011

பென்சிலும் சிறுவனும்!

பாட்டி கடிதம் எழுதுவதைப் பேரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரெனக் கேட்டான்”பாட்டி!கதை எழுதுகிறாயா.என்னைப் பற்றியா?”

பாட்டி எழுதுவதை நிறுத்திவிட்டுப் பேரனைப் பார்த்தாள்.சொன்னாள் ”உன்னைப் பற்றித்தான்.ஆனால் நான் என்ன எழுதுகிறேன் என்பதை விட நான் எதை வைத்து எழுதுகிறேன் என்பது முக்கியம்.நீ வளர்ந்து பெரியவனாகும்போது இந்தப் பென்சில் போல் இருக்க வேண்டும்”

பேரன் பென்சிலைப் பார்த்தான்.”என்ன பாட்டி இது சாதாரணப் பென்சில்தானே?விசேடமாக எதுவும் இல்லையே!”

பாட்டி சொன்னாள்--

நீ எப்படிப் பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தது அது.இதில் ஐந்து முக்கியப் பண்புகள் இருக்கின்றன.அவற்றை நீ ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை அமைதியாக,சிறப்பாக இருக்கும்.

முதலாவது.உன்னால் செயற்கரிய செயல்கள் செய்ய முடியலாம். ஆனால் உன்னை எப்போதும் ஒரு கை நடத்திச்செல்கிறது என்பதை மறக்காதே. அந்தக் கையைத்தான் கடவுள் என அழைக்கிறோம்.

இரண்டாவது.எழுதும்போது அவ்வப்போது நான் பென்சிலைச் சீவ வேண்டி வருகிறது.இது பென்சிலுக்குத் துன்பம் தரலாம்.ஆனால் சீவிய பின் பென்சில் கூர்மையடைகிறது.அது போல் நீயும் உன் வலிகளையும் ,துயரங்களயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்;ஏனெனில் அவை உன்னை மேலும் சிறந்தவனாக்கும்.

மூன்றாவது இந்தப் பென்சில் தவறாக எழுதியதை அழிப்பான் வைத்து அழிப்பதற்கு அனுமதிக்கிறது.வாழ்க்கையில் செய்த தவறுகளை மாற்றி அமைப்பது என்பது நல்லதே.அது உன்னை நியாய வழியில் எடுத்துச் செல்லும்.

நான்காவது இதில் முக்கியமானது வெளியே இருக்கும் மரப்பகுதி அல்ல; உள்ளே இருக்கும் எழுதும் பகுதி.அது போல் உன் உள்ளே இருப்பதின் மீது எப்போதும் கவனம் வை!

ஐந்தாவது, பென்சில் எப்போதுமே தன் தடத்தை விட்டுச் செல்கிறது.அது போல் நீ செய்யும் செயல்களெல்லாம் தம் தடத்தைப் பதித்துச் செல்வாய்.எனவே செயல்கலில் கவனம் தேவை!

இவற்றையெல்லாம் நினைவில் கொண்டால்

நீ பெரிய செயல்கள் செய்யலாம் ,கடவுளின் கைபற்றி!

அவ்வப்போது வாழ்க்கையில் நீ கூர்தீட்டப் படுவாய், உன் துன்பங்களால். ஆனால் அது உன்னை வலிமையாக்கும்!

உன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும்!

உன் உள்ளே இருப்பதின் முக்கியத்துவத்தை நீ உணர்வாய்!

என்ன செய்தாலும் உன் முத்திரையைப் பதித்துச் செல்.எந்நேரத்திலும் கடமை தவறாதே!

இதுவே இந்தப் பென்சில் உனக்குக் கற்றுக் கொடுப்பது.”

(பாலோ கோல்ஹோ வின் படைப்பிலிருந்து.)

திங்கள், செப்டம்பர் 26, 2011

பரல்கள்

ஒரு முறை அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலைச் சந்திக்கப் போனாராம் .அவர் சென்றபோது சர்ச்சில் குளியலறையில் இருந்தாராம்.அவர் குளித்துவிட்டு வருவதற்காக ரூஸ்வெல்ட் காத்துக் கொண்டிருந்தாராம். அவர் வெளியே இருப்பது தெரியாத சர்ச்சில்,குளித்துவிட்டு ஆடை ஏதுமின்றி வெளியே வந்தாராம்.ரூஸ்வெல்ட்டைப் பார்த்து ஒரு நொடி திடுக்கிட்ட சர்ச்சில் சொன்னாராம்--”இங்கிலாந்து பிரதமருக்கு,அமெரிக்க ஜனாதிபதியிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை!”
....................................

அமெரிக்க ஜெனரல் ஒருவரிடம் பேட்டியில் கேட்டார்களாம்9/11 தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை மன்னிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று.
அவர் சொன்னாராம்”மன்னிப்பது கடவுளின் வேலை.அதற்காகக் கடவுளிடம் அவர்களை அனுப்புவது மட்டுமே நம் வேலை!”
......................................


வாழ்க்கையென்பது சுகமாக ,பிரச்சினை இன்றி இருக்கும்,அதற்குத் தொலைதூர இயக்கி போல் சில பொத்தான்கள் இருந்தால்--கோபத்துக்கு மௌனமாக்கும் பொத்தானும்,தவறுக்குப் பின்னே போகும் பொத்தானும், கஷ்டத்துக்கு விரைந்து முன் செல்லும் பொத்தானும்,மகிழ்ச்சியான நேரங்களுக்கு,இடைநிறுத்தும் பொத்தானும் இருந்தால்!

.......................................
திருமணம் என்பது
ஒரு புல்லாங்குழல்!
பல ஓட்டைகள்,
உள்ளே வெற்றிடம்!
ஆனால்
அதே ஓட்டைகளும்
அதே வெற்றிடமும்
இனிய நாதம் எழுப்பும்
நன்கு வாசிக்கத்தெரிந்தால்!

...................................................

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

தென்னை மரத்திலிருந்து சப்பான் வரை!

ஞாயிறன்று எங்கள் குடியிருப்பில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய்

பறிக்கப்பட்டது(தென்னை மரத்தில் தேங்காய் பறிக்காமல் மாங்காயா பறிப்பார்கள்?!)

அப்போது சில மட்டைகளும் வெட்டி வீழ்த்தப்பட்டன.

கிட்டத்தட்ட 300 காய்கள் தேறின.வெட்டிய மட்டைகளிலிருந்து ஒருபெண்மணி

துடைப்பம் செய்து எடுத்துக் கொண்டாள்.மரங்களுக்குச் சரியான

பராமரிப்பே கிடையாது.தண்ணீர் விடுவது கூட இல்லை.ஆயினும் மரங்கள்

தொடர்ந்து காய்கள் தந்து கொண்டே இருக்கின்றன.எனக்கு அவ்வையாரின்

பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

’’நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’’

உண்மைதான்.


அவ்வையார் என்பவர் ஒருவர் அல்ல,அதற்கும் மேற்பட்டவர்கள் என்று ஒரு

கருத்து நிலவுகிறது.இதற்கு ஆதாரமாகக் கூறப்படும் ஒரு பாடல்

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து, தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.


வான் கோழி என்பது ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபின் தான்,இங்கு வந்தது.

எனவே பழைய அவ்வையார் இந்தப் பாடலைப் பாடியிருக்க முடியாது.இந்த

அடிப்படையில்தான் ஒருவருக்கு மேற்பட்ட அவ்வையார்கள் இருக்க வேண்டும்

எனச் சொல்கிறர்கள்.


வான்கோழி நன்றி நவிலும் தின விருந்தில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு.

நன்றி நவிலும் தினம் என்பது கடவுளுக்கும்,உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்

நன்றி தெரிவிக்கும் தினமாகும்.இது மிக முக்கியமாக யு.எஸ்.ஸிலும்,

கனடாவிலும் கொண்டாடப்படுகிறது.அன்றைய விருந்தில் வறுத்த வான்கோழி

முக்கிய உணவாகும்.


தமிழ்நாட்டிலும் நன்றி நவிலும் தினம் நன்கு கொண்டாடப் படுகிறது.ஆம் .நமது

பொங்கல் பண்டிகையைத்தான்குறிப்பிடுகிறேன்.நல்லவிளைச்சலைக்கொடுத்த,

இயற்கைக்கு, சூரியனுக்கு,நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு(மாட்டுப் பொங்கல்)

நன்றி தெரிவுக்கும் தினம்.எனவேதான் திறந்த வெளியில் அடுப்பு வைத்துப் பொங்கல்

செய்து படைத்து வழிபடுகிறோம்.சூரியனின் வடக்கு நோக்கிப் பயணம்

அன்றுதான் ஆரம்பமாகிறது.


ஆதி மனிதன் முதலில் வணங்கத்தொடங்கியது சூரியனைத்தான்.அவனுக்குத்

தெரிந்த மிகப் பெரிய சக்தி பரிதிதான்.ரிக்வேத காலத்துக்கு முன்பிருந்தே

சூரிய வழிபாடு இருந்ததாகச் சொல்லப் படுகிறது.எனவே ஆதிசங்கரரின்

ஷண்மதங்களில் ’சௌரம்’ என்பதும் ஒன்றாகச் சொல்லப்பட்டது.


சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது ஜப்பான்.உலகின் கிழக்குக்

கோடியில் இருக்கும் நாடாதலால் சூரிய உதயம் முதலில் அங்குதான் நிகழ்கிறது.

ஜப்பானுக்கு நிப்பான் எறுதான் பெயர்.அதன் பொருளே சூரியன் உதிக்கும் இடம்

என்பதுதான்.


நான் பள்ளியில் படிக்கும்போது ”சப்பான் நாடு” என்ற ஒரு கட்டுரை பாடப்

புத்தகத்தில் இருந்தது.சப்பான் பற்றிப் பல செய்திகளைச் சொல்லிக் கடைசியில்

”இவைதாம் சப்பான்” என்று கட்டுரை முடியும்.

தேர்வில் ஒரு கேள்வி”இவைதாம் சப்பான் ,எவைதாம்?” என்பது.

என்வகுப்புத்தோழன் ஒருவன் அழகாகப் பதில் எழுதினான் ஒரே சொல்லில்!

“அவைதாம்!”


டிஸ்கி: பள்ளிக்கூடத்தில் கட்டுரைக்குச் சில தலைப்புகளைக் கொடுத்த ஆசிரியர்

அவற்றுள் ஏதாவது ஒன்று தேர்வில் கேட்கப்படும் எனக்கூறினாராம்.மாணவன்

பசுமாடு பற்றி நன்கு தயார் செய்துகொண்டு போனான்.ஆனால் கேள்வியோ,

தென்னை மரம் பற்றி.மாணவன் யோசித்தான்.பின் எழுதினான்”எங்கள்

ஊரிலெல்லாம் தென்னை மரத்தில் பசுவைக் கட்டி வைப்பார்கள்.பசு நமக்குப்

பால் கொடுக்கிறது” என்று தொடங்கிப் பசுவைப் பற்றி அவன் படித்ததெல்லாம்

எழுதி விட்டு வந்தானாம்!

புதன், செப்டம்பர் 21, 2011

காதலி!உன்னை எப்படி மறப்பேன்!

எனது 9-9-2011 தேதியிட்ட ”ஒரு பதிவர் மனம் திறக்கிறார் “ என்ற பதிவில் எனக்குப் பிடித்த என் பழைய பதிவுகளை”மீள் பதிவா”கக் கொடுக்கப்போகிறேன் என்று சொல்லியிருந்தேன்.ஏற்கனவே ஒரு மீள் பதிவு வெளியிட்டு விட்டேன்.

இப்போது ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று கவிதைப் பதிவுகளை ஒன்றாக இணைத்துத் தந்திருக்கிறேன்.சேர்த்துப் படிக்கும்போதுதான் தாக்கம் புரியும்.பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

…………………….

இன்னும் மறக்கவில்லை
..................................................

சாந்தோம் கடற்கரையின்
சாயங்கால நெருக்கங்கள்
இன்னும் மறக்கவில்லை!

கபாலி கோவில் பிரகாரத்தின்
கண்பேசும் பாஷைகள்
இன்னும் மறக்கவில்லை!

புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
இன்னும் மறக்கவில்லை!

எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
உன் எச்சில் பீச்மெல்பா
இன்னும் மறக்கவில்லை!

ஆனால்,

நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு

இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
என்னை மறந்து விடுங்கள்

அதை மறந்ததனால்தான் உன்னை
இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

இன்று--
சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
ஆனால்?
அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?

…………………………………

சாந்தோம் சந்திப்புகள்

காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து ண்களும் நோகுதடி.

எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?

சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோஅக்கா வரல்லையா?”

நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.

அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)

சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?

என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.

அடியே!

நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

………………………

சாந்தோம் சந்திப்புகளின் முடிவு!

இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

மெல்ல வாய் திறந்தாய் இரண்டு நாட்களாய்

என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

எஸ் மாப்பிள்ளை, அனைவருக்கும் சந்தோஷம்.

என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

என்னை மறந்து விடுங்கள்என்றுரைத்துப் போய்விட்டாய்.

உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால் இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!
சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்
(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)