என் நேற்றைய பதிவில், முன் தினம் கண் மருத்துவமனைக்குச் சென்ற அனுபவத்தைச் சிறிது நகைச்சுவை சரக்குச் சேர்த்துச்
சொல்லியிருந்தேன்.
ஆனால் நேற்றும் இன்றும் நடந்தவைகளை நடந்தவைகளாகவே சொல்லப்போகிறேன், கூடுதல்
, குறைத்தல் இன்றி.
அன்று ஃபோட்டோ எடுத்தபின் மறுநாள் வந்து அதைப் பெற்றுக்கொண்டு விழித்திரை வல்லுநரையும்,பின்
பெண்மருத்துவரையும் பார்க்கச் சொல்லி விட்டார்கள்.
அவர்கள் சொன்னபடி மறுநாள்,அதாவது நேற்று மாலை 5 மணிக்கு அங்கு
சென்றேன்.
ஃபோட்டோ பிரிண்ட் எடுக்கப் போயிருப்பதாகவும் சிறிது நேரத்தில்
வந்துவிடும் என்றும் சொன்னார்கள்.
காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில் விழித்திரை வல்லுநரும் வந்து விட்டார்;ஆனால்
படம் வரவில்லை,
5.30க்கு விசாரித்தேன்;இதோ
வந்து விடும் என்றார்கள்
மணி 5.45;மீண்டும் அதே பதில்.
என்ன நிலைமை,எப்போது வரும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.
அதிகமாகக் கோபம் வராத நான் கோபம் அடைந்தேன்
“நேற்று மாலை எடுத்தபடம் இன்று மாலை இன்னும்
தயாரக இல்லை.உங்கள் மருத்துவ மனை இலாகாக்களுக்குள் ஒத்து இயங்கல் இல்லை;பொறுப்பாகப் பதில் சொல்ல யாருக்கும் தெரியவில்லை.நான்
பின் எப்போதாவது வந்து படத்தை வாங்கிக் கொள்கிறேன்.நாளை வேறு மருத்துவரைப்
பார்க்கிறேன்;உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டு
வீடு திரும்பினேன்.
வீட்டுக்கு வந்த பின் மீண்டும் தொலை
பேசி அவர்கள் சேர்மனின் மின்னஞ்சல் முகவரி கேட்டேன்;எதற்கு என்று கேட்க,விஷயத்தைச்
சொல்லி ,புகார் செய்யப்போகிறேன் எனச் சொன்னேன்.முகவரி கொடுத்தார்கள்.
பத்து நிமிடத்துக்குப் பின்.தொலைபேசி
ஒலித்தது;மருத்துவ மனை அலுவலக மேலாளர் பேசினார் ;
நடந்த நிகழ்வுக்கு வருத்தம்
தெரிவித்தார்.உடன் வந்தால் முடித்து விடலாம் என்றார்.
நான் அவர்கள் விருப்படியெல்லாம் என்னால்
வர முடியாது என்றேன்.
நாளைக் காலை வர முடியுமா என்றார்;ஒப்புக் கொண்டேன் 11 மணிக்கு
வருவதாக.
இன்று காலை 10 மணிக்குத் தொலை
பேசினேன்.எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.
சரியாக 11 மணிக்கு அங்கிருந்தேன்.
மேலாளர் என்னைக் கை குலுக்கி வரவேற்று
ஒரு பெண் ஊழியரை அழைத்து இவர் உங்கள் வேலையை முடித்துத் தருவார் என்றார்
அந்த ஊழியர் எந்தக் காத்திருப்பும்
இன்றி என்னை விழித்திரை வல்லுநரிடமும்பின் மற்ற மருத்துவரிடமும் அழைத்துச்
சென்றார்.மருத்துவர் ,நேற்று நடந்ததைக் கேள்விப்பட்டேன் சில நாட்கள் இப்படித்தான் எல்லாமே
தவறாகி விடுகிறது, வருந்துகிறேன் என்று சொல்லவும் ,நான் சங்கடப் பட்டேன்.
அவர் எழுதிக் கொடுத்த குறிப்புடன் கீழே
வந்த பின் அந்த ஊழியர் வேண்டிய மாத்திரை
களை வாங்கிக் கொடுத்தார்.(பணம் நான்தான் கொடுத்தேன்!)
மேலாளரும் அந்த ஊழியரும் சேர்ந்து
எனக்கு விடை கொடுத்தனர்.
வெளியே வரும்போது நேரம் 11.25!
நான் உள் நுழைந்தது முதல் அனைவரும்,மருத்துவர்
உட்பட காட்டிய பணிவு அவர்கள் வருத்தம் தெரிவித்த முறை இதெல்லாம் என்னை யோசிக்க
வைத்தன.....
நான் அப்படி விரைவில் கோபம் கொண்டிருக்கக்
கூடாதோ?
தவறு எங்குதான் நடக்கவில்லை?
கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணங்கள் எத்தனையோ இருக்கலாம்.
என் கோபத்தினால்தான் இன்று எல்லாமே
நன்றாக நடந்தது என்று பெருமைப் படவா?
இல்லை அவர்களின் இன்றைய செயல் முறை பார்த்து நேற்று
நான் விரைவில் கோபம் கொண்டதற்காக வெட்கப்படவா?
தெரியவில்லையே!
டிஸ்கி:இதுவே ஒரு அரசு நிறுவனமாக
இருந்தால் ஒருவரும் என்னை ஒரு பொருட்டாகவே எண்ணியிருக்கப் போவதில்லை,ஆனால் எல்லாத்
தனியார் நிறுவனங்களும் இவ்வளவு விரைவாகவும் பண்புடனும் தவறைச் சரி செய்வார்களா என்ன?அந்த
வகையில் அம்மருத்துவ மனைக்கு ஒரு சல்யூட்!