தொடரும் தோழர்கள்

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 27, 2017

நடந்ததும் நடக்காததும்!

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.

குஜராத்தி படங்களில் வில்லனாக நடிக்கும் ஃபெரோஸ் வோரா,தன் மகள் இரண்டு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞனை மணக்க விரும்பியபோது,தடையேதும் சொல்லாமல்,மணம் செய்வித்ததோடு,மீண்டும் ஒரு முறை சிறுநீரகம் தேவைப்பட்டால் தன் சிறுநீரகத்தைத் தருவதாக வாக்கும் அளித்தார்.சமீபத்தில் மருமகனின் சிறு நீரகம் பழுதடைந்தபோது,வாக்களித்தபடி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துக் காப்பாற்றினார்.இது செய்தி.

இதுவே உண்மையான நிகழ்வு;அதன் முடிவு.

இதை ஆதாரமாகக் கொண்டு பிறந்ததே நேற்றைய கற்பனை.இப்படியும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. எனவே அது முடிவு இரண்டு.

மூன்று முடிவுகள் என்று நேற்று சொல்லி விட்டதால் இன்னொரு முடிவையும் தேடி எடுக்க வேண்டியதாகி விட்டது.இதோ மூன்றாவது..........

தன்  பெண்ணின் விருப்பத்தை அறிந்த ராமனாதன் தடையேதும் சொல்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார்.உங்கள் அன்புக்குக் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்லதே செய்வான் என்று கூறிவிட்டார்.

திருமணம் நடந்தது.அவர்கள் வாழ்க்கை இன்பமயமாகத்தான் இருந்தது.ராமனாதனுக்கு மருமகனை மிகவும் பிடித்துப் போனது.ஒரு முறை பேசும்போது சொன்னார்”அப்படி நடக்க வேண்டாம்.ஆனால் ஒரு வேளை மீண்டும் ஒரு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்டால்,கவலைப் பட வேண்டாம்.என்னுடைய சிறுநீரகத்தைத் தருகிறேன்.நம் இருவர் ரத்தமும் ஒரே பிரிவுதான்”

மாதங்கள் கடந்தன.

வாழ்க்கை அப்படியே இருக்குமா என்ன?

அசோக்குக்கு மீண்டும் பிரச்சினை

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும்.

கவிதா தந்தை முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து,அசோக்கிடமும் சொன்னாள்.

ஆனால் ராமனாதன் அது பற்றி எதுவும் பேசவில்லை..

மருத்துவரைச் சந்திக்கும்போது உடன் சென்றார் ஆனால் தான் தருவது பற்றி  வாயைத் திறக்கவில்லை.

கவிதாவுக்குப் பெரும் ஏமாற்றம்.

அவள் தர முன் வந்தும் அது சேரவில்லை.

கொடையாளி கிடைக்க சிறிது தாமதம் ஆயிற்று

அது வரை டயாலிசிஸ் செய்யப்பட்டது.

கவிதா தந்தையைத் தவிர்க்கத் தொடங்கினாள்

கொடையாளி கிடைத்து அறுவையும் நடந்தது.

எதற்குமே தந்தையின் உதவியை நாடவில்லை.

எல்லாம் சுபமாக முடிந்தபின் மருத்துவரிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கவிதா சொன்னாள்”அன்பு,பாசம் இல்தெலாம் வெறும் வார்த்தைகள் என்பதை அப்பா எனக்கு உணர்த்தி விட்டார்.முன்பு தானாகவே தான் சிறுநீரகம் அளிப்பதாகச் சொன்னவர்,தேவைப் பட்டபோது நழுவி விட்டார்.என்ன உலகம்.எல்லாமே வேஷம்”

மருத்துவர்,அவர்கள் குடும்ப நண்பரும் கூட.

அவர் சொன்னார்”கவிதா.நீ நினைப்பது தவறு.சில மாதங்களுக்கு முன் உன் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக இங்கு தங்கியிருந்தபோதுதான் அது தெரிய வந்தது.அவரது ஒரு சிறுநீரகம் முழுதும் செயலிழந்து போயிருந்தது.இருந்தும் இப்போது அவர் என்னிடம் அவர் உயிர் போனாலும் பரவாயில்லை மாப்பிள்ளையைக் காப்பாற்றும் வாய்ப்பைக் கொடு என்று கேட்டார்.ஒருவரைக் கொன்று ஒருவரைப் பிழைக்க வைக்க மாடோம் என்று சொல்லி நான் ஆறுதல் சொன்னேன்.அவர் மிக மனமுடைந்து போயிருக்கிறார்.”

நாற்காலியில் அமர்ந்தபடியே முகத்தைப் பொத்தியவாறு உடைந்து அழலானாள் கவிதா.






வெள்ளி, மே 26, 2017

என்னதான் நடக்கும்...?

”அப்பா”

பெண்ணின் குரல் கேட்டுப் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே இறக்கிப் பார்த்தார் ராமனாதன்.

அவர் பெண் கவிதா.

“என்னம்மா”

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்

“அப்பா!அசோக்கும் நானும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டொம்”

“என்னம்மா சொல்றே?இது ஏன் நடக்கக் கூடாதுங்கறதைப் பத்தி அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினேனே.இன்னும் மனசு மாறலியா.”

“மாறாதுப்பா’

திங்கள், செப்டம்பர் 21, 2015

மாயா--ஒரு விளக்கம்!


மாயா!

சென்ற பதிவின்  தலைப்பு.

பதிவின் முடிவில் எனக்கே புரியவில்லை என்று எழுதி படிப்பவர்கள் அனைவரையும் அந்த மனநிலைக்குக் கொண்டு சென்று விட்டேன்.

அவ்வாறு நான் எழுதவில்லையென்றால்,சொல்லப்பட்ட செய்தியை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பர்.

வாசகர்கள் அனைவரும் சூரர்கள்.

இப்பதிவு நிச்சயமாக satire இல்லை

இது ஒரு மனச்சிதைவு நோயாளியின் psychedelic எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடு!

இப்படித்தான் குழப்பமாக இருக்கும்!

நம் பார்வையில் தொடர்பில்லாத பல விஷயங்கள் இருப்பதாகத் தோன்றலாம்.

ஆனால் அவனுக்கு எல்லாம் தொடர்புடையவையே!

இப்போது பதிவின் சில வரிகளை மட்டும் எடுத்துத் தருகிறேன்

//மாயா என்னும் மகாகாலன்!

//எப்போ நடந்தது இந்த அநாசாரம்?

அநாசாரமாய், பர புருஷனுடன்.......

புருஷன் எல்லாம் புருஷனாகி விடுகிறானா?//

//இதற்குப்  பெயர் மனைச் சிதைவு!

சிதைவு!எல்லாம் சிதைந்து போயாச்சு!//

//கத்தி,!யாராவது வாங்கோ .பைத்தியம் கத்தியோட குத்த வரது

வரது! அவன் பெயர் அதுதானே?

அதுதான் உனக்கு இந்த முடிவு.

முடிந்தது எங்கும் ரத்தம்!

 ரத்தம்!விநாசாய ச துஷ்க்ருதாம்!

எல்லாம் மாயா மாயா மாயா!

நான் கடவுள்!//

புரிகிறதா?

அவன் ஏன் மனநோயாளியானான் என்பது?

மனைவி துரோகம் செய்து விட்டாள்


இது உண்மை அல்லது  அவன் எண்ணம்

இருக்கலாம்;இல்லாமலும் இருக்கலாம்!

முன்பே அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கலாம்

எனவே எளிதில் சந்தேகம்.

அவள் தவறு செய்தவள்.

தண்டிக்கப்பட வேண்டியவள்

அவன் தண்டிக்கிறான்

அவன் கடவுள் என்பதே நினைப்பு!

இது ஒரு சிறுகதையாக சொல்லலாம்

நெடுங்கதையாக நீட்டலாம்!

ஆனால் அவன் எண்ண ஒட்டத்தில் வெளிப்படுகையில் இப்படித்தான் இருக்கும்!

எல்லாம் மாயா! 

பிகாசோவின் ஓவியம்போல் என்றார் வே.நடனசபாபதி அவ்ர்கள்.உண்மைதான் பார்த்தால் குழப்பமாக இருக்கும்;ஆனால் உள்ளே பொருளிருக்கும்!


இது அங்கதம் என்றார் சுப்புத்தாத்தா அவர்கள்;நிச்சயமாக இல்லை.ஒரு குழம்பிய மனநிலையின் வெளிப்பாடு!

நான் புகுத்தியிருந்த ஓர் உத்தியைக் கவனித்துச் சொன்னார் ஸ்ரீராம் அவர்கள்--அந்தாதி.

வருகை தந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி!

படித்துக் கருத்துச் சொல்லாமல் விட்டிருந்தாலும் நன்றி!







வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

புள்ளிராஜாவுக்கு............வருமா?



அன்று வேலைக்கு வரும்போது துரைக்கு மனதே சரியில்லை.

உள்ளத்தில் குழப்பம்;ஓர் ஊமைக் கோபம்;வெடிக்கத்தயாரான ஓர் எரிமலை போல இருந்தது உள்ளம்.

ஆனால் அன்று வெளியூர் செல்லவேண்டும்.அதனால் அவன் சீக்கிரமே வந்து விட வேண்டும் என்று சொல்லி விட்டு அவன் முதலாளி அவனுக்கு 500 உரூபாய் வேறு கையில் கொடுத்து அனுப்பினார்.

வியாழன், ஆகஸ்ட் 13, 2015

இன்னும் இருக்கும் சீதக்காதி!




சீதக்காதி என்று ஒரு வள்ளல் இருந்தார்.யார் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் வழங்கியவர்.ஒரு முறை ஒரு பெரிரைச் சந்தித்தபோது அவர் குடும்ப நலம் விசாரிக்க வர் சொன்னார்”பெண்ணுக்கு மணம் முடிக்க வேண்டும்.ஆனால் என்னிடம் பணம் இல்லை.”என்று.உடனே சீதக்காதி பணம் கொடுக்க முன் வந்தார்.பெரியவர் சொன்னார்”இப்போது கொடுக்க வேண்டாம். மாப்பிள்ளை பார்த்தபின் வாங்கிக் கொள்கிறேன்என்று.சில நாட்களுக்குப் பின் பெண்ணுக்கு மாப்பிள்ளை முடிவு செய்த பெரியவர் சீதக்காதியைப் பார்க்க வந்தார்.ஆனால் சீதக்காதி இறந்து விட்டார்.

சனி, ஜூலை 20, 2013

என்ன கொல வெறி?!



ஒரு இளம் தம்பதி பயணம் செய்த கார்  கோர விபத்துக்குள்ளானது .

விபத்தில் கணவனின் முகம் தீக்காயத்தினால் மிகவும் பாதிக்கப் பட்ட.து

காயம் குணமான பின் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஆணிடம் அவன் மிகவும் 
ஒல்லியாக சதைப் பற்றற்று இருப்பதால் சிகிச்சைக்கு அவன் உடலில் இருந்து தோல் எடுக்க முடியாது என்றார்.

அவன் மனைவி உதவ முன் வந்தாள்.

அவள் உடல் பகுதிகளின் சோதனைக்குப்பின் அவள் பின்புறத் தோல் தான்(இடக்கரடக்கல்!) (கிரேசி மோகன் சொன்னால் உட்காரும் இடம்!) அறுவைச் சிகிச்சைக்கு ஏற்றது என 
மருத்துவர் முடிவு செய்தார்.

அவரும் மனைவியும் கணவனிடம்  இதைச் சொன்னபின் வேறு யாரிடமும் சொல்ல மாட்டோம் என அவனுக்கு  உறுதியளித்தனர்.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

அதன் பின்  அவனைப் பார்ப்பவர்கள் எல்லாம் வியந்தனர்.

அவன் முன்னை விட இளமையாகவும் முகப்பொலிவுடன் தோற்றமளித்தான்.

ஒரு நாள் தனிமையில் அவன் மனைவியிடம் சொன்னான்”அன்பே!நான் உனக்கு  நன்றிக்
கடன்பட்டிருக்கிறேன்;இதற்கு ஈடாக நான் என்ன கொடுப்பது?”

அவள் சொன்னாள் “ஒன்றும் வேண்டாம் ;உன் தாய் உன் கன்னத்தில் முத்தமிடும்போது நான் அடையும் மகிழ்ச்சியே போதும்!”

என்ன கொலவெறி!!

வெள்ளி, ஜூன் 07, 2013

பிறக்கப் போகும் குழந்தை ஆணா?பெண்ணா?--இது உங்கள் கையில்!



இது ஒரு சிறிய பதிவு!

நம் நாசியில் மூச்சு மாறி மாறி இயங்குவது உங்களுக்குத் தெரியும்.

வலது புறம் சிறிது நேரம்,இடது புறம் சிறிது நேரம் என மாறி மாறியே சுவாசம் வருகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு திருமூலர்,  பிறக்கும் குழந்தையின்  பால் என்னவாக இருக்கும் எனத் தீர்மானிக்கிறார்,

புணர்ச்சியின்போது,ஆணின் மூச்சு வலப்பக்க நாசியில் (இதை சூரிய கலை என்று சொல்வார்கள்)இயங்குமானால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இடப்பக்க நாசியில் இயங்கினால்(இதைச் சந்திர கலை என்று சொல்வார்கள்)  பெண் குழந்தையாகவும் இருக்கும்!

பிராண வாயுவுடன் அபான வாயு எதித்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்!

அபூர்வமாக,இரு பக்கமும் மூச்சு இயங்கினால் குழந்தை ஆணுமின்றிப் பெண்ணுமின்றிப் போகும் .

இது திருமூலர் கூற்று,

அந்தப் பாடல்.........
”குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
 குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
 குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
 குழவி அலிஆகும்கொண்ட காலொக்கிலே” (திருமந்திரம்-482)

புதன், மார்ச் 06, 2013

கண் கலங்க வைத்தவர்கள்!



என் நேற்றைய பதிவில், முன் தினம் கண் மருத்துவமனைக்குச் சென்ற அனுபவத்தைச் சிறிது நகைச்சுவை சரக்குச் சேர்த்துச் சொல்லியிருந்தேன்.

ஆனால் நேற்றும் இன்றும் நடந்தவைகளை நடந்தவைகளாகவே சொல்லப்போகிறேன், கூடுதல் , குறைத்தல் இன்றி.

அன்று ஃபோட்டோ எடுத்தபின் மறுநாள்    வந்து அதைப் பெற்றுக்கொண்டு விழித்திரை வல்லுநரையும்,பின் பெண்மருத்துவரையும் பார்க்கச் சொல்லி விட்டார்கள்.

அவர்கள் சொன்னபடி மறுநாள்,அதாவது நேற்று மாலை 5 மணிக்கு அங்கு சென்றேன்.

ஃபோட்டோ பிரிண்ட் எடுக்கப் போயிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடும் என்றும் சொன்னார்கள்.

காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் விழித்திரை வல்லுநரும் வந்து விட்டார்;ஆனால் படம் வரவில்லை,

5.30க்கு விசாரித்தேன்;இதோ வந்து விடும் என்றார்கள்

மணி 5.45;மீண்டும் அதே பதில்.

என்ன நிலைமை,எப்போது வரும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

அதிகமாகக் கோபம் வராத நான் கோபம் அடைந்தேன்

“நேற்று மாலை எடுத்படம் இன்று மாலை இன்னும் தயாரஇல்லை.உங்கள் மருத்துவ மனை இலாகாக்களுக்குள் ஒத்து இயங்கல் இல்லை;பொறுப்பாகப் பதில் சொல்ல யாருக்கும் தெரியவில்லை.நான் பின் எப்போதாவது வந்து படத்தை வாங்கிக் கொள்கிறேன்.நாளை வேறு மருத்துவரைப் பார்க்கிறேன்;உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

வீட்டுக்கு வந்த பின் மீண்டும் தொலை பேசி அவர்கள் சேர்மனின் மின்னஞ்சல் முகவரி கேட்டேன்;எதற்கு என்று கேட்க,விஷயத்தைச் சொல்லி ,புகார் செய்யப்போகிறேன் எனச் சொன்னேன்.முகவரி கொடுத்தார்கள்.

பத்து நிமிடத்துக்குப் பின்.தொலைபேசி ஒலித்தது;மருத்துவ மனை அலுவலக மேலாளர் பேசினார் ;

நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்.உடன் வந்தால் முடித்து விடலாம் என்றார்.

நான் அவர்கள் விருப்படியெல்லாம் என்னால் வர முடியாது என்றேன்.

நாளைக் காலை வர முடியுமா என்றார்;ஒப்புக் கொண்டேன் 11 மணிக்கு வருவதாக.

இன்று காலை 10 மணிக்குத் தொலை பேசினேன்.எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.

சரியாக 11 மணிக்கு அங்கிருந்தேன்.

மேலாளர் என்னைக் கை குலுக்கி வரவேற்று ஒரு பெண் ஊழியரை அழைத்து இவர் உங்கள் வேலையை முடித்துத் தருவார் என்றார்

அந்த ஊழியர் எந்தக் காத்திருப்பும் இன்றி என்னை விழித்திரை வல்லுநரிடமும்பின் மற்ற மருத்துவரிடமும் அழைத்துச் சென்றார்.மருத்துவர் ,நேற்று நடந்ததைக் கேள்விப்பட்டேன் சில நாட்கள் இப்படித்தான் எல்லாமே தவறாகி விடுகிறது, வருந்துகிறேன் என்று சொல்லவும் ,நான் சங்கடப் பட்டேன்.

அவர் எழுதிக் கொடுத்த குறிப்புடன் கீழே வந்த பின் அந்த ஊழியர் வேண்டிய மாத்திரை
களை வாங்கிக் கொடுத்தார்.(பணம் நான்தான் கொடுத்தேன்!)

மேலாளரும் அந்த ஊழியரும் சேர்ந்து எனக்கு விடை கொடுத்தனர்.

வெளியே வரும்போது நேரம் 11.25!

நான் உள் நுழைந்தது முதல் அனைவரும்,மருத்துவர் உட்பட காட்டிய பணிவு அவர்கள் வருத்தம் தெரிவித்த முறை இதெல்லாம் என்னை யோசிக்க வைத்தன.....

நான் அப்படி விரைவில் கோபம் கொண்டிருக்கக் கூடாதோ?

தவறு எங்குதான் நடக்கவில்லை?

கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணங்கள் எத்தனையோ இருக்கலாம்.

என் கோபத்தினால்தான் இன்று எல்லாமே நன்றாக நடந்தது என்று பெருமைப் படவா?

 இல்லை  அவர்களின் இன்றைய செயல் முறை பார்த்து நேற்று நான் விரைவில் கோபம் கொண்டதற்காக வெட்கப்படவா?

தெரியவில்லையே!

டிஸ்கி:இதுவே ஒரு அரசு நிறுவனமாக இருந்தால் ஒருவரும் என்னை ஒரு பொருட்டாகவே எண்ணியிருக்கப் போவதில்லை,ஆனால் எல்லாத் தனியார் நிறுவனங்களும் இவ்வளவு விரைவாகவும் பண்புடனும் தவறைச் சரி செய்வார்களா என்ன?அந்த வகையில் அம்மருத்துவ மனைக்கு ஒரு சல்யூட்!