தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 21, 2013

சூரிய புத்திரி...(மூன்றாம் பகுதி)



அம்மா வழி நெடுக அனத்திக்கொண்டே வந்தாள்.

யாருடா போன் பண்ணா..?அவ எங்கே இருக்காளாம்..?

டில்லி பாபுன்னு ஒருத்தன் பேசினான்.பீச்சுலே இந்தக் கத்திரி வெயிலில ஹாய்யாப் படுத்துண்டி ருக்காளாம் ஒம் பொண்ணு..”

அவ ஏண்டா அங்க போனா..?சமுத்திரத்தில விழுந்திருப்பாளோ..”

அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா.கேட்டாச்சு..பீச் மணல்ல சூரிய நமஸ்காரம் பண்ணிண்டு இருக்கா.. கருமம்..” தலையில் அடித்துக் கொண்டேன்.

ஈச்வரா..இது என்ன சோதனை..இவளுக்கு ஏன் இப்படியெல்லாம் புத்தி போறது…” அம்மாவுக்கு அழுகை அடக்க முடியவில்லை.”ரெண்டு மூணு வருஷமா குல தெய்வத்துக்கு பூஜை பண்ணலை.. அதான் ..தெய்வக் குத்தமா இருக்கும்..”

கோடை வெயிலுக்குப் பயந்து அந்த பட்டப்பகலில் கடற்கரை முழுக்கக் காலியாயிருக்க உழைப்பாளர் சிலைக்குப் பின் பக்கம் மட்டும் ஒரு ஐம்பது அறுபது பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.ஆட்டோவைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அம்மாவோடு கூட்டத்தை விலக்கிவிட்டு  உள்ளே புகுந்தேன்

அங்கே ரோகிணி மல்லாக்க அனலையும் பொருட்படுத்தாமல்  ஏதோ   நிலவொளியை அனுபவிப்பவள் போல் படுத்துக் கிடந்தாள்.நான் அருகில் போய் மண்டியிட்டு அவளைத் தொட்டேன்.

என்னடிது..?நாங்கள்ளாம் உன்னைக் காணோமேன்னு துடிச்சிண்டிருக்கோம்..நீ இங்கே என்ன பண்ணிண்டிருருக்கே..எழுந்திரு..ம்.. “என்று அவளைத் தூக்கி உட்கார வைத்தேன்

சூரியனைப் பாத்துண்டே படுத்திண்டிருந்தேண்டா..எவ்ளோ ஆனந்தமாயிருந்தது தெரியுமா..?” உடம்பு நெருப்பாய் சுட்டது.கண்களில் நீர் கோத்திருந்த்து.

கூட்டத்தினரைப் பார்த்துப் பொதுவாகக் கேட்டேன்.”இங்க டில்லி பாபுங்கறது யாரு எனக்குப் போன் பண்ணினது..”

நாந்தான் பிரதர்  லுங்கியும் முண்டா பனியனும் அணிந்திருந்த ஒருவன் முன் வந்து எனக்கு 
சல்யூட் வைத்தான்.

ரொம்ப தேங்க்ஸ்ங்க….போன் பண்ணதுக்கு

டேங்க்ஸ் எல்லாம்  எதுக்குப்பா..படா பேஜார் பண்ணிடுச்சுப்பா உன் தங்கச்சி

ரொம்ப சாரிங்கஎன்றேன் தர்ம சங்கடத்துடன்.

எவ்ளோ பேர் சொல்லியும் எந்திக்கவே மாட்டேன்னுடுச்சு..அப்பாலே நான்தான் நைஸா அதும் பையிலே  குடாஞ்சு பாத்தேம்பா..உங்க வீட்டு நமபர் எய்தின காயிதம் இருந்தது, அம்மாம் தொலவு  போயி போன் பண்ணிகினேன்…”என்று எழிலகம் இருக்கும் திசையைக் காண்பித்தான்,

கூட்டத்தில் இன்னொருவன்சரியான மென்டல் கேஸ்பா இது..இங்க கால வைக்கவே முடியலே.. இது மணிக்கணக்காப் படுத்துக்கிணு எந்திருக்க மாட்டேங்குதுஎன்றான்.

அவன் என் தங்கையை மென்டல் என்றது எனக்குச் சுருக்கென்று தைத்தாலும் அதைக்காதில் வாங்கிக் கொள்ளாத மாதிரி இருந்து விட்டேன்.

டில்லி பாபு அவனை அடிப்பது போல் போய்யேய் பேமானி..எதுக்குடா மென்டலுங்கறே.. அய்யரு மனசு இன்னா பாடுபடும்என்னை நோக்கி நீ ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காதேப்பா என்றான்.

“காத்தாலேருந்து இங்கயாடி இருக்கே?” அம்மா கலவரத்துடன் கேட்டாள்.

”ஆமாம்மா”

“சிநேகிதி ஆத்துக்குப் போறேன்னு சொல்லிட்டுதானே கிளம்பினே?”

“பீச்சுக்குப் போறேன்னு சொன்னா நீ விட மாட்டயே.அதான் பொய் சொன்னேன்”

“எதுக்குடி இந்தக் கொளுத்தற வெயில்ல பீச்சுக்கு வரணும்?”

“இங்கேருந்து பார்த்தாதான் இந்த பரந்த ஆகாசமும் சூரியனும் நன்னா தெரியறது...கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன்..அப்புறம் படுத்துண்டேன்.சூரியனைப் பார்க்கப் பார்க்க எவ்ளோ பரவசமா இருக்கு தெரியுமாம்மா?நீயும் படுத்துண்டு பாரேன்..”என்று அம்மாவின் கைகளைப் பிடித்து இழுத்தாள்

“நாசமாப் போச்சு..”அம்மா மீண்டும் அழத்தொடங்கினாள்”இவளுக்கு சித்தபிரமைதான் பிடிச்சிருக்கு..இல்லேன்னா ஒருத்தி இந்த கத்திரி வெயில்லே சுடற மணல்லே விழுந்து கிடப்பாளோ...ஈச்வரா..இது என்ன சோதனை..”

“சரி..வா போகலாம் ”என்றபடி என் தங்கையைக் கையைப் பிடித்து எழுப்பினேன்.அவள் ஆட்டையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டி விட்டேன்.அவளது கைப்பையை எடுத்துக் கொண்டேன்.

டில்லி பாபு கையில் ஐம்பது ரூபாயைத் திணித்தேன்.”ரூபால்லாம் எதுக்கு பிரதர்..”என்றபடி வாங்கிக் கொண்டான்.

ரோகிணியைத் தோளில் அணைத்தபடி கூட்டத்தை விலக்கி விட்டு அம்மாவோடு காத்திருந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

வரும் வழியில் “சஷ்டிக்கவசம் பாராயணம் பண்ணினா எல்லாம் சரியாயிடும்”--- தனக்குத் தானே அம்மாசொல்லிக் கொண்டாள்

“கந்தர் ஷ்டிக்கவசம் எதுக்கும்மா?ஆதித்ய ஹ்ருதயம் சொல்லு தினமும்..வால்மீகி ராமாயணத்துல யுத்த காண்டத்திலே நூத்து ஏழாவது சர்க்கம்தான் இந்த ஸ்லோகம்... தெரியுமா..” என்றாள் ரோகிணி.

இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று பயங்கலந்த ஆச்சரியத்தில் அவளைப் பார்த்தேன்.

ஆட்டோ டிரைவர் திரும்பி வினோதமாகப் பார்த்தார்.

“வாயை மூடிண்டு வாடி..”என்றாள் அம்மா.சூரியன்,சூரியன்னு இப்படி அலையறாளே... கண்ணெல்லாம் எப்படி செவந்திருக்கு பாரு...யாராவது பில்லி சூனியம் வைச்சுட்டாளா...?”

ரோகிணிக்கு என்ன மாதிரி பிரச்சினை என்று என்னால் உடனடி முடிவுக்கு வர முடியவில்லை 

(தொடரும்)

(இரண்டு விரல்களால் அதிக நேரம் தட்டச்ச முடியவில்லை .எனவே தொடரும் போட வேண்டியிருக்கிறது)

5 கருத்துகள்:

  1. எங்களுக்கும் ரோகிணிக்கு என்ன பிரச்சினை எனத்தெரியவில்லை. காத்திருக்கிறேன் உண்மையை அறிய!

    பதிலளிநீக்கு
  2. தொடர்கிறேன் ஆவலுடன்...

    முதலில் உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் சார்...

    பதிலளிநீக்கு
  3. முதல் இரண்டு பகுதிகள் படிக்க வில்லை! அதற்குள் கரண்ட் கட்! பின்னர் படித்துவிட்டு கருத்திடுகிறேன்! சுஜாதா கதை படிப்பது போல ஒரு நினைவை ஏற்படுத்தியது இந்த பகுதி! நன்றி!

    பதிலளிநீக்கு