தொடரும் தோழர்கள்

சனி, மே 27, 2017

நடந்ததும் நடக்காததும்!

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.

குஜராத்தி படங்களில் வில்லனாக நடிக்கும் ஃபெரோஸ் வோரா,தன் மகள் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞனை மணக்க விரும்பியபோது,தடையேதும் சொல்லாமல்,மணம் செய்வித்ததோடு,மீண்டும் ஒரு முறை சிறுநீரகம் தேவைப்பட்டால் தன் சிறுநீரகத்தைத் தருவதாக வாக்கும் அளித்தார்.சமீபத்தில் மருமகனின் சிறு நீரகம் பழுதடைந்தபோது,வாக்களித்தபடி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினார்.இது செய்தி.

இதுவே உண்மையான நிகழ்வு;அதன் முடிவு.

இதை ஆதாரமாகக் கொண்டு பிறந்ததே நேற்றைய கற்பனை.இப்படியும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. எனவே அது முடிவு இரண்டு.

மூன்று முடிவுகள் என்று நேற்று சொல்லி விட்டதால் இன்னொரு முடிவையும் தேடி எடுக்க வேண்டியதாகி விட்டது.இதோ மூன்றாவது..........

தன்  பெண்ணின் விருப்பத்தை அறிந்த ராமனாதன் தடையேதும் சொல்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.உங்கள் அன்புக்குக் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வான் என்று கூறிவிட்டார்.

திருமணம் நடந்தது.அவர்கள் வாழ்க்கை இன்பமயமாகத்தான் இருந்தது.ராமனாதனுக்கு மருமகனை மிகவும் பிடித்துப் போனது.ஒரு முறை பேசும்போது சொன்னார்”அப்படி நடக்க வேண்டாம்.ஆனால் ஒரு வேளை மீண்டும் ஒரு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்டால்,கவலைப் பட வேண்டாம்.என்னுடைய சிறுநீரகத்தைத் தருகிறேன்.நம் இருவர் ரத்தமும் ஒரே பிரிவுதான்”

மாதங்கள் கடந்தன.

வாழ்க்கை அப்படியே இருக்குமா என்ன?

அசோக்குக்கு மீண்டும் பிரச்சினை

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும்.

கவிதா தந்தை முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து,அசோக்கிடமும் சொன்னாள்.

ஆனால் ராமனாதன் அது பற்றி எதுவும் பேசவில்லை..

மருத்துவரைச் சந்திக்கும்போது உடன் சென்றார் ஆனால் தான் தருவது பற்றி  வாயைத் திறக்கவில்லை.

கவிதாவுக்குப் பெரும் ஏமாற்றம்.

அவள் தர முன் வந்தும் அது சேரவில்லை.

கொடையாளி கிடைக்க சிறிது தாமதம் ஆயிற்று

அது வரை டயாலிசிஸ் செய்யப்பட்டது.

கவிதா தந்தையைத் தவிர்க்கத் தொடங்கினாள்

கொடையாளி கிடைத்து அறுவையும் நடந்தது.

எதற்குமே தந்தையின் உதவியை நாடவில்லை.

எல்லாம் சுபமாக முடிந்தபின் மருத்துவரிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கவிதா சொன்னாள்”அன்பு,பாசம் இல்தெலாம் வெறும் வார்த்தைகள் என்பதை அப்பா எனக்கு உணர்த்தி விட்டார்.முன்பு தானாகவே தான் சிறுநீரகம் அளிப்பதாகச் சொன்னவர்,தேவைப் பட்டபோது நழுவி விட்டார்.என்ன உலகம்.எல்லாமே வேஷம்”

மருத்துவர்,அவர்கள் குடும்ப நண்பரும் கூட.

அவர் சொன்னார்”கவிதா.நீ நினைப்பது தவறு.சில மாதங்களுக்கு முன் உன் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக இங்கு தங்கியிருந்தபோதுதான் அது தெரிய வந்தது.அவரது ஒரு சிறுநீரகம் முழுதும் செயலிழந்து போயிருந்தது.இருந்தும் இப்போது அவர் என்னிடம் அவர் உயிர் போனாலும் பரவாயில்லை மாப்பிள்ளையைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கொடு என்று கேட்டார்.ஒருவரைக் கொன்று ஒருவரைப் பிழைக்க வைக்க மாடோம் என்று சொல்லி நான் ஆறுதல் சொன்னேன்.அவர் மிக மனமுடைந்து போயிருக்கிறார்.”

நாற்காலியில் அமர்ந்தபடியே முகத்தைப் பொத்தியவாறு உடைந்து அழலானாள் கவிதா.






16 கருத்துகள்:

  1. இதுக்குத்தான் சொல்றது ..கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று :)

    பதிலளிநீக்கு
  2. இதுவும் நல்ல தந்தை என்ற கோணம்தான் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. யதார்த்தமான இந்த முடிவும்
    இரசிக்கும்படியாகவே
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படும் அன்பு. அருமை.

    பதிலளிநீக்கு
  5. வாவ் !! இதுவும் மிகவும் அருமையாக இருக்கு சார் ..ஆனா இந்த மகள் போலத்தான் பலநேரம் மனிதர்கள் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடுவாங்க too quick to judge ....இந்த முடிவும் பிடித்தது

    பதிலளிநீக்கு
  6. இந்த முடிவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

    நான் படித்த இதே போன்ற இன்னொரு கதையில், தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கின அண்ணனுக்காக தம்பி தன் சிறுநீரகத்தைத் தர மிகவும் துடியோ துடியாகத் துடிப்பான். அண்ணனும் அண்ணியும் அவனின் பாசத்தைக்கண்டு கண் கலங்கிப்போவார்கள்.

    டாக்டர் அவனை சோதனை செய்தபின் தம்பியாகிய அவனது சிறுநீரகம் பொருத்தமாக இல்லை எனச் சொல்லிவிடுவார்.

    அதன் பின்பும், அதற்காக மிகவும் வருந்தி, தம்பி அண்ணனிடம் அழுது புலம்புவான். அந்த அண்ணன் தன் தம்பிக்கு ஆறுதல் சொல்லி அவனை சமாதானம் செய்வார்.

    பிறகு அண்ணனின் மனைவியின் சிறுநீரகமே பொருந்திப்போய் ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்துவிடும்.

    டாக்டரிடம் அந்த அண்ணன் மனைவி ஒருநாள் கேட்பாள்:

    “என்ன டாக்டர் .... மனைவியைவிட, சொந்த பெற்றோர்கள் அல்லது உடன் பிறப்புக்களின் சிறுநீரகம் மட்டுமே ஒருவருக்கு நன்றாகச் சேரக்கூடும் என்று சொன்னீர்களே .... எப்படி இவரின் தம்பியின் சிறுநீரகம் சேராமல் போனது” எனக் கேட்பாள்.

    டாக்டர் சிரித்துக்கொண்டே சொல்லுவார்:

    “இந்த உலகில் பெற்ற தாயும், சொந்த மனைவியும் மட்டுமே, ஒருவன் மீது இரக்கப்பட்டு, வேறு வழியே இல்லாமல், சிறுநீரக தானம் செய்ய முன்வருவார்கள்;

    உங்கள் கணவரின் தம்பியின் சிறுநீரகம் 100% பொருத்தமாகத் தான் இருந்தது.

    ஆனால் ‘பொருத்தமில்லை’ எனச் சொல்லச்சொல்லி என் கால்களில் விழுந்து கெஞ்சி அழுது புலம்பி சொல்ல வைத்ததும் அவரேதான் என்ற உண்மையைப் போட்டு உடைத்து விடுவார், அந்த டாக்டர்.

    இதுபோலவும் முடிவுகள் இருக்கலாம் தானே. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோண்மே சிறந்த கோணம்.அருமை
      நன்றி வைகோ சார்

      நீக்கு
  7. அடடே...

    கவிதாவை மறுபடி அழவைத்து விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  8. இரத்த பாசம் கைவிடாது என்ற கருத்தைத்தரும் நல்ல முடிவு. பாராட்டுகள்! சிறுகதை மன்னர் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ள கதை இப்படியும் நடக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.கதையை பகிர்ந்த அவருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. இந்த முடிவும் நல்லாருக்கு. கொஞ்சம் யூகிக்க முடிந்தது உங்கள் முந்தைய கதையைப் படித்ததும்...மற்ற முடிவுகள் என்னவோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு