தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

நாயுள்ளம்(நிறைவுப்பகுதி)




                     நாயுள்ளம்(நிறைவுப்பகுதி)
                                                                 




                                                      குட்டி டாமி                                                                                               
தன்  குட்டி  எஜமானனை  பிரிந்த  டாமி ஒரு   வாரம்  சரியாக  சாப்பிடவில்லை. 

பாதுகாப்புக் கோணத்தில்  டாமி  நடராஜனுக்கு  உறு  துணையாக  இருந்தது.   முழு  வளர்ச்சியை  அடைந்த  டாமியை கையாள  நடராஜன்  இப்போதெல்லாம் கொஞ்சம்  அதிகமாகவே  சிரமப்பட்டார்.  பேரன்  யூ.எஸ்  சென்ற பின் டாமி      சம்பந்தப்பட்ட   பிரச்சினைகள் விஸ்வரூபம்  எடுக்க ஆரம்பித்தன.  வித்யாவும்  நடராஜனும் தங்கள்  திவ்ய தேச யாத்திரைகளை தொடர  விரும்பினர்.  74 ஸ்தலங்களை  அவர்கள்  ஏற்கனவே தரிசித்தாகிவிட்டது.    முக்தி நாத்  யாத்திரை நடராஜன்  தம்பதியினரை வெகுவாக கவர்ந்தது.  டாமியின்  தேவைகளை  பூர்த்திசெய்யவேண்டி, தங்களது  நியாயமான   ஆசைகளை விட்டு கொடுப்பது வேண்டாத வேலை என  தோன்ற ஆரம்பித்தது.  டாமியை  யாருக்காவது  கொடுத்துவிடலாமா என்ற எண்ணம்  மேலோங்க  ஆரம்பித்தது.

வருணுக்கு  கொடுத்த  வாக்கை  மீறத் தயக்கமாக  இருந்தது.  டாமியை  ஒரு  நல்ல எஜமானனிடம் ஒப்படைத்துவிடலாம்  என்ற முடிவு படிப்படியாக  வென்றது.  அசைவம்  தின்னக்  கூடிய நாயை டாமி  என்ற பெயரில் சைவமாக வளர்த்ததற்கு  நடராஜன்  சில  சமயம்  வருந்தியதுண்டு.  ஆயினும் டாமி  சைவமாகவே தொடரட்டும்  என்ற எண்ணமே  வலுவடைந்தது.  ஃபேஸ்  புக்கில் டாமியின்  புகைப்படங்களைப் பார்த்து  தொலைபேசியில்  தொடர்பு  கொண்ட  பலருள்  பம்மல்  பாஷ்யம் ஐயங்காரின்  பையன்  வெங்கடேசன் (இரண்டாவது  வருட   பி.ஈ)  நடராஜனின் அழைப்பைப்  பெற்று  டாமியை  நேர்காண வந்தான். 

டாமியின் ஆஜானுபாகுவான  உருவத்தை  எதிர்கொண்ட  வெங்கி, ஒரு  கணம்  திகைத்தான்.  



ஃபோட்டோல இவ்வளவு  பெருசாத்  தெரியலையே நடராஜன்  சிரித்தார்.          

தன்னால்  டாமியை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்ற  நியாயமான  அச்சத்தைத் தயக்கத்துடன் வெளியிட்டான்.  வெங்கி வந்தவுடனேயே டாமியின் அருகில்  நெருங்குவதற்கு தேவையான  சில  அன்பு  கட்டளைகளை நடராஜன்  விளக்கி இருந்தார். 

வெங்கி  தன்னை  சுதாரிதாரித்துக் கொண்டு அவனை  அன்புடன்  வரவேற்ற டாமியின்  நட்பை நொடிப்பொழுதில் வென்றான். வெங்கியின்  கட்டளைகளை  டாமி  சிரமேற்கொண்டு நிறைவேற்றியது.   மறு  நாள்  வந்து டாமியை  கூட்டிச் செல்வதாக உறுதி  அளித்து விடைபெற்றான் வெங்கி. 
 
டாமி வாலை  ஆட்டிக்கொண்டு  விடை கொடுத்தது.  அதன்  பின்  நடராஜன்  மனதில்  எழுந்த  கேள்விகள் பல.  ஆனால் அன்பு, அறிவு,  பொறுப்புள்ள இளைஞனிடம் நாய்  ஒப்படைக்கப் படுவதைக்குறித்து நடராஜன்  நிம்மதி  அடைந்தார். 

அன்று  மாலை  ஜெகந்நாதனிடம்  வெங்கி  விஜயத்தை  விவரித்தார்.

டாமியை  அனுப்பிட்டு நீயும்  வித்யாவும்  ரொமப  வருத்தப் படபோறீங்க

எல்லாத்தையும்  யோசித்துத்தான் இந்த  முடிவுக்கு  வந்தோம்

நாளைக்கு  வெங்கி  வந்து டாமியை  கூட்டிக்கொண்டு  போகும்  போது  ஏதாவது பிரச்சினை  பண்ணித்துன்னா

வெங்கியின்  வாசனை  டாமிக்கு  புடிச்சிருக்கு.  பிரச்சினை  ஒண்ணும்  இருக்காது.   வருணை  நினச்சாதான் பயமாயிருக்கு. தான்  இந்தியா வரும்  போது டாமி  வீட்டில்  இல்லைன்னா வேற மாதிரி வருணை பாப்பேங்கன்னு சவால்னா  விட்டிருக்கான்!.

அவன்  டாமியை  விட்டு  யூ.எஸ்  எப்பப் போனானோ அப்பவே  தன்னை  பிரிவுக்கு  தயார் பண்ணின்டான்.  அதை  பத்தின கவலையை விடு  என்று  ஆறுதலுக்காக்  ஜெகந்நாதன்  சொன்னார்.

நடராஜனை  வழி  அனுப்பிவிட்டு  நீண்ட  சிந்தனையில்  ஆழ்ந்தார்.

உறவு, பிரிவு, இன்பம் துன்பம்,   ஜனனம்  மரணம் இவைகளின்  கோர்வைதானே ஜனனத்தில்  தொடங்கி  மரணத்தில்  முடியும் மண்ணுலக  வாழ்க்கையின்  சாராம்சம்.   வாழ்க்கையை  முழுமையாக  அனுபவிக்க உறவை  அணைத்து, பிரிவை உணர்ந்து, இன்பத்தில்  திளைத்து, துன்பத்தில்  மூழ்கி,  மரணத்தை  அறிந்து  செயல் படும்  ஞானம் வேண்டும்.  வாழ்க்கைதந்த  பாடங்கள் அவரை  சில  சமயம் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தால்  போதும்  என்று  நினைக்கும்  அளவிற்கு  பலவீனப் படுத்தியது  உண்டு.  ஆனால், அப்படி இருக்க முடிவதில்லை  என்பது  தான்  நிஜம்.  இன்னும்  கற்றுக்கொள்ளவேண்டிய  பாடங்கள்  எத்தனையோ?!

எஜமானர்களைப்  பிரிந்து துயரத்தில்  ஆழப்போகும்  டாமிக்காக  சிறிது பரிதாபப்பட்டார்.  டாமி  நடராஜனின்  முழு நேர  கவனத்தை  தன்  சேவைக்கு  உபயோகபடுத்திக்கொண்டது.  தன்னை முழுவதுமாக அக்குடும்ப காவலுக்காக அர்ப்பணித்தது.  டாமி  செலுத்திய  அன்பு  அப்பழுக்கற்றது.  அதை எல்லாம் மீறி டாமிக்கு  எஜமான மாற்றம்  நடைபெறப்  போகிறது.    டாமிக்கு  அஷ்டமத்தில்  சனியோ?!  நாய் பாடுபட  போகிறது.

மறு  நாள் ஞாயிற்று கிழமை.    பணி  ஓய்வு  பெற்றவர்களுக்கு  ஞாயிறும் திங்களும் ஒன்றே தான்  என்று  இல்லை.  ஞாயிறு  என்றாலே   மனதுக்குள் தனி  சுகம்.   ஆனால்  எல்லோரும் வீட்டில்  இருக்க நேரிடுவதால் மற்றவர்களின் சுகத்திற்காக  சில  தியாகங்களை செய்தே  ஆக வேண்டிய  கட்டாயம் நேர்வது  உண்டு.  ஜெகந்நாதன்  தனது  சகாப்ததத்தை “age of  sacrifice“ என்று  வகைப் படுத்துவார்.    இதற்கு  ஞாயிறு மட்டும் காரணமில்லை. நடராஜனின் நாய்  வளர்க்கும்  படலம்  போன்ற பல  விஷயங்கள்  இதில்  அடக்கம்.  ஜெகந்நாதன்  சிறிது  சுய  நலமிக்க  தியாகச்  செம்மல்.

சுமார்  3  மணிக்கு  டெலிஃபோன்  ஒலித்தது. 

உங்க  வீட்டு பக்கம்  ஒரு  வேலையாக  வந்தேன். பிஸியாக  இருக்கிறாயா  என்று மறு  முனையில் நடராஜன் வினவினார். அடுத்த  10  நிமிடங்களில் ஜெகந்நாதன்  வீட்டை  அடைந்தார். 

டாமி  , பிரசனை பண்ணாம  வெங்கியோடு போய்டுத்தா

காலைலே வெங்கி  வந்து  காலிங்  பெல்  அடிச்சப்போ கஷ்டமாக இருந்தது.  எப்பவும்  போல காலைக் கடன்களை  டாமி  சமத்தாக  முடித்தது.  புதுசா  இன்னிக்கு  என்னை  அன்பா  நக்கிக்கொடுத்தது.  சாப்பிடத்தான்  வித்யாவை  ரொம்ப படுத்தியது. கீழ் ஆத்து மாமிதான் டாமியை  தடவி கொடுத்து  ஊட்டி விட்டாள்.

வெங்கியை  பார்த்தவுடன்  அவனோடு  ஒட்டிக்கொண்டு, அவனை  நக்க  ஆரம்பித்தது.  மிகவும்  வேண்டியவன் போல அவன்  வந்த மஹேந்திரா லோகன் காரில் அவனது  மடியில்  உரிமையாக  தலை  வைத்து படுத்துக்கொண்டது  காரை  ஓட்டி  வந்த  பாஷ்யம் ஐயங்காரே ரொம்ப  அசந்து  போய்விட்டார்.  கொஞ்ச  தூரம்  கார்  நகந்தவுடனேதான்  எங்களை  நோட்டம் விட்டது.  என்று சொல்லி  நடராஜன்  கொஞ்சம்  உணர்ச்சி வசப்பட்டார்.

விசுவாசத்திற்கே  உதாரணமாக  உள்ள  ஒரு  பிராணி எப்படி தன்னை  இந்த  அளவுக்கு  மாற்றிக்கொண்டது? வெங்கியோட போகப்போகிறோம்  என்ற  விஷயம் டாமிக்கு  முன் கூட்டியே தெரிந்துவிட்டதோ  என்று  ஜெகந்நாதன்  வியந்தார்.  மிருகங்களிடம் பேச வல்ல டாக்டர்  டுலிட்டில்  போன்ற மேதைகள் தான் டாமியின்  இந்த  மர்மமான நடத்தையை  தெளிவாக்கவேண்டும்.  டாமி ரகளை  பன்னாமல்  வெங்கியுடன்  போனது  ஒரு வகையில்  நல்லதுதான் என்று  ஜெகந்நாதன் முடித்தார். 

பிறகு  நடராஜன் வருணிடமிருந்து முதல் நாள் இரவு ஃபோன் வந்த செய்தியைச் சொன்னார்.அதாவது--
 வருண் கேட்டான்”டாமியைக் கொடுத்திடப் போறியா?”

ம்
 “அப்ப இனிமெ  டாமியை  பார்க்கமுடியாதா?

முடியும்.  அப்பப்ப  ஃபேஸ்  புக்கில்  டாமியின்  சேட்டைகளை  அப்லோட் பண்ணுவதாக  வெங்கி  சொல்லியிருக்கான்..  நீ  இந்தியா வரும்போது பம்மல்  பல்லவரத்தில்  இருக்கும் வெங்கியை  விசிட்  பண்ணலாம் 

ஓகே,  ஓகே   நான்  இன்னிக்கி லோக்கல்  கிரிக்கெட்  மேட்ச்சிலே  மூணு  விக்கெட் இரண்டு  காட்ச்    20  ரன்.  எங்க  டீம் தான்  வின்  என்று  பெருமை  அடித்துக்கொண்டான்.

டாமி  வருண்  ஆகியோரின் பிரிவை  எளிதில்  ஏற்றுக்கொள்ளும்  மனப்போக்கு ஜெகந்நாதனைக் குழப்பியது.

அப்பொழுது ஜகன்னாதனின் பேரன்  ஆயுஷ்  நடராஜனிடம்  ஓடிவந்து

வருண்  அண்ணா  என்ன  பண்றான்.  டாமி  எங்கே   இருக்கு  என்று வாடிக்கையாக  அவரைப் பார்த்து கேட்கும் கேள்விகளை  கேட்க நண்பர்கள் சிரிப்பில்  ஆழ்ந்தனர்.

வெங்கி  கெட்டிக்காரன்.  நொடியில்  டாமியை  வசப்படுத்திவிட்டான்.  நன்கு பராமரிப்பான்  என்று  இவர்களும்  நம்பினார்கள்.   ஆனால்  இந்த  நிலை துரதிருஷ்ட  வசமாக 20 நாட்கள்  தான்  தொடர்ந்தது.  வெங்கியைத்தவிர  அவர்கள்  வீட்டில்  உள்ள எவரும் டாமியைப்  பராமரிப்பதில் கவனம்  செலுத்தவில்லை. 

இதனிடையே நடராஜன் தங்கள்  முக்தி  நாத்  பயணத்தை  மயிலையில்  உள்ள நேபாள்  டிராவல்ஸ்  மூலம் புக்  செய்து  இருந்தார்.  

டாமி  சில  சமயங்களில் சோகமாக ஊளை  இடுகிறது.   என்னை  தவிர மற்றவர்களிடம் சாப்பிடமாட்டேன்  என்று  அடம்  பிடிக்கிறது   என்று  வெங்கியின்  ஃபோன் கால்  நடராஜனை  வேதனையில்  ஆழ்த்தியது.    இந்த  கால் நடராஜனும்  வித்யாவும் முக்திநாத்   யாத்திரை  புறப்படுவற்கு 3  நாட்களுக்கு முன்  வந்தது. 

நாயை  வெங்கி வேறு  யாரிடமாவது  கொடுப்பது  பற்றி தனக்கு எந்த கருத்து  வேறு  பாடும்  இல்லை என்ற முடிவை  வெங்கியின்  வேண்டுகோளுக்கிணங்க நடராஜன்  தெரிவித்தார்.  நாம்  டாமியை  வெங்கியிடம்  ஒப்படைத்தாகிவிட்டது  இனி  அவன்  பொறுப்பு  என்ற  முடிவை எடுக்கும்  சூழலுக்கு நடராஜன்  தம்பதியினர் தள்ளப்பட்டனர்.  இன்னும்  15     நாட்கள்  கழித்து வெங்கியுடன்  தொடர்பு  கொள்வதாகக்  கூறி  இணைப்பை  துண்டித்தார். 

அன்று  இரவு  8.30  மணிக்கு டெல்லி  செல்லும்  விமானத்தை  பிடிக்க  அன்று  7.30க்கு  செக்-இன் செய்யவேண்டு.ம்.   5  மணிக்கு  வரவேண்டிய  கால்  டாக்சி அரை மணி  நேரம்  தாமதமாக  வந்தது.  பெருங்குடியிலிருந்து  செல்வதால் துரைபாக்கம்-பல்லாவரம் சாலையை  தேர்வு  செய்து, வண்டி  வேகமாய்  பல்லாவரம்  நோக்கி  பறந்து  கொண்டிருந்தது.

ஓட்டுனர்  பசி  ஆற்றி கொள்ள விரும்பியதால் வண்டியை  பல்லாவரம்  பம்மல்  சாலையில்  நிறுத்திவிட்டு 10 நிமிடங்களில்  திரும்புவதாக அருகில்  இருந்த கையேந்தி பவனத்தை  நோக்கி  நகர்ந்தான். 

தங்களை  ஆசுவாச படுத்திக்கொள்ள கீழே இறங்கிய  நடராஜன்  தம்பதியினர் திடுக்கிடும்  காட்சியை கண்ணுக்கெட்டிய  தூரத்தில்  கண்டு  கலங்கினர்.

லேசான  மஞ்சள்  கலந்த வெண்ணிற லாபரடார்  நாய்  ஒன்று  ஒரு  10  வயது  சிறுவனுடன் குஷியாக குதித்துக்கொண்டு அவன் விளையாட்டாக  எறிந்த பிஸ்கட்டுகளை உயரத்தாவி  கவ்விக்கொண்டு மேற்கு நோக்கி நடக்க இருவரும் சூரியனுடன்  அஸ்தமித்தனர்.

திவ்யா உடனே வெங்கிக்கு ஃபோன் செய்து  விசாரிக்க வேண்டினாள். 

நாம  இப்ப  ஊருக்கு  போயிண்டிருக்கும் போது  அதெல்லாம் வேண்டாம் வந்து   பாத்துக்கலாம்   என்றார்  நடராஜன்.

அது  டாமியாக இருக்கக் கூடாது  என்று  இறைவனை பிரார்த்தித்தார்.    டிரைவர்  வரவே,  டாக்சி  வடக்கு  நோக்கி பறந்தது.

அந்த  நாய்  டாமியாக  இருந்தால்தான் என்ன.   அது  புதிய  எஜமானர்களை எளிதில்  கவர்ந்துவிடுமே!  தன்னைத்தானே  பராமரித்துக்கொள்ளும்   தைரியம்  டாமிக்கு  வந்து  விட்டதோ என்னமோ.  இப்பொழுது  அதை  யாரும்  கட்டிப் போடவில்லை.  வீடுகளை  காவல்காக்க வேண்டிய  அவசியம்  இல்லை.  அசைவம்  கூட  சாப்பிட்டுக்கொள்ளலாம் அதன்  பாலுணர்வு  தாகங்களை தீர்த்துக்கொள்ளக்கூட சந்தர்ப்பங்கள்  கிடைக்கும். கட்டுப்பாடு  இல்லாமல்  ஊர்  சுற்றலாம்

டாமி இந்த சுதந்திரங்களை எல்லாம்  அனுபவித்துவிட்டுதான்  போகட்டுமே!


டிஸ்கி:ரகசியம் சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை. கீதாசார்யன் சொல்கிறான், செய்விப்பவன் அவன், எனவே விளைவுகள் அவனையே சேரும் என்று.இக்கதையைப் படித்து நீங்கள் தெரிவித்த கருத்துகள் எல்லாம் அந்தப் ”பார்த்தசாரதி”யையே சேரும்.வங்கியில் என்னுடன் பணி புரிந்த பார்த்தசாரதி அவர்கள் எழுதிய கதையே இது!



  


20 கருத்துகள்:

  1. நிறைவான முடிவு...

    அப்பாடா ரகசியம் தெரிந்து விட்டது...

    பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்ட தங்களுக்கும்... நன்றி ஐயா..

    Template மாற்றி விட்டீர்களா...? நல்லா இருக்கு... தமிழ்மணம் ஒட்டுப்பட்டை காணாம்...?

    பதிலளிநீக்கு
  2. எதிர்பாராத முடிவுதான். இந்த மாதிரிச் சூழ்நிலைகள் வேதனையானவை. கிட்டத் தட்ட இதே கதையம்சத்தில்/அனுபவத்தில் நாய் மனம் என்று எங்கள் ப்ளாக்கில் சென்ற வருடம் பதிவிட்டிருந்தோம். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. முடித்த விதம் மிக மிக அருமை
    நல்ல கதையை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான முடிவு...
    சூப்பரா எழுதியிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான முடிவு தங்களுக்கும் தங்கள் நண்பருக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. உறவு, பிரிவு, இன்பம் துன்பம், ஜனனம் மரணம் இவைகளின் கோர்வைதானே ஜனனத்தில் தொடங்கி மரணத்தில் முடியும் மண்ணுலக வாழ்க்கையின் சாராம்சம். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உறவை அணைத்து, பிரிவை உணர்ந்து, இன்பத்தில் திளைத்து, துன்பத்தில் மூழ்கி, மரணத்தை அறிந்து செயல் படும் ஞானம் வேண்டும்.

    வாழ்க்கைதந்த பாடங்கள் -தெளிவு ...

    கதையின் நாயகனான நாய் - நாயுள்ளத்தை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியது..

    பதிலளிநீக்கு
  7. கதையின் முடிவு அருமை. எழுதிய நண்பர் திரு பார்த்தசாரதி அவர்களுக்கும் வெளியிட்ட தங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ஆ! கடைசியிலே இதானா? இருந்தாலும் முடிவு ரசம். (அசைவம் கூட சாப்பிட்டுக்கொள்ளலாம்?)

    பதிலளிநீக்கு