தொடரும் தோழர்கள்

புதன், மே 03, 2017

மாடு மேய்க்கும் கண்ணே........

”நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு” ஆசிரியர்கள் நன்கு படிக்காத மாணவர்களைப் பார்த்து இவ்வாறு சொல்வார்களாம்.

என் சென்ற பதிவின் இறுதியில் சொல்லியிருந்தேன்”ஆசை இருக்கு தாசில் பண்ண,அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்று.

மாடு மேய்ப்பது மட்டும் அவ்வளவு எளிதா என்ன?ஒரு மாடு என்றால் சரி.இரு மாடுகள் என்றாலே இரண்டும் எதிரெதிர் திசையில் போனால் மேய்ப்பது கடினம்தான்.,பல மாடுகள் என்றால்?ஆடுகளாவது,ஒரு ஆடு செல்லும் திசையிலேயே மற்றவை செல்லும்.”சாஞ்சா சாயிற பக்கமே சாயிற செம்மறியாடுகளா” என்று ஒரு படப் பாடல் உண்டு.மூளையற்று ஒருவர் செல்லும் வழியிலேயே சிந்திக்காமல் செல்லும்   மனிதர்களை செம்மறியாட்டுக் கூட்டம் என்று     சொல்வதுண்டு.மாடுகள் அப்படி அல்லவே.

இறைவனே ஓர் ஆயன்தான்.ஆயர்கள் வாழ்ந்த இடமாதலால் அது ஆயர் பாடியாயிற்று.பசுக்களை மேய்த்துப் பாதுகாத்ததால் கண்ணன் கோபாலன் ஆனான்.ஆனால் அவனுக்கு மேய்ப்பது எளிது.குழல் எடுத்துஒரு கீதம் இசைத்தால் பசுக்கள் எங்கிருந்தாலும் ஓடி வந்து சேர்ந்து விடும்.

மாடுகள் ஒரு செல்வம்.மாடு  என்றாலே செல்வம் என்றும் பொருள் படும்.
“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
 மாடல்ல மற்றயவை.”
 என்பார்  வள்ளுவர்.

அக்காலத்தில் மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்.எதிரி தேசத்தின் பசுக்களைக் கவர்வார்களாம்.இது “ஆநிரை கவர்தல்” என்று அழைக்கப் பட்டது.   

இங்கு மேய்ப்பவன் பற்றிப் பேசியதால் என் பழைய கவிதை ஒன்று இங்கு பொருந்தும் என எண்ணி அதைக் கீழே தருகிறேன்.


ஆடுகள்!

மந்தை மந்தையாய்

ஒன்றோடொன்று நெருக்கியடித்து

ஒன்று போல் சென்றாலும்

எல்லாம் ஒன்றல்ல!

குறும்புக்கார ஆடுகள்

வேலி தாண்டிச் சென்று

மேயத் துடிப்பவை

முட்டி விரட்டுபவை

முன்கோபம் கொண்டவை

சாதுவாய்ச் செல்பவை

சண்டைக்கு நிற்பவை

ஆடுகள் பலவிதம்

எல்லாவற்றையும்

மேய்ப்பன் அறிவான்

அவை அவன் சொல்வதைக்

கேட்பினும்,கேளாதிருப்பினும்

 அவனை நம்பினும்,நம்பாவிடினும்

அவை பத்திரமாயிருக்கும்

மேய்ப்பன் இருக்கிறான்

ஏனெனில்

காப்ப்பது அவன் தொழில்

ஆடுகள் மட்டுமல்ல

மாடுகளும்தான்

இடையனின் குரலுக்கும்

குழலுக்கும் மயங்குபவை

அவன் பார்வையில்

பயமற்றுத் திரிபவை

காப்பவர்

எவராயினும்
காப்பது அவர்  தொழில்

எனவே ஆடுகளும் மாடுகளும்

பாதுகாப்பாய்,பயமற்று!



தலைப்பில் சொல்லப்பட்ட மாடு மேய்க்கும் கண்ணே என்ற பாடல் ஒரு பிரபல பாடகி எப்போதும் பாடிக் கைதட்டல் அள்ளும் பாடல்.”மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்” என்று  பாடுவார்.யசோதா,கண்ணனைப் பார்த்துச் சொல்வதுபோல்அமைந்தது.

பாடல் வரி”மாடு மேய்க்கக் கண்ணே நீ போக வேண்டாம்” என்று இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது ஒரு கோலன்றிக் குழல் இல்லை.



                                                  

17 கருத்துகள்:

  1. அருமை ஐயா பல விடயங்களை கொண்டு வந்து முடிச்சு போட்ட விதம் அழகு

    பதிலளிநீக்கு
  2. அனைத்தையும் ஒரு சேரக் கோர்த்தது சிறப்பு.

    அருணா சாய்ராம் பாடல்களில் எனக்கும் இந்தப் பாட்டு பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநேகமாக அனைவருக்கும் பிடித்த ஜனரஞ்சகமான பாடல் அது.
      நன்றி வெங்கட்

      நீக்கு
    2. அநேகமாக அனைவருக்கும் பிடித்த ஜனரஞ்சகமான பாடல் அது.
      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. இனி யாராவது மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லி பார்க்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. அனைத்தையும் ஒருசேர ஒருங்கிணைத்து அழகாகக் கொடுத்துள்ளீர்கள். பிரபல பாடகியின் பாடல் அநேகமாக அனைவருக்குமே பிடித்தது மட்டுமே. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. அந்தப் பிரபல பாடகி அருணா சாய்ராம்!

    பதிவு ரசனை. கவிதை அருமை.

    ""... உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன...." என்கிற ஞான ஒளி பாடல் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் ஸ்ரீராம் அருணா சாய்ராம்....நான் சொல்ல வந்தேன் கீழே போகும் போது கண்ணில் பட்டுவிட்டது...நீங்கள் சொல்லியாச்சு எனவே நான் இல்லை...

      கீதா

      நீக்கு
  6. தங்கள் பதிவைப் படித்ததும் ‘கை எங்கே காக்கை கொண்டு போனது’ என்ற தொடர் கேள்விகள் நினைவுக்கு வருகின்றன. பல தகவல்களை தொடர்ச்சி விட்டுப்போகாமல் சுவைபட இணைத்து ஒரே பதிவாகத் தர தங்களால் தான் முடியும். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  7. நானே நல்ல மேய்ப்பன் என்ற வாசகம் நினைவுக்கு வருதே :)

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை சார்...ஆடு மேய்க்கும் கண்ணனும் தான்

    பதிலளிநீக்கு