தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 26, 2017

என்னதான் நடக்கும்...?

”அப்பா”

பெண்ணின் குரல் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே இறக்கிப் பார்த்தார் ராமனாதன்.

அவர் பெண் கவிதா.

“என்னம்மா”

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்

“அப்பா!அசோக்கும் நானும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டொம்”

“என்னம்மா சொல்றே?இது ஏன் நடக்கக் கூடாதுங்கறதைப் பத்தி அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினேனே.இன்னும் மனசு மாறலியா.”

“மாறாதுப்பா’


”ஏற்கனவே ரெண்டு முறை கிட்னி செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சை செய்திட்டிருக்கான்.இரண்டு தடவை செத்துப் பொழைச்சிருக்கான்.மூணாவது தடவை ஏதாவது   நடந்தா என்னா ஆகுமோ?நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது அவன் உயிருக்கே ஆபத்துன்னா என்ன செய்யறது?”

”அதெல்லாம் எதுவும் ஆகாதுப்பா”

“நீ என்ன சாவித்திரியா,எமனோட சண்டை போட்டு உயிரை மீட்கப் போறியா?”

“நான் கடவுளை நம்புறேன்.எங்க காதலை நம்பறேன்”

”உன் பிடிவாதம் தெரிஞ்சதுதானே.உன் தலைவிதிப்படி நடக்கட்டும்”

திருமணம் நடந்தது.

அசோக் வசதியான பையன்.

பிக்கல் பிடுங்கல் இல்லாதவன்.

அவர்கள் வாழ்க்கை சுகமாகத் தொடங்கியது.

ஆனால் ராமனாதன் அவ்வளவாக அவர்களுடன் தொடர்பில் இல்லை.

ஏதாவது விசேடம் என்றால் அவர்கள் வீட்டுக்குப் போவார்.

கவிதா அப்பாவுக்கு மன வருத்தம்தான் என்று எண்ணிக் கொண்டாள் 

................

சில மாதங்களுக்குப் பின் ஒரு நாள்

கவிதாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு

“அப்பா!அசோக்குக்கு கிட்னி செயலிழக்கத் தொடங்கி விட்டது.மாற்று அறுவை சிகிச்சைதான் செய்யணும்.ஓரிரு மாதங்களாவே பிரச்சினைதான்.உங்க கிட்ட சொல்லலை.”

சென்று பார்த்தார்.ஆறுதல் சொன்னார்.நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்.

மருத்துவரைச் சென்று பார்த்தனர்.

அசோக் மறுத்தும் கவிதா தன் சிறுநீரகத்தைத் தரவிரும்பினாள்

சோதனைக்குப் பின் மருத்துவர் அது பொருந்தாது என்று சொல்லி விட்டார்.

சிறுநீரகக் கொடையாளிக்கு ஏற்பாடுசெய்யும்படி  அவரைக் கேட்டுக் கொண்டனர்.

காத்திருப்பு ஆரம்பம்..................

சில நாட்களுக்குப் பின் அசோக்குக்கு மருத்துவரிடமிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது.
 பொருத்தமான சிறுநீரகக் கொடையாளி கிடைத்து விட்டார்,ஒரு வாரத்தில் அறுவை சிகிச்சை செய்து விடலாம்;நாளையே மருத்துவ மனையில் சேரவேண்டும் என்று சொன்னார்

கவிதா தந்தைக்கு தொலைபேசினாள்

அடித்துக் கொண்டே இருந்தது.

பல முறை முயற்சி செய்து பயனில்லை..

பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்று,மருத்துவ மனைக்குப் போவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினாள்.

மருத்துவ மனைக்குச் சென்றபின்  அங்கு நடந்த ஏற்பாடுகளில் நேரம் கழிந்தது.

மாலை அப்பாவுக்கு மீண்டும் தொலை பேசினாள்.

எடுத்தார்.

செய்தியைச் சொன்னாள்

உடனே வருகிறேன் என்று சொல்லி ஒரு மணி நேரத்தில் வந்து சேர்ந்தார்

அதற்குள் சோதனைகள் முடிந்து திங்களன்று அறுவைசிகிச்சை என்று மருத்துவர் சொல்லி விட்டார்.

அப்பாவிடம் தகவலைத் தெரிவித்தாள் கவிதா.


‘திங்களா? அன்று  நான் ஊரிலிருக்க மாட்டேனே.ஒரு அவசர வேலையாக நாளையே வெளியூர் போகிறேன்.புதனன்றுதான் வருவேன்” அவர் சொன்னர்.

நீங்கள் இருந்தால் எனக்குத் தைரியமாக இருக்கும் என்று மன்றாடினாள் கவிதா.

அவர் பயணத்தைத் தள்ளிப்போட இயலாது,எல்லாம் நல்லபடியாக நடக்கும்.நான் பிரார்த்திக்கிறேன் என்று சொல்லி விட்டார்.

கவிதாவுக்குப் பெரிய ஏமாற்றம்.

திங்களன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

மறுநாள் மருத்துவர் எல்லாமே திருப்திகரமாக இருக்கிறது,இனி பயமில்லை என்று சொல்லி விட்டார்.

கவிதா கண் கலங்கியவாறே விசும்பலுடன் சொன்னாள்”இந்த மாதிரி நேரத்தில் அப்பா உடன் இல்லை.அவருக்கு என் திருமணத்தில் விருப்பமே இல்லைபோலிருக்கிறது நாம் சொன்னபடிக் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்று கோபத்தில் எங்கோ போயிருக்கிறார்.இங்கு பெத்த மனம் கல்லு “

மருத்துவர் எதுவும் பேசவில்லை.

அறையை விட்டு வெளியே வந்து காரிடாரில் நடக்கத் துவங்கினாள்.

“கவிதா மேடம்” பின்னிருந்து குரல்

திரும்பிப் பார்த்தாள் .

நர்ஸ்

அவள் அருகில் வந்து சொன்னாள்”உங்க கிட்ட சொல்லக் கூடாது.ஆனா சொல்லாம இருக்க முடியலை.நீங்க நினைக்கிறது தப்பு.உங்க அப்பா உங்க கூட இல்லன்னா காரணம்......அவர்தான் சிறுநீரகம் கொடுத்தவர்.யாரிடமும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.நான் சொல்லிட்டேன்.நான் சொன்னதாகத் தெரிய வேணாம்”

கவிதா   சிறுமியானாள்

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து,முகத்தைப் பொத்தியவாறு “அப்பா...ஆஆ”என்று உடைந்து அழலானாள்.....


டிஸ்கி:இது ஒரு முடிவு.இன்னும் இரு முடிவுகள் உள்ளன.




15 கருத்துகள்:

  1. //சில நாட்களுக்குப் பின் அசோக்குக்கு மருத்துவரிடமிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. பொருத்தமான சிறுநீரகக் கொடையாளி கிடைத்து விட்டார்,ஒரு வாரத்தில் அறுவை சிகிச்சை செய்து விடலாம்; நாளையே மருத்துவ மனையில் சேரவேண்டும் என்று சொன்னார்.//

    இந்த இடத்திலேயே நான் கதையின் முடிவினை யூகித்து விட்டேன். அடுத்த வரியில் உறுதி செய்துகொண்டும் விட்டேன்.

    வெரி குட். நல்ல கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஊகிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
      நன்றி விகோ சார்

      நீக்கு
  2. வேறென்ன முடிவு இருக்கும் ,மண்டைக் காயுதே :)

    பதிலளிநீக்கு
  3. நானும் முடிவை யூகித்து விட்டேன் ஐயா
    இன்று த.ம. ஓட்டு போட்டேன் காரணம் நெட் கஃபே.

    பதிலளிநீக்கு
  4. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள் ..மகளுக்கு துன்பம் என்று வரும்போது பாசமிகு தந்தை இதைத்தான் செய்வார் .
    அந்த மற்ற முடிவும் சுபமாகவே இருக்கட்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வருகைக்கு நல்வரவு.

      இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை?

      நன்றி ஏஞ்சலின்

      நீக்கு
  5. இந்தமுடிவு நன்றாகத் தான் இருக்கிறது
    எனினும் இன்னும் வேறு முடிவுகள்
    இருப்பின் அது இதைவிடச் சிறப்பாகத்தான் இருக்கும்
    இல்லையெனில் இருப்பதாக்ச்சொல்லி இருக்கமாட்டீர்கள்
    சரியா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது சிறப்பான முடிவு என்று முடிவில் முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்
      நன்றி ரமணி

      நீக்கு
  6. காத்திருக்கிறேன்... உங்கள் பாணியில் முடிவு நன்றாகவே இருக்கும்...

    பதிலளிநீக்கு
  7. இது தியாக முடிவு. அடுத்து "நினைப்புதான் பொழப்ப கெடுக்குது" முடிவா?!!!!







    பதிலளிநீக்கு
  8. அந்த ரெண்டு முடிவை நான் ஊகித்துவிட்டேன்ப்பா...

    பதிலளிநீக்கு
  9. சிறுநீரகத்தைக் கொடுத்தது யார் என்பதை நானும் யூகித்துவிட்டேன். அடுத்த முடிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. சிறுநீரகத்தைக் கொடுத்தவர் யார் என்று வாசித்து வரும் போத் யூகிக்க முடிந்தது. சரி அடுத்த இரு முடிவுகள்....மனதிற்குப் படுகிறது....பார்ப்போம் உங்கள் முடிவுகள் என்ன என்று..

    கீதா

    பதிலளிநீக்கு