தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 20, 2013

சூரிய புத்திரி--தொடர்கிறாள்



சூரிய புத்திரி என்ற தலைப்பில் ஒரு கதையின் முதல் பகுதி 22-12-2012 அன்று வெளியிட் டேன்.

காரணமே இன்றி அடுத்த பகுதி தாமதமாகி விட்டது.

இன்று அதன் தொடர்ச்சி..........

ரோகிணிக்கு சூரியன் மேல் ஒரு பிரேமை.சினிமா பைத்தியம்,கிரிக்கெட் பைத்தியம்  போல் என் தங்கை சூரியப் பைத்தியம்.மணிக்கணக்கில் மொட்டை மாடியில் நின்றபடி சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.வடம் உலர்த்துகிறேன்,மிளகாய் உலர்த்துகிறேன் என்று மாடியே றினால், அவ்வளவுதான்,வெயிலோடு ஐக்கியமாகி விடுவாள்.கால் பதிக்க முடியாத கொதிக்கும்  தரையில், ஆனந்தமாக நின்று கொண்டிருப்பாள்.நாங்கள் கையைப்பிடித்து இழுத்தால்தான் அரை மனதோடு படியிறங்குவாள்.

“இருடா...இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டு வரேனே.வெயில்லே நிக்கறது எவ்ளோ சுகம்?”

“உடம்பெல்லாம் வேர்வை வழியறது..எறங்கி வாடி கீழே..”

“வேர்வை என்ன தெரியுமோ...சூரியன் தெளிக்கற பன்னீர்டா”

“பித்துக்குளி மாதிரி உளறாதே.சன் ஸ்ட்ரோக் வந்துடும்”

“அதெல்லாம் புரளி.சூரியன் யாரையும் அழிக்கணும்னு நினைக்கவே மாட்டான் இந்த உலகம்  இயங்கறத்துக்கு ஆதார சக்தியே அவன்தான்.சூரியன்தான் ஆதி..அவன்தான் மூலம் ..தெரியுமாடா...”என்று பிதற்றுவாள்

“உனக்குப் பைத்தியம்தாண்டி பிடிச்சிருக்கு...வா..கீழே போகலாம்..காலெல்லாம் கொதிக்கிறது"

“எனக்கு சுடவேயில்லியேடா.அதுக்குத்தான் சூரியனை நேசிக்கக் கத்துக்கோன்னேன். .அவனைப் பாத்துண்டேயிருந்தா உடம்புல ஒரு புது சக்தி பிறக்கும்...”

“உன்னோட பேசிப்பேசி இருக்கற சக்தியும் போயிடும் போலிருக்கு...”என்று ரோகிணியைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

இவள் இந்தத் தேதியிலிருந்துதான் இப்படி இருக்கிறாள் என்றுதீர்மானிக்க முடியவில்லை. நானும் அம்மாவும் கடந்த நான்கைந்து மாதங்களாகத்தான் கண்காணிக்கத் தொடங்கினோம்
சித்திரை மாதம் அக்னி நட்சத்திரத்தில்  ஒரு நாள் காலையில் ரோகிணியைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்தோம்.கல்லூரித்தோழி  வீட்டுக்குப்போய் வருவதாகச் சொல்லி விட்டுச் சென்றவள் நெடு நேரமாகியும் திரும்பவில்லை.அவளுடைய சிநேகிதிகள் விட்டுக்குப் போய் விசாரித்தோம். எங்கேயும் இல்லை.போலீஸில் சொல்லலாமா என்று ஆலோசித்தோம்இதற்கு முன்னால் இப்படி எங்குமே சென்றதில்லை.ஒரே கலவரமாக இருந்தது.எந்த முடிவுக்கும் வர முடியாமல் மதியம் வரை காலம் தாழ்த்தினோம்!

பன்னிரண்டரை மணிக்கு போன் அடித்தது .ஓடிப்போய் எடுத்தேன்.யாரோ அறிமுகமில்லாத நபர் பேசினார்

“ரோகினி வூடாபா?”குரலிலேயே சாராய நெடி வீசியது!

”ஆமா..நீங்க யாரு..எங்கேருந்து பேசறீங்க..”என்றேன் படபடப்புடன்.

“நான் டில்லி பாபு பேசறேம்பா.பீச்சுலே ஒரு பொண்ணு காலலேந்து பட்துக்கினு கீதுபா”

“பீச்சா..என்ன சொல்றீங்க..ஒண்ணும் புரியலையே..”எனக்கு இதயத்துடிப்பு அதிகமாகி விட்டது.அம்மா என்னருகில் வந்து பயத்துடன் விழித்தாள்.

”மெரினா பீச்சுலே ஒலப்பாலிங்க செலைக்குப் பின்னால ஒரு பெண்ணு மல்லாக்கா கெடக்குதப்பா...பேரு கேட்டா ரோகிணின்னு சொல்லுதப்பா...”

“தண்ணியில மூழ்கிட்டாளா என்றேன்,அதிர்ச்சியுடன் ஏதோ கற்பனையில்

“அதெல்லாம் ஒண்னுமில்ல.மணல்ல பட்துக்குனு கண்கொட்டாம சூர்யனைபாத்துக்கினுக் கீது.எந்திரின்ன எந்திரிக்க மாட்டேங்குது.யார் சொல் பேச்சையும் கேட்க மாட்டேங்குது.”

“இந்த போன் நம்பர் எப்படிக் கெடச்சது”

” அதும் பையில இந்த நம்பர் எய்தின காயிதம் இருந்துதா..அதான் போன் பண்ணேன்.
பப்ளிக் பூத்துலேந்து பேசுறேன்.நீ யாருபா பேசறது...”

“நான் அவளோட அண்ணன்தான் பேசறேன்.நீ...நீங்க அவளை எப்பப் பாத்தீங்க?”

“காலைலே பத்து மணிலேந்து அது இங்கதாம்பா கீது...ஒட்னே வந்து இட்டுக்கினு போப்பா...”

“இதோ வந்துட்டேன்..’

அம்மாவை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் கடற்கரைக்கு விரைந்தேன்.

(தொடரும்)




14 கருத்துகள்:

  1. தங்களின் முதல் பதிவே மறந்துவிட்டது. திரும்ப அதைப் படித்துவிட்டுத்தான் இந்த பதிவைப் படித்தேன். ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது ‘சூடு’ பிடித்திருக்கிறது.காரணம் தலைப்பு என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் முடிக்க முய்ற்சி செய்கிறேன்.
      நன்றி சார்

      நீக்கு
  2. சூரிய புத்திரி சுவாரசியமாகப் போகிறது.இப்பகுதியின் ஆரம்பம் பால குமாரனின் கதையைப் படிப்பது போன்ற அருமையான உணர்வை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  3. சன் டிவி சீரியலோ என நினைத்து வந்தேன் கதை அருமை

    பதிலளிநீக்கு

  4. “வேர்வை என்ன தெரியுமோ...சூரியன் தெளிக்கற பன்னீர்டா”//

    நீண்ட நாள் காத்திருக்கவைத்து மண்டைகாயவைத்துவிட்டது பதிவு ..

    கோவையில் ஒருவர் கொதிக்கும் எண்ணையில் பல மூலிகைகளைக்கலந்து
    வாணலியில் வெறும் கைகளால் கரண்டி உபயோகிக்காமல் வடை சுடுவார் ...

    அதிசயத்துடன் அவர் இல்லத்தில் சென்று அவரைப் பார்த்து வந்தோம் ..
    மதிய வேளையில் சுடும் தகரத்தில் படுத்தவாறு கண்கொட்டாமல்
    சூரியனை பார்த்தவாறு சூரிய யோகா செய்தவாறு இருந்தார் ..

    பதிலளிநீக்கு
  5. தொடருங்கள் திகிலை பித்தரே...

    பதிலளிநீக்கு
  6. முதற் பகுதி படிக்க வேண்டிய தேவையே இல்லை! இப்பகுதியே அதையும் சொல்லிவிடுகிறது! சரளமான நடை! தொடருங்கள் தொடர்வேன்!

    பதிலளிநீக்கு