இன்று காலை முதல் மிகக் கவலையில் இருந்தேன்.துபாயிலிருந்து வந்திருக்கும் என் மருமகன் மூன்றுநாட்களாகக்
காய்ச்சலில் அவதிப் பட்டு வருகிறார்.இன்று காலை ’லெப்டோஸ்பிராசிஸ்’ நோயா (எலியால் வரும்
நோய்) என்று தெரிந்து கொள்வதற்காக ரத்தப் பரிசோதனை செய்தார்கள். சமீபத்தில் அந்நோயால்
பாதிக்கப்பட்டு, ராமச்சந்திரா மருத்துவ மனையில் இரு வாரம் இருந்து மிக சிரமப்பட்ட ஒருவரைப்
பார்த்தன் காரணமாக எனக்கு மிகவும் கவலையாகி விட்டது.மாலை முடிவு தெரிந்தபின் மருத்துவ
மனையில் சேர்க்க வேண்டுமா எனத் தீர்மானிக்க வேண்டும் என மருத்துவர் சொல்லி விட்டார்.
நல்ல வேளையாகப் பரிசோதனையில் அந்நோய் இல்லை என உறுதியாகி விட்டது.இறைவன் அருள்.
………………
இதன் காரணமாக இன்று நடக்கும் பதிவர்
ஆலோசனைக் கூட்டத்துக்குச் செல்ல இயலவில்லை. ஒரு மாதமாகவே ஏதாவது பிரச்சினை காரணமாக
எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ள இயலவில்லை. செல்ல இயலாமல் இருப்பது என்னை மன உறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறது..கடைசி ஆலோசனைக் கூட்டம் 19ஆம் தேதி நடை பெறலாம்.அதற்காவது செல்ல வேண்டும். இறை அருள் வேண்டும்.
………………………
இன்று என் மருமகனைப் பார்த்து விட்டுத்
தானியில் வரும்போது, ஒருவன் தானி முன் வந்து விழுவதற்கு இருந்தான். நல்ல
வேளையாக ஓட்டுநர் சமாளித்தார்.அவன் ஒரு குடிமகன். இன்று விடுமுறை; குடித்துக்
களிக்கிறார் போலும். அவர் மகிழ்ச்சி குடும்பத்தின் துக்கமாக மாறாமல் இருக்க வேண்டுமே!எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கும் டாஸ்மாக் கடையில், சனியன்று மாலைக்கு மேல் பயங்கரக் கூட்டத்தைப் பார்க்கிறேன் வாரச் சம்பளம் வாங்குபவர்கள் பலர்
தங்கள் பணத்தை இழக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் வழி!
இந்த மது விலக்கு என்பதை மாநில அதிகாரத்திலிருந்து
நீக்கி நடுவண் அரசே நாடு முழுவதும் முழுமது
விலக்குக் கொண்டு வர முடியாதா? (அப்போது மட்டும் நடந்து விடுமா என்ன?)எது நடக்க முடியாதோ அதைத்தானே சிந்திக்கிறது மனம்? இறை
வழிகாட்ட வேண்டும்.
……………..
.
மது அருந்தாமலே பலர் ’மதம்’
பிடித்து அலைகிறார்கள்.
அஸ்ஸாமில் தொடங்கிய கலவரம் ,மும்பாய்,புனே
என்று பரவிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.ஏன் இந்த நிலை என்று மனம் கவலுறுகிறது. இறை அருள் வேண்டும் .
இந்த
நேரத்தில் முன்பு என் மனத்தில் வெடித்துக் கிளம்பி பதியப்பட்ட
கவிதை நினைவுக்கு வருகிறது. முன்பு படிக்காதவர்களுக்காக இதோ---
”பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!
ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
நெற்றி நிறையத் திருநீறு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!
நாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!”
...................
எல்லாமே மனிதன்தான் எனப்படுகிறது.
பதிலளிநீக்குஉங்களுக்கு வரும் சோதனைகள் யாவும் நீங்கிட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குசார் உங்களால் தற்போது முன்பு போல் நடமாட முடிகிறது என்பது மிக மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமருமகன் விரைவில் குணமாகி விடுவார் கவலை வேண்டாம்
அப்படியா ஐயா..செய்தி அறிந்தேன்..வருத்தம் வேண்டாம்.. ஆலோசனை கூட்டம் நன்றாகவே நடந்தது.கிட்டத்தட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடியும் தருவாயில் இருக்கிறது.
பதிலளிநீக்குதீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!
மதம் என்பது தற்போது கலவரத்திற்கு பெரும் காரணியாக அச்சுறுத்தி வருகிறது,கவலையாக உள்ளது. மதத்தை மனிதன் அடக்கவில்லை என்றால், மதம் மனிதனை அடக்கிவிடும்... யாவரும் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....
பதிலளிநீக்குஉங்கள் மருமகன் சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குமதுவாவது விலக்காவது... பகல்கனவு. இவர்களின் இலவசங்களுக்கு அட்சயப் பாத்திரமாக இருக்கும் அதை எப்படிச் செய்வார்கள்?
கவிதை பிரமாதம்.
உங்கள் மருமகன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅமைதி அமைதி அமைதி வேண்டுவது அதுவே.
பதிலளிநீக்குநேற்றைய சந்திப்பில் தங்களால் பங்கு கொள்ளாமை குறித்து அறிந்து கொண்டேன்.... பதிவர் சந்திப்பில் நீங்கள் உற்சாகமா கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த எங்கும் நிறைந்தவனிடம் வேண்டுகிறேன் சார்
பதிலளிநீக்குமனம் அமைதி அடைய வேண்டுகிறேன்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவேங்கடவன் அருளால், தங்கள் மருமகன் பூரண சுகம் அடைவார்
கவலை வேண்டாம் .கவிதை அருமை!
ஐயா காலில் அடிபட்டதிலிருந்து ஒரே பிரச்சனையாகத்தன் இருக்கிறது போல.... பின்னர் கிடைக்கவிருக்கும் ஒரு நலவுக்காகத்தான் இவையெல்லாம் நடக்கிறது போல...பொறுமை கொள்ளுங்கள் ஐயா எல்லாம் நல்லபடி நடக்கும்
பதிலளிநீக்குகவிதை கலவரம்.....(த.ம11)
பிரிவினையின் உஷ்ணத்தில்குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள் இல்லாமல் போகட்டும்.!!
பதிலளிநீக்கு